தலைவலி !!!
தலைக்குள் இடி இடித்தால் !! வலியும் வாழ்வும்....!!
‘தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று ஒருவரை சித்தாந்தம் பேச வைக்கும்அளவுக்கு தலைவலியின் அனுபவம் பயங்கரமானது. இலங்கையில் என்ன காரணத்தாலோ ‘மண்டையிடி’ என்று தலைவலிக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தலைவலிக்காரர்களுக்கு சங்கம் கூட உண்டு.
ஆன்மிக பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் போல் தலைவலிக்காகவே தனிப் பத்திரிகைகளும் வருகின்றன. தலைவலி பற்றி தேடினால் பிரத்யேக இணையதளங்கள் கூகுளில் வரிசை கட்டுகின்றன. இத்தனைக்கும் காரணம், தலைவலியின் கொடுமையான வில்லத்தனம்தான்!
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் தினேஷ் நாயக்கிடம் இதுபற்றிக் கேட்டபோது தலைவலியின் பல வகைகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் விளக்கினார். ‘‘சாதாரண தலைவலி முதல் ஆபத்தான தலைவலி வரை பல வகைகள் உண்டு.
இவற்றை முதல்நிலைத் தலைவலி, இரண்டாம் நிலைத் தலைவலி என்று இரண்டாகப் பிரித்துவிடுவோம். பொதுவாக நம்மில் பலருக்கும் வருவது முதல் நிலைத் தலைவலிதான். மன அழுத்தம், போதுமான தூக்கம் இன்மை, வெயில், சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிதான் அதிகம்.
இவை முதல்நிலையைச் சேர்ந்தவை. இந்தத் தலைவலிகள் தொந்தரவு தருமே தவிர, வேறு பிரச்னைகள் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவலிகள்தான் மிகவும் ஆபத்தானவை’’ என்று இடைவெளி விடுகிறார்.‘‘இந்த முதல்நிலைத் தலை வலியில் வழக்கமாக வரும் டென்ஷன் தலைவலியுடன், சைனஸ் அறைகளில் அடைப்பு ஏற்படுவதால் வரும் சைனஸ் தலைவலி, மைக்ரேன் தலைவலி, க்ளஸ்டர் ஆகிய 3 தலைவலிகள் நம்மை அதிகம் பாதிப்பவை.
இதில் டென்ஷன் தலைவலி வருவதற்கு அதிகம் யோசிப்பது, மன அழுத்தம், வேலைப்பளு, பதற்றம் போன்ற வாழ்க்கைமுறை குளறுபடிகள்தான் காரணம். 70 சதவிகிதம் பேருக்கு வந்துவிட்டுச் செல்வது இந்த டென்ஷன் தலைவலிதான். யோகா, தியானம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டாலே இந்தத் தலைவலி நம்மை அண்டாது.
இதற்கு அடுத்து மைக்ரேன் தலைவலி அதிகம் பாதிக்கிறது. தலையின் ஒரு பக்கமாக வலி ஏற்படுவதால் ‘ஒற்றைத் தலைவலி’ என்றும் பெயர் உண்டு. ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் ஏற்றுக் கொள்ளாதது, குளித்துவிட்டுக் கூந்தலை உலர்த்தாமல் இருப்பது, அதிக வெயில், உரிய நேரத்தில் சாப்பிடாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்தத் தலைவலி தூண்டப் படும். பெண்களுக்கே மைக்ரேன் தலைவலி அதிகம் வரும் என்பதால் ‘பெண்களின் தலைவலி’ என்றும் பெயர் உண்டு.
மைக்ரேன் தலைவலி பெண்களுக்கு மட்டும் வருவதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. குறிப்பிட்ட சூழல் தலைவலியை தூண்டுவதை கவனித்து, அந்தக் காரணங்களை தவிர்த்தாலே இதிலிருந்து தப்பிக்கலாம். க்ளஸ்டர் தலைவலி அதிகமாக ஆண்களையே பாதிக்கும் என்பதால், ‘ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டுப் போகும்.
ஒரு மணி நேரம் என்றால் அந்த ஒருமணி நேரமும் பாடாகப்படுத்திவிடும். இந்தத் தலைவலி வந்தால் கண்களுக்குப் பின்னால் தாங்க முடியாத வலி ஏற்படும்... கண்ணீர் வரும்... கண் சிவக்கும்...
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். ஆனால், மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் வரும். மது, புகைப்பழக்கம், பருமன் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு ஏற்படும் தலைவலி என்பதால் தீய பழக்கங்களுக்குத் தடா போட்டாலே இதிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.
இதில் இரண்டாம் நிலைத் தலைவலிகள் ஏற்படுவதற்கு ரத்த அழுத்தம் அதிகமாவது, கண் தொடர்பான குறைபாடுகள், மூளைக்காய்ச்சல், மூளையில் கட்டி, ரத்தக்குழாய் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற சீரியஸான பிரச்னைகள் காரணங்களாக இருக்கலாம். இந்த இரண்டாம் நிலைத் தலைவலியிலும் நிறைய வகைகள் உள்ளன. tலீuஸீபீமீக்ஷீநீறீணீஜீ லீமீணீபீணீநீலீமீ ஏற்பட்டால் தலைக்குள் இடி இடிப்பது போல, மிக அதிகமான வலி உண்டாகும்.
மூளையில் ரத்தக் குழாய் வெடிக்கும்போது இது போல் அதீத வலி ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக கை, கால் செயலிழப்பதும் நடக்கும். இப்படி திடீர் என்று அதீத தலைவலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். இப்போது லேஸர் தொழில்நுட்பம் வந்துவிட்டதால் இதயத்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது போல, வலி இல்லாமலேயே இந்த ரத்தக் குழாயின் வீக்கத்தை சரி செய்துவிடுவார்கள்.
சிலருக்கு தூக்கத்தில் திடீர் என தலைவலி ஏற்படும். தலைவலியுடன் தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். நீண்ட நாட்களாக இப்படி தலைவலியால் தூக்கம் கலைந்து அவதிப்படுகிறவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு களால் சிலருக்கு தலைவலி வரலாம். இதன் தொடர்ச்சியாக வலிப்பு, கை, கால்கள் செயலிழப்பது, பதற்றம் போன்றவையும் ஏற்படும். மதுவுக்கு அடிமையான ஆண்களுக்கும், பிரசவத்துக்குப் பிறகு 2 அல்லது 3 நாட்களில் பெண்களுக்கும் இந்தத்தலைவலி ஏற்படலாம்.
தலைவலியுடன் காய்ச்சலும் சேர்ந்து வருவதற்கு Meningitis என்ற மூளைக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம். நடுத்தர வயதினரில், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் Temporal arteritis என்ற ரத்தக்குழாயில் ஏற்படும் கோளாறால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். இந்தக் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை செய்யும்போது ஈ.எஸ்.ஆர். என்ற முடிவின் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள்.
இந்தத் தலைவலிகளில் நமக்கு ஏற்படு வது சாதாரண முதல்நிலைத் தலை வலியா, ஆபத்தான இரண்டாம் நிலைத் தலைவலியா என்பதை ஒரு மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும். அடிக்கடி தலைவலி வருகிறவர்கள், அதீத தலை வலியால் அவதிப்படுகிறவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.
இரண்டாம் நிலைத் தலைவலியாக இருக்கலாம் என்று மருத்துவர் சந்தேகிக்கும் பட்சத்தில் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் மூலம் அது எந்தத் தலைவலி என்பதை உறுதிப்படுத்திவிடுவார். அதனால், நாமே ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டோ, சுய மருத்துவம் செய்து கொண்டோ அலட்சியப்படுத்துவது நல்லதல்ல!’’ என்று எச்சரிக்கிறார் தினேஷ் நாயக்.
‘பெண்களின் தலைவலி’‘‘மைக்ரேன் தலைவலிக்கு என்றும் க்ளஸ்டர் தலைவலிக்கு ‘ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்...’’
தலைவலியால் தூக்கம் கலைந்து ‘‘நீண்ட நாட்களாக அவதிப்படுகிறவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு...’’
குங்குமம் டாக்டர் 14 Nov 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக