செவ்வாய், 29 செப்டம்பர், 2020

Back Pain - முதுகு vali

30 வயதிலேயே முதுகுவலி !!! ஆரோக்கிய அச்சுறுத்தல் !!!

புகைப்பிடிப்பவர்களுக்கு ஜவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகுவலி வரும். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தை இழந்து 30 வயதுக்குள்ளேயே மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எக்கச்சக்கம். இந்த ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கம்ப்யூட்டருக்கு முன்னால் நாள் முழுக்க தவம் கிடக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.

முதுகுவலிக்கு உண்மையான காரணம் என்ன?
முழுமையான நிவாரணம் என்ன?

எலும்பு மற்றும் முடநீக்கு இயல் நிபுணர் சு.ரமேஷ் பாபு இது குறித்து விரிவாகப் பேசுகிறார்...., கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி, வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக முதுகைப் பிரிக்கலாம். இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன.
இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும்முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.

கழுத்து வலி ஏன் வருகிறது?

கழுத்துப் பகுதியில் மொத்தம் 7 எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளின் இருபுறமும் ஜவ்வுகளும் சின்னச் சின்ன இணைப்புகளும் இருக்கின்றன. இதில், உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதுதான் ஜவ்வுகளின் வேலை. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஜவ்வில் அழுத்தம் ஏற்பட்டு கழுத்து வலி வரலாம். ஜவ்வில் அழுத்தம் அதிகமாவதால் ஜவ்வு விலகி அருகில் இருக்கும் நரம்புகளைத் தொடும். இதனால் கைகளிலும் வலி ஏற்பட்டு மரத்துப் போவது, பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு கைகளில் தோன்றும்.

தவிர்ப்பது எப்படி?

படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலையணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என பிரத்யேகமாக பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

அடிமுதுகுப் பகுதியில் வரும் வலி ஏன்?

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் ஜவ்வு தேய்மானம் அடைந்து இடம் மாறும். ஜவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும்.
இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.
எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீனமடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஜவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
  • நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதியிலேயே அமர வேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழுதடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.
  • இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. காரணம், காற்றின் திசையை எதிர்த்து, வேகமாக செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குகிற சக்தி உடலுக்கு இருக்காது. வாகனத்தில் இருக்கும் ஷாக் அப்ஸார்பரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சக்கரத்தில் காற்று அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது.
  • குனிந்து அதிகமான எடைகளைத் தூக்கக் கூடாது. கனமான பொருட்களைத் தூக்கும்போது உடலில் அணைத்தவாறு தூக்க வேண்டும். குளிக்கும்போது வாளியை உயரமான இடத்தில் வைத்துக் குளிக்க வேண்டும். ரொம்பவும் குனிந்து நிமிர்ந்து முதுகுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் நாற்காலிகளில் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நல்ல நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • கணிப்பொறி திரையின் உயரம் நம் கண் பார்வை மட்டத்தின் உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். மேலே நிமிர்ந்து பார்ப்பது மாதிரியோ, கீழே குனிந்து பார்க்கிற மாதிரியோ கணிப்பொறித் திரை இருக்கக் கூடாது. அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்கு மேல் கணிப்பொறி முன் உட்காரக் கூடாது.
  • தூங்கி எழும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழுந்திருக்க வேண்டும். மல்லாந்து படுத்திருந்து விட்டு, அப்படியே நேராக எழுந்திருக்கக் கூடாது, இடதுபக்கமாகவோ வலதுபக்கமாகவோ திரும்பி எழுந்திருக்க வேண்டும்.
  • தரையில் தூங்குவதில் பிரச்னையில்லை. மெத்தையாக இருந்தால் நல்ல பஞ்சு மெத்தையாகப் பயன்படுத்துவது அவசியம். பழைய மெத்தைகள் இறுகிப்போய்விட்டால் அதைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் பின்புறம் சாய்ந்து கொண்டு நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
முதுகுவலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

உடனே மருத்துவரை அணுக வேண்டும். வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!
நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக புற்றுநோய்கூட வரலாம்.

உணவுக்கட்டுப்பாடு உண்டா?

ஒரு நாளைக்கு 1,000 மில்லி கிராம் கால்சியம் நம் உடலுக்குத் தேவை. வைட்டமின் 400 முதல் 600 இன்டர்நேஷனல் யூனிட் தேவை. பால், சோயா, பசலைக் கீரை, வெந்தயம், எள், கேழ்வரகு, பருப்பு வகைகளில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. அசைவத்தில் நண்டு வகைகளில் கால்சியம் இருக்கிறது.
முட்டையின் மஞ்சள் கரு, சீஸ் வகைகளில் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது. ஆனால், இந்த மஞ்சள் கருவிலும், சீஸ் வகைகளிலும் கொலஸ்ட்ரால் ஆபத்து இருப்பதால் மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்வதே சிறந்தது. இயற்கையாக, வெயிலில் இருந்து பெற்றுக் கொள்வது இன்னும் சிறந்தது.’’ இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக் கூடாது. காரணம், காற்றின் திசையை எதிர்த்து, வேகமாக செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குகிற சக்தி உடலுக்கு இருக்காது.
KD 22 Sep 2014

சனி, 26 செப்டம்பர், 2020

Winter Foods - மழைக்கால உணவுகள்

மழைக்கால உணவுகள் !!!

மழைக்காலம் தொடங்கி விட்டது. திடீர், திடீரென்று வானிலை மாறுகிறது. நன்கு வெயிலடிக்கிறது. சிறிது நேரத்தில் கொட்டுகிறது மழை. பருவநிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோன்ற சூழல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.

காலை முதல் இரவு வரை சாப்பிடக்கூடிய, அருந்தக்கூடிய அனைத்துமே சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். காலையில், காபிக்குப் பதிலாக இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த தேநீர் அருந்துவது நல்லது. தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. மேலும் குடிக்கும், குளிக்கும் நீர் மிதமான சூடாக இருந்தால் நல்லது. சளித்தொந்தரவுகள் இருந்தால் நொச்சி அல்லது யூகலிப்டஸ் இலையைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிப்பது நலம்.
துளசி, தூதுவளை, ஓமவல்லி, இஞ்சி, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது உப்பு சேர்த்துக் குடித்து வரலாம். இதை காலை, மாலை வேளைகளில் அருந்தலாம். காலை உணவாக மிளகுப் பொங்கல் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு இணை உணவாக தூதுவளைச் சட்னி, இஞ்சித் துவையல் சேர்த்துக்கொள்ளுங்கள். முற்பகல் வேளையில் தூதுவளை சூப், கண்டதிப்பிலி சூப் அருந்துங்கள்.

முசுமுசுக்கையை துவையலாகவோ, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை போன்றவை சரியாகும். ஜலதோஷம் பிடிப்பதுபோல் இருந்தால் மணத்தக்காளிக் கீரையின் சூப் அருந்தினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இந்த சூப் சூடு பொறுக்கக் குடிக்க வேண்டியது அவசியம்.

மழைக்காலங்களில் பால் மற்றும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இனிப்பையும் குறைக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம், சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மதிய உணவு சூடாக இருந்தால் மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை குறைத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, மீன், முட்டை, இறைச்சி சாப்பிடலாம். நெஞ்சுச்சளி இருப்பவர்கள் நண்டுக் குழம்பு சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலத்தில் சிலருக்கு சருமம் வறண்டுபோகும். அத்தகைய பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, தேன் போன்றவற்றை சாப்பிடுவது பலனளிக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு ஒத்துக்கொள்ளாதவர்கள் தவிர்த்துவிட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி சத்துகள் அதிகம் உள்ள பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கீரைகள், காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக்கொள்ளலாம். கீரை, காய்கறி சூப் அருந்துவது நல்லது. மற்றபடி மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மாலைச் சிற்றுண்டியின்போது போண்டா, பஜ்ஜி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் ஓமவல்லி பஜ்ஜி, கல்யாணமுருங்கை வடை போன்றவற்றை செய்து சாப்பிடலாம். சளித்தொல்லையின்போது இரண்டு, மூன்று ஓமவல்லி இலைகளை மென்று தின்று சூடான நீர் அருந்தினால் பலன் கிடைக்கும். ஓமவல்லி இலையைக் கழுவி 2 மி.லி சாறு எடுத்து அதனுடன் 8 மி.லி தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச் சளி கட்டுக்குள் வரும்.

முள் முருங்கை என்று சொல்லப்படும் கல்யாண முருங்கை அடை அல்லது வடை செய்து சாப்பிடுவதும் சளியை அகற்றும். ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அடையாகவோ, வடையாகவோ செய்து சாப்பிடலாம். உளுந்த வடை அல்லத் கடலைப்பருப்பு வடையுடன் சேர்த்தும் செய்யலாம். எண்ணெய் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
மாலை நேரங்களில் சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்த்துப் பொடித்துக் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சுக்குக் காபி குடித்து வருவது நல்லது.. மழைக் காலங்களில் ஏற்படும் செரிமானக் கோளாறு மற்றும் சளித்தொல்லைகள் விலகும். கொள்ளு சூப், வெற்றிலை பஜ்ஜி போன்றவையும் இந்தச் சூழலுக்கு இதம் சேர்க்கும்.

மூக்கடைப்பு, சளித்தொல்லை இருந்தால் இரவில் உறக்கம் வராது. ஆகவே இரவு உணவை முடித்தபிறகு பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும். தோலுரித்த வெள்ளைப் பூண்டுடன் பால், தண்ணீர் சேர்த்து வேக வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கல்கண்டு சேர்த்து கடைந்து குடித்தால் சளித்தொல்லை விலகும். இரவில் நிம்மதியான உறக்கம் வரும்.

இருமல் இருந்தால் தக்காளி சூப் அருந்தி பலன் பெறலாம். முழு தக்காளியுடன் நான்கைந்து வெள்ளைப் பூண்டு சேர்த்து நசுக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி குடித்தால் இரவில் இருமல் தொல்லை இல்லாமல் இருக்கலாம். தலைபாரம், மூக்கடைப்பு இருந்தால் தலையணையில் நொச்சித் தழைகளை வைத்து உறங்குவது பலன் தரும். தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்தி கற்பூரம் சேர்த்துக் கரைந்ததும் நெஞ்சு, கழுத்து, முதுகு மற்றும் விலாப்பகுதியில் சூடு பறக்கத் தேய்த்தாலும் காய்ச்சல் வந்தால் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைக் கஷாயம், கொய்யா இலைக் கஷாயம், மிளகு கஷாயம் போன்றவற்றை அருந்துவது நல்லது. கைப்பிடி கறிவேப்பிலையுடன் நான்கைந்து மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து சுடுநீர் சேர்த்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தாலும் காய்ச்சல் விலகும். காய்ச்சல் நேரங்களில் பார்லி சூப் அருந்துவது இதமளிக்கும். காய்கறிகள், மிளகு, பூண்டு, பால், உப்பு சேர்த்தோ தனியாகவோ சூப் செய்து குடிக்கலாம்.

மழைக்காலங்களில் கடை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூட்டு, பொரியல், சூப் செய்யும்போது மிளகுத் தூள் சேர்ப்பது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ப்ரிட்ஜில் வைத்த உணவுகளை வெளியே எடுத்து வைத்து மெதுவாக பயன்படுத்துவது நல்லது.

எம்.மரிய பெல்சின்
விகடன் ஆரோக்கிய செய்திகள்

பால் பற்றி செய்தி - Information about Milk

நீங்கள் அருந்துவது பாலா ? ஒரு பார்வை !!!
பால்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவுப் பொருள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குப் பசும்பால்தான் உயிருணவு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாலில் கலப்படம் என்று அமைச்சரே கதறும் அளவுக்குச் சில சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாலில் 68 சதவிகிதத்திற்கும் மேல் கலப்படம்' என்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது தெரிய வந்திருக்கிறது.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில்தான் கலப்படம் செய்யமுடியும் என்பது சிலர் நம்பிக்கை. அதனால், மாடு வைத்திருப்பவர்களிடம் நேரடியாகச் சென்று பால் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால், பெரும்பாலான மாடுகளில், குறிப்பாக நகர்ப்புற மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலிலும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் பல விஷயங்கள் உண்டு. முக்கியமானது, ‘ஆக்சிடோசின்’ என்னும் ஹார்மோன் மருந்து. இந்த மருந்தை கால்நடைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று 2014 - ல் சட்டம் போட்ட பின்பும் கூட பலர் இன்னும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது என்ன ஆக்சிடோசின்?
விரிவாக விளக்குகிறார் நாளமில்லா சுரப்பி நிபுணர் டாக்டர் ராம்குமார்.
“உயிரினங்களின் உடம்பில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன். அன்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இதை 1906 - ம் ஆண்டு இங்கிலாந்து உடல் செயலியலாளர் சர் ஹென்றி டேல் கண்டறிந்தார். எருதுகளின் பியூட்டரி சுரப்பியிலிருந்து ஒருவித திரவத்தைக் கண்டறிந்த ஹென்றி டேல், அதை பிரசவகாலத்தில் கஷ்டப்படும் உயினங்களுக்குச் செலுத்திப் பார்த்தார் பிரசவம் மிக எளிதாக இருந்தது. அவருக்குப் பிறகு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் பிளேர் பெல், இந்த திரவத்துக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு ‘இன்ஃபன்டிபுலின்’ என்று பெயரிட்டார். இது மனிதப்பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு 1928. அதைச் செய்தவர் ஆலிவர் காம். அவர்தான் 'ஆக்சிடோசின்' என்று இதற்குப் பெயரிட்டார். இந்த ஹார்மோனைச் செயற்கையாக முதன்முதலில் தயாரித்தவர் அமெரிக்க உயிர்வேதியியலாளர் வின்சன்ட் டு விக்னியாட். உலகில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட முதல் ஹார்மோன் மருந்து ஆக்ஸிடோசின்தான். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது..."
இது உடலில் அன்பு, காதல், காமம் போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும்போது சுரக்கும். அதேபோல் பிரசவத்தின் போதும், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும் சுரக்கும்..."
ஆக்சிடோசின் பற்றி மகப்பேறு மருத்துவர் ஶ்ரீகலா பிரசாத் மேலும் சில தகவல்களைத் தருகிறார்.
"கர்ப்பப்பையில் குழந்தை முழுமையாக வளர்ந்த உடனே, தாய்க்கு இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். பிரசவ நேரத்தில் இந்த ஹார்மோன்தான் கர்ப்பப்பையைச் சுருங்கச் செய்து பிரசவம் ஏற்பட வழிசெய்யும். ஆனால் சிலருக்கு இந்த ஹார்மோன் சுரக்க தாமதம் ஏற்படும். அப்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட 'ஆக்சிடோசின்' மருந்து பயன்படுத்தப்படும். இந்த மருந்தே பிரசவ வலியைத் தூண்டுகிறது. பின்னர் பிரசவம் முடிந்த பின்னர் ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் இந்த மருந்தை பயன்படுத்துகிறோம். உயிர் காக்கும் மருந்துகளில் இதுவும் ஒன்று "
சரி... பசுக்களுக்கு ஏன் ஆக்சிடோசின் மருந்து?
"கறவை மாடுகளிலிருந்து அதிகமாக பால் கறப்பதற்கு சிலர் இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி கறக்கப்படும் பாலை குடிக்கும்போது உடலுக்குப் பல்வேறு தீமைகள் உண்டாகும்" என்கிறார் முன்னாள் கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குனர் சௌந்திரபாண்டியன் .

"ஆக்சிடோசின் இயற்கையாகவே மாடுகளுக்குச் சுரக்கக் கூடியதுதான். கன்று போடும்போது கருப்பாதை விரிவடைந்து கன்றுக்குட்டி வேளியே வருவதற்கு ஆக்ஸிடோசின் சுரக்கும்.
ஆனால், மடியில் இருக்கும் பால் முழுவதையும் கரப்பதற்கு சிலர் ஆக்சிடோசின் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மாட்டுக்கு கிட்னி பாதிப்பு ஏற்படும். சினை பிடிப்பதில் சிக்கல் உண்டாகும். தொடர்ந்து இந்த மருந்தை பசுவுக்குக் கொடுத்து வரும்போது அடிக்கடி அதன் கர்ப்பப்பை விரிவடைவதால் தசைகள் பலவீனமடையும். இறப்பதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு. இப்படிக் கறக்கப்படும் பால் குடிப்பதால் பெரும் பாதிப்புகள் உண்டாகும். ஆக்சிடோசின் கலந்த பால் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும். இந்த மருந்தை கால்நடைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கிறது. மனிதர்களுக்குப் பயன்படுத்துவதாகச் சொல்லி வாங்கி சிலர் தனியாக விற்பனை செய்து வருகின்றனர்..." என்றார் அவர்.மருத்துவர் சிவராமன்
ஆக்சிடோசின் செலுத்திச் கறக்கப்படும் பாலைக் குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?
"ஹார்மோன் ஊசி போட்டு பால் கரக்கும்போது ஹார்மோன் துணுக்குகள் பாலிலேயே தங்கிவிடும். இது மனிதர்களுக்குப் பல பாதிப்புகளை உண்டாக்கும். பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்." என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

இப்படிக் கறக்கப்படும் பாலைக் குடிப்பதால் கண் பாதிப்புகள், பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய், ரத்த அழுத்த நோய், சிறுநீரகப் பாதிப்புகள், ஞாபகக் கோளாறுகள் ஆகிய பிரச்னைகள் உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பால் கறப்பதற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைகள் போட்டாலும் சிலர் அலட்டிக்கொள்ளாமல் பயன்படுத்தி, மக்களுக்கு நோய்களைப் பரப்பிவருகின்றனர்.

இரா.செந்தில் குமார்
விகடன் ஆரோக்கிய செய்திகள்