புதன், 24 ஆகஸ்ட், 2016

Heart Disease Part 2 - இருதய நோய்கள் பாகம் 2

முந்தைய பதிவில் இருதயம் மற்றும் இருதயத்தை தாக்கக்கூடிய நோய்கள் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் இருதய நோய் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுக்கும் இயற்கை உணவு முறைகள் பற்றி பகிர்கிறேன் 

இருதய நோயின் அறிகுறிகள் என்னென்ன?

இருதய நோயின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளும் அறிகுறிகளும், 
  • நடக்கும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும்பொழுது, சுறுசுறுப்பாக அல்லது இயல்பாக அல்லது ஓய்வாக படுத்து இருக்கும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறல்/மேல்மூச்சு வாங்குதல். 
  • பசியின்மை.
  • இரவில் தூக்கமின்மை. 
  • திடீரென்று ஏற்படும் மூச்சுத் திணறல் அசதி அல்லது நகரக்கூட முடியாத அளவிற்கு சோர்வு, கால்கள் பலமின்மை, பாதம் அல்லது கணுக்கால் ஆகிய பகுதிகளில் வீக்கம்.
  • அடிவயிற்றில் வீக்கம்.
  • ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்.
  • திடிரென உடல் எடை கூடுதல்.
  • தொடர்ந்த இருமல் அல்லது இளைப்பு. 
  • குமட்டல். 
உடல் வலி, இடது தோள்பட்டை, கை, முதுகு, மார்பு பகுதிகளில் ஏற்படும் வலி எதையும் அலட்சியப்படுத்தகூடாது. 

சாதாரண தசை, நரம்பு, எலும்பில் இருந்து வரும் வலியாக இருந்தால் அதை பொறுத்து மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை நோய் அதிகமாகும்போது, 
  • கால்களில் வலி, மரத்துப் போதல் மற்றும் வீக்கம் ஏற்படும், கைகளிலும் வலி நெஞ்சு வலி, கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு வலி போன்றவை ஏற்படக்கூடும்.

வெறும் கால்வலி, தொடை வலி போன்றவை சிறிது ஓய்வுக்குப் பின் சரியாகி விடும்.
நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வயதானவர்களுக்கு இருதயம் தடிப்பாகவும் கால்ஷியம் படிவம் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுவது இயல்பு.

மாரடைப்பு அல்லது நெஞ்சு வலி உறுதி செய்வது எப்படி?

இருதய நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளியின் உதடு மற்றும் நகங்களில் நீல நிற தோன்றினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாயிருக்கும், மேலும் உடல் குளிர்ந்தோ, சூடாகவோ இருக்கும், கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தால் அந்த இடத்தில் சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் கூட இருக்கலாம், நாடித்துடிப்பு மூலமாகவும் அறியலாம்.

ஸ்டெதஸ்கோப்பின் மூலம் இதயத்தின் துடிப்பு மற்றும் ரிதம் வைத்து எந்த வகையான இருதய நோய் கண்டறிய முடியும், இருதய துடிப்பு, வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக தடைப்பட்டு கேட்கிறதா, இடைவெளி சரியாக இருக்கிறதா என்பதை வைத்து நோய் இருதயத்தின் எந்த பகுதியில் உள்ளது, அதாவது இருதயத் தசைகளிலா அல்லது இரத்த குழாய்களிலா என்பதை கூறமுடியும்.
பொதுவாக இருதயத்திற்கு செல்லும் இரத்தம் சப்தமில்லாமல் இருக்கும், ஆனால் இரைச்சல் சப்தம் கேட்டால் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இரத்தம் இருதயத்திற்கு செல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம், இருதய ஒலியும் முறையற்று இருக்கும், அந்த சமயத்தில் வலி இருந்தால் கொழுப்பு  அடைப்பட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்த பிறகு இருதய நோயை உறுதிப்படுத்துவார்.

இருதய நோய்க்கு அடிப்படைக் காரணங்கள்
  • புகைப்பழக்கம்.
  • உயர் ரத்த அழுத்தம்.
  • சர்க்கரை நோய்.
  • இரத்தத்தில் கொழுப்பு மிகுதல்.
  • உடற்பருமன்.
  • மதுப்பழக்கம்
  • உடற்பயிற்சியின்மை.
  • சோம்பல் தனமான வாழ்க்கை முறை.
  • பரம்பரை.
  • பிறவிக் குறைபாடு (Congenital Heart Disease). 
  • இரத்த நாள உட் சுவர்களில் கொழுப்புத் திவலைகள் பெருமளவில் படிதல்.
  • முதுமை.
  • நோய்க் கிருமித் தாக்குதல்.
  • மன அழுத்தம், மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கை ஆகியவை மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்.
இருதயத்தை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் 

இருதயத்தை காக்க நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும் மாரடைப்பு வாய்ப்பை 95 சதவீதம் குறைத்து விடலாம்.

இரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்

மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம் இரத்த அழுத்தம் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம்.

கொழுப்பு கவனம்

வருடத்துக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் இருதய குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பை ஏற்படுத்தும்.

உடல் எடையைக் கண்காணியுங்கள்

உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இருதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் அதனால் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது உடல் எடை சரியாக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் தருவது பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (Body Mass Index. சுருக்கமாக BMI.) இதன்படி அவரவர் வயதுக்கு தகுந்த உடல் எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலமே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இன்மை ஆகியவை இருதய நோய் ஏற்பட காரணமாக அமையும் அதனால் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டியது நமது கடமை நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற விருப்பத்திற்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவை எதுவும் முடியாதவர்கள், வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்பதைக் கடைப்பிடியுங்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுவதுடன் பலம் பெறுகிறது. உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

புகை பிடிக்காதீர்கள்

புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவது நல்லது, புகையிலையில் உள்ள நிகோடின் இரத்தக்குழாய்களைச் சுருக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.  புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே இருதய நோய் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்திலிருந்து ஒருவர் மீண்டுவர ஆரம்பித்துவிடுவார் எவ்வளவு வருடங்கள் புகை படித்தார் என்பது முக்கியமில்லை பழக்கத்தை விட ஆரம்பித்த உடன் இருதய ஆரோக்கியம் ஆரம்பித்துவிடும்.

மது அருந்தாதீர்கள் 

மதுப் பழக்கம் அறவே கூடாது. மது அருந்தும் போது போது குடும்பத்தை நினைத்துப் பார்க்கவும்.

உறக்கம் முக்கியம்

போதுமான உறக்கமின்மையால் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து இருதயம் பாதிப்படைகிறது, அதனால் தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள்.

மன அமைதி தேவை

மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கியக் காரணமாகிறது, மன அழுத்தம் குறைய, மருந்து மாத்திரைகளை விட தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று பின்பற்றுவது மிகவும் நல்லது.

உணவுப் பழக்கத்தில் மாற்றம்

இருதய நோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மூல காரணம் தவறான உணவுப் பழக்கமே, உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தல் இருதய நோய் வராமல் தடுக்கலாம்.

உணவுப் பழக்கத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 
  • அனைத்து எண்ணெயில் தயாரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • பேக்கரி பண்டங்கள் உண்பது தவறு.
  • பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்ட உணவு வகைகள் உண்ணக்கூடாது.
  • பனை எண்ணெய்ப் பொருட்களில் செய்யப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும். 
  • அதிக இனிப்பு, புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.
  • முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
  • சமையலில் தேங்காய் மற்றும் முந்திரிப் பருப்பை ஓரங்கட்டுங்கள்.
உணவுப் பழக்கத்தில் சேர்க்க வேண்டிய உணவுகள்

இருதய நலனைச் சிறப்பாகப் பாதுகாக்க கொழுப்புச்சத்து மற்றும் உப்பு குறைந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் குறையும் இருதயத்திற்கும் பாதுகாப்பான உணவாக அமையும்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்புச் சத்து குறைந்த பால் பொருட்கள், அவரை வகை காய்கள், குறைந்த கொழுப்பும் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் ஆகியவற்றை உணவாகக் உட்கொள்ளலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு உள்ளது அதனால் மீன் வகைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தையும் சமன்படுத்துகிறது. சைவ உணவு வகைகளில் வால்நட், சோயாபீன்ஸ், கனோலா எண்ணெய் வகைகளிலும் இவ்வமிலச்சத்து உள்ளது.

ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, சமைத்த காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகள் உப்பு மிக மிகக் குறைத்து எண்ணெய் அறவே இல்லாது சமைத்தது அரை வயிறுக்கு உண்ணலாம்.

காபி, டீ மற்றும் செயற்கை குளிர் பானங்களைத் தவிர்த்து, இளநீர், தேங்காய் தண்ணீர், வெந்நீர், தேன் கலந்த தண்ணீர், நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகள் ஆன இயற்கை பானங்களை அருந்த வேண்டும்.

காபி மற்றும் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம்,  கிரீன் டீயில் கலோரி கம்மியாக இருப்பதால் இருதயத்திற்கு இதம் தரும்.

அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சியை அளவோடு வேக வைத்து குழம்பாக்கிச் சாப்பிடலாம், எண்ணெயில் பொரித்ததை சாப்பிடக்கூடாது.

இருதயம் பலம் பெற நெல்லிக்காய் ஒன்றை தினம் சாப்பிட்டுவிட்டு ஒரு தேக்கரண்டி அளவு தேனையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெரும், நல்ல புதிய இரத்தம் உண்டாகும்.

இருதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் முக்கியமானது பீன்ஸ்

பீன்ஸை குழம்பில் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம், பீன்ஸ் இரும்பு, கால்சியம், மக்னீசீயம், மாங்கனீசு, மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.
இருதய படபடப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை பாதுகாத்துக் கொள்ளும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் பீன்ஸை பொரியலை செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும். மேலும் ரத்தகுழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோயிலிருந்து உடலை பாதுகாக்கும்.

மேலும் பீன்சை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நீரழிவால் அவதிப்படுவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இதனால் இருதய நோயிலிருந்து தப்பிக்கலாம்.

செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்

செம்பருத்திப் பூ 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருதிப்பூவின் சிறப்பு அம்சம் இருதய நோய்க்கு அருமையான மருந்து, காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால் இருதயம் பலப்படுவதோடு நோயின் தாக்கம் இருந்தால் குணமடையும். இருதய நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, மற்றும் அடைப்பு போன்ற அனைத்து பிரச்னைகளையும் செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.

ஆறு செம்பருத்திப்பூ பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும், இந்த சாற்றில் 6 டீஸ்பூன் அளவு தினம் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இருதய நோய்க்கு கை மேல் பலன் கிடைக்கும்.

செம்பருத்திப்பூ சர்பத்

செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். செம்பருத்திப்பூ 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும், பாதியாக வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக மசித்து வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும், இத்துடன் 300 கிராம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கி பாகு பதம் வரும் வரை காய்ச்சி இறக்கவும், சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும், தேவைப்படும் போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கலாம்.

செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணையச்சூடு, உடல் உள்சூடு தணியும், கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், அதிக தாகம் தணியும், களைப்பு நீங்கும், உடல் சூடு சமநிலைக்கு வரும்.

வெங்காயம்

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும், இருதயப் பையின் சுவர் தசைகளுக்கு இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும் இந்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டால் நெஞ்சு வலிக்கும், உடனே வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் நெஞ்சுவலி குணமாகும்.  

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல் குறையவும் இதயம் சீராக  துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் சக்தி இருப்பதோடு கொழுப்பை கரைக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் வெங்காயத்திற்கு இருக்கிறது. பச்சை வெங்காயத்தை தினம் மதிய உணவில் சேர்த்துக் கொள்வதால் இருதயத்தில் உள்ள அடைப்புகள் கரையும். 

இருதயத்தை பாதுகாக்க உதவும் சில இயற்கை மருத்துவக் குறிப்புகளை அடுத்த பதிவில் [இருதயம் பாகம் 3]  பதிவிடுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக