உடல் பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மலச்சிக்கல் - Constipation

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்…

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.

கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும் போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். 

இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். 

வாழ்க்கை முறை மாற்றங்கள் 

*  போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். தினமும் குறைந்தது 2.5 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*  வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும். மேலும் கண் பார்வை தெளிவாகும். மூலாதார சூட்டையும் தணிக்கும்.

*  தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.  

*  தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

*  இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி, புட்டு, இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

*  காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவதுடன், சரிவிகித உணவு உட் கொள்ளவும். 

*  வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.

*  தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.

*  மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும்.

*  மன அழுத்தம் தவிர்க்கவும்.

மலச்சிக்கல் நீக்கும் உணவுகள் 

*  காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும். 

*  இளநீர், பழச்சாறு அருந்தவும். 

*  இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சீஸனல் பழங்களும் உண்ணலாம். 

*  நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். 

*  வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், 

*  கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை… 

இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்ல தீர்வு தரும்.

சனி, 13 பிப்ரவரி, 2021

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு 

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு குழந்தையின்மை  பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள். 

  • பூண்டு
  • மாதுளம் பழம்.
  • செவ்வாழைப்பழம்
  • பசலைக் கீரை
  • மிளகு
  • தக்காளி
  • தர்பூசணி
  • ஆப்பிள்
  • முந்திரி
  • வால்நட் பருப்பு
  • பாதாம் பருப்பு
  • பூசணிக்காய் விதைகள்
  • நிலக்கடலை
  • சிவப்பரிசி
  • நாட்டுக்கோழி இறைச்சி

இன்று முதல் இவற்றை கடைபிடித்தால் போதும்: 

மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம்.

மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.

பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.

குழந்தை பெற நினைப்பவர்கள் சிகரெட், மது பழக்கமிருந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இந்த பழக்கங்கள் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது அவசியம். 

ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

சனி, 16 ஜனவரி, 2021

பற்களை பாதுகாப்பு முறைகள் - Dental care methods

பற்களும் பாதுகாப்பு முறைகளும் ! 

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும்.  'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான்.  

பராமரிப்பும்/பாதுகாப்பும் 

பிரஷ் : ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போது தான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும்.

பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.   

பற்பசை : ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம். 

குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.  எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையால் எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது. ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.  அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும். 

பற்களை எப்படித் துலக்கலாம்? 

பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும். இதேபோன்றே முன்பக்கம், பின்பக்கப் பற்களை துலக்க வேண்டும். உணவு மெல்லும் பகுதியில் மட்டும் பிரெஷைக் கொண்டு ஒரு சுற்று சுற்றுவது போல துலக்க வேண்டும். ஒவ்வொரு பல்லுக்கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொடிகள் போதுமானது. இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும். பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பல் துலக்குவது நல்லது. பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நாக்கை வேகமாக இழுக்காமல் மென்மையாக இழுத்து, நாக்கின் மேல் படிந்துள்ளவற்றை அகற்றலாம். 




இருமுறை பல் துலக்குங்கள் : 

பல் துலக்கும் நுட்பத்தைத் தெரிந்து மிகச் சிறப்பாக பல் துலக்கினாலும் கூட,  90 சதவிகிதம் அளவுக்குத் தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகித கிருமிகள் பெருக்கம் அடைந்து, பற்களைத் தாக்க 12 மணி நேரம் போதுமானது. அப்படி இருக்கும்போது பல் துலக்கும் நுட்பம் தெரியாமல் பல் துலக்குப்பவர்களுக்கு அதன் மூலம் கிருமிகள் அகற்றம் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். இந்த கிருமிகள் பற்களைத் தாக்கும் அளவுக்கு பெருக்கம் அடைய சில மணி நேரங்களே போதுமானது. எனவே, ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும். 

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்கின்றன.

பல் பராமரிப்பு : 

ஃபிளாஸ்ஸிங் : 

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். 

இயற்கை பிரஷ்ஷிங் : 

• இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. 

• அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. 

• சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை போன்றவை பற்களைப் பாதிக்கக்கூடியவை. 

• கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக்காமலேயே பயன்படுத்துகிறோம்.  மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உணவுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்களையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல்லது. 

பளீர் பற்கள் 

• காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. 

• புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்கும். பல்லில் அடிபடுவதாலும் பழுப்பு நிறம் ஏற்படலாம். 

• கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக் கொள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் ஜாக்கிரதை.   

• பளிச்சென்ற பற்கள் கிடைக்க, பல் மருத்துவர்கள் ப்ளீச்சிங் என்ற சிகிச்சை அளிப்பார்கள். வீட்டிலேயேகூட டாக்டரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கு ப்ளீச்சிங் செய்துகொள்ளலாம். 

மவுத் வாஷ் 

மவுத் வாஷ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பற்களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்க என மூன்று வகையான மவுத் வாஷ்கள் வருகின்றன. 

பற்களை வலுவாக்கும் மவுத் வாஷில் ஃப்ளோரைட் கலந்திருக்கும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும். நம் வாயில், கெடுதலை விளைவிக்கும்  நுண் உயிரிகள் இருப்பதுபோல், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளும் உள்ளன. மவுத் வாஷ் செய்யும்போது இந்த கெடுதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுடன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். இதனால் வாய் உலர்ந்துபோகும் தன்மை போன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி மவுத் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டாம்.  

பல் பாதிப்பும் / தீர்வும் 

ஈறு : ஈறுகள்தான் நம் பற்களைப் பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கின்றன. இந்த எலும்பை போர்வை போன்று மூடிப் பாதுகாக்கிறது ஈறு. பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. ஆழம் உள்ளது. இங்கு தான் பற்களைப் பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்த ஆழமானது 3 முதல் 4 மி.மீ. அளவுக்கு செல்வதை 'கம் பாக்கெட்’ என்று சொல்வோம். உணவுத் துகள்கள் அதிக அளவில் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும். உணவுத் துகள்களில் கிருமிகள் வளரும். இதை வெளியேற்ற உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இந்த போராட்டத்தில் உடல் பாதுகாப்பு அமைப்பு தோல்வியுறும் போது கிருமி வேகமாக வளர்ந்து எலும்பை அரிக்கத் தொடங்கும். 50 சதவிகிதம் அளவுக்கு ஈறுகள் ஆழம் அதிகரிக்கும் போது பல் வலுவிழக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்தலாம். பிரச்னையின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. 

வாய் துர்நாற்றம் : வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு வாய் கொப்பளிக்கும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துற்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு. வெறும் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது பிரச்னையைத் தற்காலிகமாக ஒத்திப்போடுமே தவிர, முழுமையான தீர்வைத் தராது. 

பற்கூச்சம் : பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாகப் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டைன் பகுதியில் நிறைய மெல்லிய குழாய்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மூலம் வெப்பம், குளிர் போன்றவை ரத்தநாளங்கள், நரம்புகள் கொண்ட பகுதியான பற்குழிக்குக் கடத்தப்படுவதால் இந்த பற்கூச்சம் ஏற்படுகிறது. முறையற்ற வகையில் பற்களைத் தேய்ப்பது, நீண்ட நேரம் பல் தேய்ப்பது போன்றவற்றால் எனாமல் தேயவும்,  ஈறுகளும் பற்களில் இருந்து விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஈறுநோய்கள் ஏற்படும்போது ஈறுகளில் வீக்கம், பல் உடைதல், தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் போன்றவற்றாலும் கூச்சம் ஏற்படலாம். எதனால் பற்கூச்சம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். 

ஆயில் புல்லிங் அவசியமா? 

இயற்கையான நல்லெண்ணெயில் மட்டுமே வாய் கொப்பளிப்பு செய்யப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம். ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங் செய்வதில் தவறு இல்லை. 

வரிசையும்/அமைப்பும் ஞானப்பல் : 

விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில் முளைக்கும் பல்லுக்கு ஞானப்பல் என்று பெயர். ஒருகாலத்தில் மனிதனுக்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டையாடுவது, எதையும் பச்சையாகவே சாப்பிடுவது என இருந்ததால் அத்தனைப் பற்கள் தேவைப்பட்டன. இன்று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில் 28 பற்களாக குறைந்து விடலாம். இந்த ஞானப் பற்கள் வளரப் போதுமான இடம் இல்லாததால் மற்ற பற்களில் முட்டிக் கொண்டு பற்களின் வரிசையையே பாதிக்கச் செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஞானப் பற்களை அகற்றி விடுவது நல்லது. 

தற்போது தூக்க நிலையில் ஞானப் பற்களை அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய நபருக்கு, மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு நீக்க ஊசியை செலுத்தி பற்கள் பிடுங்கப்படுகின்றன. இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்காது. விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும். 

'கிளிப்’ பற்றி கிளிக்! 

பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது. வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன்பாகவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்று நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன. யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரியவரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும். 

கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்க வேண்டும். 

அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை சரிசெய்ய வேண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம்  கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும். 

ஸ்லீப் ஆப்னியா : 

தூக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு தாடை மற்றும் பற்களின் அமைப்பும் ஒரு காரணம். குறட்டை விடுவதற்கும் இது ஒரு காரணம். ஒருவருக்குப் பற்கள் தேய்வதால் தாடையின் உயரம் குறைந்து, தூங்கும் போது நாக்குக்கு போதுமான இடமும் குறைந்து, நாக்கு தொண்டைக்கு சென்று மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும். தாடையின் உயரத்தைக் கூட்டி, சில வகை கிளிப் போடுவதன் மூலம் குறிப்பிட்ட வகை 'ஸ்லீப் ஆப்னியா’வை சரி செய்யலாம்.

பல் சிகிச்சை முறைகள் 

பல்சொத்தை : 

பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பற்கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என்பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும்.   

பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொத்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தால் அதற்கு சாதாரண ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொடர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து பில்லிங் செய்யப்படும். 

சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென்றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால். 

பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல்லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தையானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றிவிட்டு, வந்த பாதையை சுத்தம் செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொருளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால். 

ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும். 

மரம் பச்சையாக இருக்கும் போது தான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்து விட்டால், வளைக்கும் போது ஒடிந்துவிடும். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றி விடுவதால் பல்லுக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்து போய் நொறுங்கிவிடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட்டுக் கொள்ளலாம். 

சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றிவிடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும். 

செயற்கை பல் : 

ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட்ட பயனற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும் இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். முன்பு பிரிட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த முறையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாதபடியான செயற்கைப் பல் கட்டப்பட்டது. 

பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதால், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்த முடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படும்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம். 

இம்ப்ளான்ட்

இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போடும் அமைப்பு இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்படும்  கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம். 

அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம்.   

தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன்மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம்பிளான்ட் போடும் இடத்தில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத்தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும். 

ஒரே நாளில் பல் கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோசனைகள், பரிசோதனைகள், வடிவமைப்பு போன்றவற்றை முடிவு செய்துவிட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள்ள பல் செட் அதில் பொருத்தப்படும். 

டூத் லேமினேட் : 

திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான். 

லேசர் சிகிச்சைகள் : 

ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத்தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப்பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும். 

எலும்பு கிராஃப்ட்டிங் : 

சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயிருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம்பிளான்ட் செய்யலாம் என்றால், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப்படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை... 

குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்துவரிடம் குழந்தையை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும். 

பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச்னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், சொத்தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே அதை சரிப்படுத்திவிட முடியும். 

பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற்றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துவிடலாம். 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுகளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடனடியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்து கொள்ள வேண்டும். 

லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

பற்களின் பகைவன் 

இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. 

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும்.  வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம். 

புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும். 

புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும். 

செய்யக்கூடியவை :

• சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும், 

• தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும் 

• புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள். 

• போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள். 

• உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடுங்கள். 

• ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள். 

• ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

• குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள். 

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள். 

செய்யக் கூடாதவை : 

• எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’ வெனப் பல்லைக் கடிக்காதீர்கள் 

• நகத்தைக் கடிக்கக் கூடாது.  அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும். 

• பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள். 

• பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம். 

மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம். 

தவிர்க்க வேண்டியவை: 

கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும். 

நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு! 

பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி, விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள். 

'ஷாக்’லெட் : பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில்  ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது. 

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் : சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம். 

உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.

வெள்ளி, 15 ஜனவரி, 2021

சர்க்கரை நோயாளிகள் உணவு முறைகள் - Sugar Patients Diet

சர்க்கரை நோயாளிகள் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடலாம்! 

வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டுச் சாப்பிடும் போது, உங்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாதான் இருக்கும். ஆனால், என்ன செய்வது சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாயைக்கட்டித் தானே ஆகணும். சர்க்கரை நோயாளிகளும் ருசியான உணவைச் சாப்பிட்டு சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

உடலில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாததை நோய் எனச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தினசரி உடற்பயிற்சி, சமச்சீர் உணவு என வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.

சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ' உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதைக் கடைப்பிடித்தாலே போதும். சரியில்லாத உணவுப் பழக்கம் உடல் நலத்தைக் குறைக்கும்

தினமும் காலையில் சரியான நேரத்தில் எழுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சமச்சீர் உணவு என முறையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

1. நேரத்துக்குச் சாப்பிடவேண்டும்

2. சரியான அளவில் சத்தான உணவை உட்கொள்வது அவசியம்

3. பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்ளும் விரதங்களைத் தவிர்க்க வேண்டும். அதேசமயம் வயிறு முட்டும் அளவுக்கும் சாப்பிடக்கூடாது.

4. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல் மருத்துவர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். 

* காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஏதாவது 'வார்ம் அப்' பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்க்காத பால்/காபி/தேநீர் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தலாம்.
அல்லது
மூலிகைத் தேநீர் ஏதாவது ஒன்றை தினமும் அருந்தலாம். இலவங்கப்பட்டை / சீரகம் / மல்லிவிதை / வெந்தயம் ஏதாவது ஒன்றை தேநீர் போட்டு அருந்தலாம்.
அல்லது
அருகம்புல் கஷாயம், ஆவாரைப் பூ குடிநீர், திரிபலா சூரணம் ஏதாவது ஒன்றை அருந்தி 15 - 30 நிமிடம்   தவறாமல் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினம் அரைமணி நேர உடற்பயிற்சி அவசியம் பண்ண வேண்டும்.

பின் குளியல் முடித்து ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிடவும்.

காலை உணவு சரியாக 7 - 8.30 க்குள்,  சாப்பிட வேண்டியது 

இட்லி - 3 (சிறியது),
அல்லது
மொறுமொறுப்பாக இல்லாமல் ஊத்தப்பம் போன்ற தோசை - 2 (சிறியது)
அல்லது
கோதுமை உப்புமா - ஒரு கப் 200 கிராம்)
அல்லது
சப்பாத்தி - 3 (சிறியது)
அல்லது
சத்தான சிறுதானிய உணவு செய்து சாப்பிட வேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம். இதனுடன் பருப்பு அல்லது சாம்பார் அதிக அளவில் எடுத்துக் கொண்டு சட்னியைக் குறைவாகச் சாப்பிடவும். தேங்காய் மற்றும் வேர்கடலைச் சட்னியை குறைத்து புதினா மற்றும் கொத்தமல்லிச் சட்னியை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும். 

காலை உணவுடன் ஒரு கப் காய்கறி சாலட் அல்லது 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். (கொலஸ்ட்ரால் பிரச்னை இல்லாதவர்கள் மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்) ஆனால் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் முட்டை சாப்பிடுங்கள்.

சர்க்கரைநோய்க்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைத்தும், புரதச்சத்து மிகுந்த உணவை மிதமாகவும், நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் காலை உணவுடன் பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

முற்பகல் சிற்றுண்டி 10.30 - 11க்குள் சாப்பிட வேண்டியது 

முளைகட்டிய பயறு ஒரு கப் அல்லது கோதுமை பிரட் - 2 அல்லது கொய்யா காய் பக்குவத்தில் 4 துண்டுகள்.
ஒரு கப் மூலிகை டீ.

மதிய உணவு சரியாக 12 - 1.30க்குள் சாப்பிட வேண்டும் 

குக்கரில் வேகவைக்காத வடித்த சாதம் - ஒரு கப்(200 கிராம்)
பருப்பு அல்லது சாம்பார் - இரண்டு கப்
பொரியல் - ஒரு கப்
கீரை - ஒரு கப்
காய்கறி சாலட் - ஒரு கப்
புரதம் நிறைந்த பருப்பை உணவில் சேர்க்க வேண்டும்

அசைவம் சாப்பிடுபவர்கள் சாம்பாருக்கு பதிலாக மீன் குழம்பு, ஒரு கப் பொரியல், இரண்டு துண்டு குழம்பு மீன்கள் எடுத்துக்கொள்ளலாம். கறியில் கொழுப்பில்லாத மட்டன், தோல் மற்றும் எலும்பில்லாத சிக்கனை குழம்பில் போட்டதை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மாலை சிற்றுண்டி 3.30 - 4க்குள் சாப்பிட வேண்டியது 

வேகவைத்த சுண்டல் கடலை அல்லது பயறு வகைகளில் ஏதாவது ஒன்று - ஒரு கப் அல்லது
பப்பாளி - 4 அல்லது 5 துண்டுகள் அல்லது
பேரிக்காய் - 2 (சிறியது) அல்லது
ஆப்பிள் - 1 (சிறியது) அல்லது
இவற்றில் ஏதாவது ஒன்றும் இதற்கடுத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு காபி அல்லது தேநீர் அருந்தலாம்.

இரவு உணவு 7- 8க்குள் சாப்பிட வேண்டும் 

சப்பாத்தி - 3. அல்லது
கோதுமை ரவை உப்புமா - 1 கப் (200 கிராம்)
பருப்பு - ஒரு கப்
வேகவைத்த காய்கறி - ஒரு கப்

வயது முதிர்ந்தவர்கள் கோதுமை உணவை சாப்பிட முடியவில்லை என்றால் ஊத்தாப்பம் சிறியது 2 சாப்பிடலாம். இட்லி எளிதில் ஜீரணமாகி விரைவில் பசியைத் தூண்டும் என்பதால் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

இரவு உணவுக்குப் பிறகு அரைமணி நேரம் கழித்து சூடாக ஒரு கப் பால் அருந்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம்.

செவ்வாய், 5 ஜனவரி, 2021

கண் பயிற்சிகள் - Eye Exercise

கண்களுக்கு பயிற்சிகள்: 

இன்று லாக்டவுன்னில் தொலைக்காட்சிப் பெட்டி போரடித்தால் ஸ்மார்ட் போன், கணணி என பொழுதை கழிக்கிறோம் அதனால் பாதிக்கப்படுவது கண்கள் தான். அதனால் கண்களை பாதுகாக்க சில பயிற்சிகளைப் பார்க்கலாம்.

சூரிய ஒளி சிகிச்சை 

காலையிலோ, மாலையிலோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். மதிய நேரத்தில் செய்யக் கூடாது.  முதலில் சூரியனைப் பார்த்தபடி வசதியாக உட்கார வேண்டும். பிறகு கண்களை லேசாக மூடிக்கொண்டு உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக பக்கவாட்டில் இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்கள் அசைக்க வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நின்றும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

மேகங்கள் சூரியனை மூடியிருந்தாலோ, குளிர் பிரதேசத்திலோ இந்தப் பயிற்சியை வீட்டுக்குள் இருந்தும் செய்யலாம். 40 வாட்ஸ் பல்பை எரியவிட்டு, கண்களை மிதமாக மூடிக்கொண்டு, உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக அசைக்க வேண்டும். இப்படி இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானதாகும்.

இந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.

கண் குளியல் 

சூரிய ஒளி சிகிச்சையை முடித்ததும், கண்களைச் சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் கண்களும் அதில் உள்ள திசுக்களும் சுத்தமாவதோடு, கண்களுக்கு ஓய்வையும் அளிக்கும், பார்வைத்திறன் மேம்படும். கைகளில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் கண்ணை மூழ்கவைக்க வேண்டும். அல்லது கண் மட்டும் முழ்கக்கூடிய அளவு சிறிய குவளையை உபயோகிக்கலாம். நீரில் கண்ணை கீழ் நோக்கி வைத்து நீருக்குள் இமைக்க வேண்டும். அதிக நேரம் கண்ணை நீரில் வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், கண் நீரை இழுத்துக்கொள்ளும் (Suction). ஒவ்வொரு கண்ணையும் அரை நிமிடம் இப்படிக் கழுவினாலே போதுமானதாது.

இந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வை குறைபாட்டல் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.

உள்ளங்கைப் பயிற்சி 

கண்கள் மிகவும் களைப்படையும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டால், கண்கள் தளர்வடையும். இருந்தாலும் கண் இமைகளின் ஓரமாக வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், உள்ளங்கையையால் கண்களை மூடிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு பொருளையோ, பூவையோ, பறவையையோ கற்பனைச் செய்துகொள்ளுங்கள். இந்த முறை, கண்களை மட்டுமில்லாமல், மூளையையும் தளர்வடையச் செய்யும். இந்தப் பயிற்சியை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். கண் பார்வைத் தெளிவாக இருப்பவர்களும் செய்யலாம்; கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.

மெழுகுவர்த்தி ஒளியில் படித்தல் 

இதை கிட்டப் பார்வை உள்ளவர்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். சிறிய எழுத்துகளை மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டும். கிட்டப் பார்வையுள்ளவர்கள் எழுத்துகளை எவ்வளவு தள்ளிவைத்துப் படிக்க முடியுமோ, அவ்வளவு தள்ளி வைத்துப் படிக்கலாம். சிரமப்படாமல் படிக்க, ஒரு வரிக்கு ஒரு முறை கண்களைச் சிமிட்டிக்கொள்ளலாம். பிறகு தலையை ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி 2 முதல் 5 நிமிடங்கள் வரை படித்தாலே போதுமானது. இறுதியாக நல்ல வெளிச்சத்தில் அந்தச் சிறிய எழுத்துகள் கொண்ட வரியைப் படிக்க வேண்டும்.

இதேபோல நல்ல ஒளியிலும்,மெழுகுவர்த்தி ஒளியிலும் மாறி மாறிப் படிக்க வேண்டும். படிக்கும்போது தலைவலி, கண் வலி ஏற்பட்டால் பயிற்சியை அன்று நிறுத்திவிட வேண்டும்.

பந்து விளையாட்டுப் பயிற்சி 

ஒரு சிறிய பந்தை எடுத்துக்கொள்ளவும். நின்றபடி பந்தை இடது கையால் தரையில் போட்டு, வலது கையால் பிடிக்க வேண்டும். பிறகு கண்களை லேசாக மூடி, திறக்கவும். மறுபடியும் பந்தை வலது கையால் தரையில் போட்டு, இடது கையால் அதைப் பிடிக்கவும். பிறகு கண்களை லேசாக மூடி, திறக்கவும். இப்படி தினமும் ஐந்து நிமிடங்கள் செய்து வந்தால், கண்கள் தளர்வடையும், பார்வை தெளிவாகும். இதை, கிட்டப் பார்வை மற்றும் வயோதிகப் பார்வையால் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.

நீராவி பிடித்தல், கண்களைக் குளிர்வித்தல் 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஆவி வரும் வரை கொதிக்கவிடவும். அதில் இரண்டு சொட்டு நீலகிரி தைலம் விட்டு, கண்களைத் திறத்து வைத்துக்கொண்டே, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பிறகு தண்ணீரில் நனைத்த பஞ்சை கண்களின் மீது 5 நிமிடங்களுக்கு வைத்து கண்களைக் குளிர்விக்கலாம். 

கண்களைக் குளிர்வைக்கும் பயிற்சியை ஜலதோஷம், சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் செய்யக் கூடாது. இந்தப் பயிற்சியை கிட்டப் பார்வை மற்றும் வயோதிகப் பார்வையால் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.

திங்கள், 4 ஜனவரி, 2021

சர்க்கரை நோய் - Diabetes

சர்க்கரை நோய் ஒரு பார்வை 

தமிழர்கள், `தலைவாழை இலைபோட்டு விருந்து பரிமாறியவர்கள்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள். இனிப்பில் தொடங்கி இனிப்பில் நிறைவடைவது நம் பண்டிகை விருந்து. ஆனால் இன்று தெருவுக்குத் தெரு இனிப்பில்லாத (Sugar free) ரொட்டிகள், குக்கீஸ்கள் மற்றும் சாக்லேட்டுகளை விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்கள் பெருகிவிட்டன. 

ஓடிஆடி விளையாடும் குழந்தைகள் தொடங்கி, வயது வித்தியாசமில்லாமல் ஏதேனும் ஒரு மைதானத்தில் எல்லோரும் மூச்சிரைக்க நடந்து கொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் வேப்பங்கொழுந்தையும் ஆவாரம்பூவையும் கிள்ளி வாயில் போடுகிறார்கள். மைதானத்தின் முகப்பு வாயிலில் கேழ்வரகுக் கஞ்சியும் ஆவாரம்பூ தேநீரும் விற்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மனிதர்களும் ஏதேனும் ஒரு நோய்க்கு மிரண்டு, அச்சத்தோடும் பதற்றத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளின் உணவுப் பைகளுக்கு மாற்றாக, இன்சுலின் மருந்துகள் இடம்பெற்ற துயரத்தை யோசிக்க வேண்டும்.

`டயாபடீஸ்’ (Diabetes) எனப்படும் சர்க்கரைநோய் என்பது நோய் அல்ல. இன்சுலின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு (Hormonal dysfunction) என்கிறார்கள் மருத்துவர்கள். சர்க்கரைநோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களில் அதிகமானவர்களுக்கு இன்சுலின் குறைபாடு இருக்கிறது. 

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இதன் தாக்கத்துக்கு ஆளானவர்கள் குழந்தைகள் (1 - 2 வயது), 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் குறிப்பாக 10 முதல் 18 வயதுடைய வளர் இளம் பருவத்தினர். இளம் தலைமுறையினரைக் குறிவைக்கும் சர்க்கரை நோயைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

இயல்பாகவே வியத்தகு ஆற்றல் உடையது மனித உடல். உயிர்ச் செல்கள் அவ்வளவு எளிதாகத் தங்களை மாய்த்துக் கொள்வதில்லை. நோய்க்கிருமிகளுடன் சண்டைபோட்டு தற்காத்துக் கொள்கின்றன. ஹார்மோன்களும் நீர்ச்சத்துகளும் வேதியியல் கூறுகளும் தன்னியல்பாக தங்களைத் தாங்களே சமன் செய்துகொள்வது (Milieu interieur) ஆச்சர்யமான செய்தி. அடிப்படையான அதன் இயக்கநிலையைப் புரிந்துகொண்டால்தான் மனித உடலின் போராட்டம் புரியும். கணையத்தில் ஆல்பா (Alpha) மற்றும் பீட்டா (Beta) செல்கள் இருக்கின்றன. ஆல்பா செல்கள் குளூகோகான் (Glucagon), பீட்டா செல்கள் இன்சுலின் (Insulin) ஹார்மோனைச் சுரக்கின்றன. சாப்பிடும் உணவிலுள்ள குளுக்கோஸ் சத்துகள், திசுக்களால் உட்கிரகிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான  அளவு ரத்தத்தில் கலக்கின்றன. இதற்கு மூல காரணமாக இருப்பது இன்சுலின்.

மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கும். அந்த நிலையில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தியாகி, அதைச் சரிசெய்யும். இதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடாமலிருப்பது, விரதம் மற்றும் உணவுக்கட்டுப்பாடு நேரங்களில் ஆல்பா செல்கள் குளுகோகானை உற்பத்தி செய்து குளுக்கோஸ் அளவைச் சமன்செய்யும். இவை கைமீறிப்போன தருணங்களில்தான் நோய் தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும்.

சர்க்கரைநோயில் பல வகைகள் இருக்கின்றன. டைப் - 1 (TYPE - 1), டைப் -2 (TYPE - 2), கர்ப்பகால சர்க்கரைநோய் (GDM - Gestational Diabetes Mellitus). இன்சுலின் சுரக்காமல் இருப்பதை `டைப்-1 சர்க்கரைநோய்’, இன்சுலின் சுரந்தும் பயனற்ற நிலையில் இருப்பதை `டைப்-2 சர்க்கரைநோய்’ எனவும் சொல்கிறார்கள்.

டைப்-1, டைப்-2 சர்க்கரை நோய் என்றால் என்ன?

நம் உடலுக்குப் போதுமான அளவு வலிமை தருவது குளுகோஸ் எனப்படும் சர்க்கரைதான். ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும். சுமார் 40 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன. அவற்றில் அதிக பாதிப்பு கொண்டிருப்பது டைப்-1 மற்றும் டைப்-2 வகையே. 

பெரும்பாலும் டைப்-2 சர்க்கரை நோய், 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் ஏற்படும். இவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இவர்கள், சர்க்கரை நோய் இருக்கிறதா என்று உறுதிசெய்தவுடன், உடல் எடையைக் குறைப்பது அவசியம். கட்டுப்பாடான டயட் பின்பற்றுவது நல்லது. நிச்சயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சீராக மாத்திரை அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பெரும்பாலும் இன்சுலின் தேவைப்படாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர், இந்த டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் தான்.

ஆனால், டைப்-1 சர்க்கரை நோய் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தான் பாதிக்கும். பிறந்த குழந்தைக்குக்கூட இந்த டைப்-1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரியவர்களுக்கும் டைப்-1 ஏற்படலாம். இவர்கள், நிச்சயமாக வாழும் காலம் வரை இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது சிறந்தது.

டைப்-1 நோயை எப்படித் தடுப்பது?

இதைத் தடுக்கவும் முடியாது, குணப்படுத்தவும் முடியாது. ஆனால், இன்சுலின் எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட காலம் நலமோடு வாழ முடியும். இன்சுலினைத் தவிர, வேறு எந்த மருந்தாலும் இந்த டைப்-1 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மாற்று மருந்தைத் தேடி போக வேண்டாம். அது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சிகிச்சைக்கு முன், உண்மையில் டைப்-1 நோய்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இன்சுலின் ஊசிக்குப் பதிலாக இன்சுலின் பம்ப் உபயோகிக்கலாம்.

டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம்?

எந்த வகை சர்க்கரை நோய்க்கும், உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கண்டிப்பாக இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கடலை, பயறு, சுண்டல், சோயா, காளான், மீன், கோழி போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவதும் அவசியம். டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். பெற்றோர்கள் பாசிட்டிவ்வாக இருந்தால், நிச்சயம் குழந்தைகளின் உடல்நிலையும் பாசிட்டிவ்வாக மாறும்.

கணைய மாற்று சிகிச்சைமூலம் டைப்-1 சர்க்கரை நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆனால், கணையம் கிடைப்பதிலிருக்கும் சிக்கல்கள் ஏராளம். உயிரோடு இருப்பவர்களிடமிருந்து கணையத்தை எடுக்கவே முடியாது. ஒருவரின் உயிர்நாடி நின்றதும், உடல் உறுப்பில் முதலில் பாதிப்படைவது கணையம்தான். இறந்தவர்களிடமிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் கணையத்தை எடுத்து மாற்றி அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து நேரிடும். இது சாத்தியம். ஆனால், சாத்தியத்தின் அளவு மிகவும் குறைவு. இதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கர்ப்ப கால சர்க்கரைநோய் நிரந்தரமானதா?

கர்ப்ப கால சர்க்கரை நோய், கர்ப்பமடையும் அனைவருக்கும் ஏற்படாது. கருவுற்று இரண்டாவது ட்ரைமெஸ்டெரில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இதற்கான சில சிகிச்சை முறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 70 சதவிகிதம் வரை மீண்டும் சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இது, டைப்-2 நோயாக மாறிவிடும். எனவே, தொடர்ச்சியாக சோதனை செய்துகொள்வது அவசியம்.

ஏற்கெனவே, டைப்-1 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு, கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவு நிச்சயம் அதிகமாகும். இவர்கள், கர்ப்பத்திற்கு முன் சர்க்கரையின் அளவைச் சீராக்கிக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சீரான சிகிச்சை மூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு சர்க்கரை நோய் பரவாமலிருக்கும். இது, நோய் இல்லை. உடலில் ஏற்படும் சிறிய குறைபாடு மட்டுமே. குழந்தைகளை அரவணைப்போடு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள், பல சாதனைகள் படைப்பதைக் கண்முன்னே பார்க்கலாம்.

தாழ் (குறை) சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma ) பற்றி தெரிந்து கொள்ளலாம்

சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை எடுத்து வருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது ரத்தத்தில் சர்க்கரை குறைவது, இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள 

டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒரு முறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுகோகன் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.

ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் 

• உணவுக் கட்டுப்பாடு, 

• மாத்திரை, 

• இன்சுலின் ஊசி 

ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

எது தாழ்(குறை) சர்க்கரை

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லி வைத்தது போல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. 

• ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். 

• சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். 

• இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

எப்படி வருகிறது

சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். 

வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும்.

ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். 

இதன் விளைவாக மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். 

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுகோகன் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக் கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

ஆரம்ப அறிகுறிகள்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

• உடல் அதிகமாக வியர்ப்பது.

• உடல் குளிர்ச்சியாக இருப்பது.

• உடல் தளர்ச்சி.

• படபடப்பு.

• உடல் நடுக்கம்.

• அதிகப் பசி.

• தலைவலி.

• தலைசுற்றல்.

• பார்வை குறைவது.

• இதயத் துடிப்பு அதிகரிப்பது.

அடுத்த கட்ட அறிகுறிகள்……

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்

• பேச்சு குழறுதல்.

• மனக் குழப்பம்.

• அரை மயக்கம் (Semiconsciousness).

இறுதி கட்ட அறிகுறிகள்

• வலிப்பு வருவது.

• முழு மயக்கம் (Unconsciousness).

• கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

முழு மயக்கம் ஏற்பட்டால்

முழு மயக்கத்தில் உள்ளவருக்கு   முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.

டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்

வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது

• தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.

• இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.

• தாமதமாகச் சாப்பிடுவது.

• விரதம் இருப்பது.

• நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக் கொள்வது.

• அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.

• கடுமையாக உடற்பயிற்சி செய்வது.

• வெறும் வயிற்றில் மது அருந்துவது.

யாருக்கு வருகிறது

கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

• இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.

• டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.

• சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.

• முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)

• மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.

• கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

இவர்கள் என்ன செய்ய வேண்டும்

கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

• ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

• தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

• இன்சுலின் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

• 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

• குளுகோகன் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

• தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டு விட வேண்டும்.

• வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.

• குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

• தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

• படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

என்ன முதலுதவி

தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி……???

• குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் (குறை) சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.

• குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

• மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

• கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.

• இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

• முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும். 

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

தடுப்பது எப்படி

• நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.

• இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.

• டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.

• இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

• இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.

• அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத் தான் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும்,

• அதிகம் பசிக்கும், 

• வியர்க்கும், 

• படபடப்பு வரும், 

• நாக்கு உலரும், 

• உடல் நடுங்கும், 

• பார்வை குறையும். 

• குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும் 

• குழப்பமான மனநிலையில் இருக்கும். 

இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும், மயக்கம் வரும் சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது. 

டைப் 2 சர்க்கரை நோய்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இது குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிறது. மாறி வரும் தவறான உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சர்க்கரையை நம் உடலில் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் சில உணவுப் பொருள்களே சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றன. 

சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் எளிய உணவு முறை

துளசி: 

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

ஆளி விதை (Flax seeds):

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

இலவங்கப்பட்டை: 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியை உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரையின் அளவு குறைவதோடு, உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதய நோய்க்கான அபாயம் குறையும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் (Polyphenol) தான் காரணம். எனவே காலையில் எழுந்ததும் அல்லது உணவு உண்பதற்கு முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

முருங்கைக்கீரை: 

முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து சாறாக்கி, காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும்.

பாகற்காய்: 

சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாரத்துக்கு ஒருமுறை பாகற்காயைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இன்னும் வேகமான பலன் கிடைக்க, மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

வேப்பிலை: 

வேப்பிலைக் கொழுந்து எடுத்து அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு, கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மாத்திரை எதுவுமின்றி குணமாகும்.

நாவல் பழம்:

தினமும் காலையில் 5 முதல் 6 நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எல்லாக் காலங்களிலும் நாவல் பழம் கிடைக்காது என்பதால், அதன் விதைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய்: 

நெல்லிக்காய், கறிவேப்பிலை ஜூஸ் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து நறுக்கி 3 ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வடிகட்டி அரை எலுமிச்சம்பழத்தின் சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் ருசித்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும். இதேபோல் ஒரு நெல்லிக்காய் அதைவிட இரண்டு மடங்கு அளவில் பெரிய பாகற்காய் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

திரிபலா சூரணம்:

தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகள் மற்றும் பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

குறிப்பு : நெல்லிக்காய் வற்றல், கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல் ஆகியவற்றின் கலவையே திரிபலா சூரணம்.

திரிபலா சூரணத்தை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காலை / இரவு ஒரு வேளை சாப்பிடவும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை மற்றும் இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

ஆவாரம்பூ:

ஆவாரம்பூ 200 கிராம், சுக்கு சிறு துண்டு, ஏலக்காய் 3, உலர்ந்த வல்லாரை இலை 200 கிராம், சோம்பு இரண்டு டீஸ்பூன் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மி.லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பாதியாக வற்றியதும் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

எள் 

5 கிராம் அளவு கருப்பு எள்ளை எடுத்து நன்கு காய வைத்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை எடுத்து நன்கு உலர்த்தி காய வைத்து பொடி செய்யவும். இரண்டு பொடியையும் கலந்து சாப்பிட்டு வெந்நீர் பருகி வந்தால் நீரிழிவு குறையும்.

வெந்தயம் 

வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது 

வெந்தயப் பால் செய்யும் முறை

உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)

ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை மட்டும் துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும்.

நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இது கஷ்டமென்றால்

  • மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்படியே மென்று தின்று விழுங்கலாம் 
  • இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்.
  • சிலர் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலை சாப்பிடுவார்கள் அது தவறு வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துதான் இரவு ஊறவைத்து காலை சாப்பிட வேண்டும்.

கீரைகள் 

தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் 

அருகம்புல் 

  • ஒரு கைப்பிடி அருகம்புல் 
  • ஒரு பத்தை தேங்காய் 
  • ஒரு தேக்கரண்டி சீரகம்

ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர 

உடல் எடை குறையும் இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும், உடல் சுறுசுறுப்பு அடையும், உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும் 

குறிப்பு 

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.

இரண்டு மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டாம் அப்படி பாதுகாப்பான மருத்துவ முறையை பின்பற்றுவதாக இருந்தால் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். உதாரணமாக துளசி  சாப்பிடுவது, கீரீன் டி குடிப்பது.

புதினா

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும் 

முருங்கைக்கீரை

வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மஞ்சள் பூசணி

சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

மருந்துகளை மட்டுமே நம்பி இல்லாமல் இந்த உணவு முறைகளைப் பின்பற்றி வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். படிப்படியாக எந்த மருந்து மாத்திரைகளும் இன்றி நோய் கட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் ஏன் 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் HbA1c பரிசோதனை செய்யணும் தெரியுமா?

ஒரு நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஹெச்.பி.ஏ.1.சி.( HbA1c) அல்லது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது கிளைகோஹெமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை நடத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இச்சோதனை உதவுகிறது. இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் உதவிடும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

ஹெச்.பி.ஏ.1.சி. என்றால் என்ன? 

ஹெச்.பி.ஏ.1.சி. என்பது கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சுருக்கமாகும். ஹெச்.பி. = ஹீமோகுளோபின் ஏ1சி = ஹீமோகுளோபின் வகை ஹெச்.பி.ஏ.1.சி. = ஹீமோகுளோபினின் கிளைகேட்டட் வடிவம் குளுக்கோஸ் துகள்கள் ஹீமோகுளோபினுடன் பிணைக்கும் போது, கிளைகேட்டட் ஹீமோகுளோபின் உருவாகிறது. இந்த பிணைப்பு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவிற்கு விகிதாசாரமாகும். இந்த சோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸின் செறிவை அளவிட உதவுகிறது. இரத்தத்தில் அதிகரிக்கும் இரத்த சிவப்பு அணுக்கள் இரத்தத்தை இனிமையாகின்றன. சுருக்கமாக, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் அளவு அதிகமாக இருக்கும்போது, அந்த நபர் நீரிழிவு நோயாளி என்று அர்த்தம். குறைந்த அளவு இருப்பின், அவர் ஆரோக்கியமான, நீரிழிவு அல்லாத நபராக கருதப்படுகிறார்.

ஹெச்.பி.ஏ.1.சி. எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுப்பது இந்த இரத்த அணுக்கள் தான். ஹீமோகுளோபினின் வாழ்நாள் 3-4 மாதங்கள் வரை தான் நீடிக்கும். அதன் பின்னர் அவை முற்றிலுமாக புதுப்பிக்கப்படும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனையானது, கடந்த 3-4 மாதங்களில் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை தான் அளவிடுகிறது. நீரிழிவு நோய் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம், நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோயாளிக்கு எச்.பி.ஏ.1.சி. ஏன் கண்காணிக்கப்பட வேண்டும்?

ஏற்கனவே கூறியது போல, ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரையை, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் செறிவை ஹெச்.பி.ஏ.1.சி. மூலம் அளவிடலாம். எனவே, இது நீரிழிவு நிலையை கண்காணிக்க உதவும், ஒரு குறிப்பு அளவுருவாகவே இந்த ஹெச்.பி.ஏ.1.சி. கருதப்படுகிறது. சராசரி அளவை கண்டறிய குளுக்கோஸ் அளவுகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்வதற்கு இந்த ஹெச்.பி.ஏ.1.சி. உதவுகிறது. 

இந்த சோதனையின் நோக்கங்களாவன.. 

* கிளைசெமிக் கட்டுப்பாட்டைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளவும் 

* நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், இன்சுலின், உடற்பயிற்சிகள் போன்ற சிகிச்சையில் நிலை மற்றும் உதவி மாற்றங்களை கண்காணிக்கவும் 

* நீரிழிவு சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை பகுப்பாய்வு செய்யவும். 

ஆகையால், ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை, இரத்த சர்க்கரை அளவுகளுக்கு இணங்க ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை செய்து, அதிகரித்த அளவிற்கு காரணமாக இருக்கக்கூடிய சிக்கல்களைத் தடுத்திடவும். தேவைப்பட்டால், அளவைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு மருத்துவரையும் கூட அணுகிடலாம். ஆனால். நீரிழிவு நோயாளிகள் தவறாமல் ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை மேற்கொள்ள மட்டும் தவறாதீர்கள்.

ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது? 

ஒவ்வொரு 3 அல்லது 4 மாதங்களுக்கும் இல்லையென்றால், நீரிழிவு நோயாளிகள் இந்த பரிசோதனையை வருடத்தில் இரண்டு முறையாவது செய்ய வேண்டியது அவசியம். இந்த சோதனையின் சிறந்த பகுதி என்னவென்றால், இது எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு சோதனை செய்ய தேவையில்லை. ஹெச்.பி.ஏ.1.சி. முடிவுகள் சதவீதத்தில் காட்டப்படுகின்றன. இந்த மதிப்பு மொத்தத்தில் கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சதவீதமாகும். 4 முதல் 5.6% இயல்பானது, 6.5% மற்றும் அதற்கு மேற்பட்டவை உடலில் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அதிக சதவீதத்தைக் காட்டுகின்றன. 

இந்த சோதனையை நடத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அறிவுரைகள்.. 

  • நோயாளியின் வயது 
  • அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் வகை 
  • அவர்கள் பின்பற்றும் சிகிச்சை (மருந்து, இன்சுலின் போன்றவை)
  • அவற்றின் நிலை தொடர்பான சிக்கல்கள்

நீரிழிவு நிலையைக் கட்டுப்படுத்த கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. எப்போதும், ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள தவறவே கூடாது. மிக முக்கியமானது என்னவென்றால், சரியான இடைவெளியில் இரத்த சர்க்கரை மற்றும் ஹெச்.பி.ஏ.1.சி. சோதித்துப் பார்ப்பது, நீரிழிவின் நிலைமையை நிர்வகிக்க உதவிடும்.

வியாழன், 24 டிசம்பர், 2020

கண் கருவளையம் - Black Color around ​​the eye

கருவளையம்

கண்களை ச்சுற்றி கருவளையங்கள் வரக்காரணம்...!

முகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.

ரோஸ்வாட்டர்

கருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை

பாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.

பாதாம்

பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்

இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா

புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

புதன், 23 டிசம்பர், 2020

தலை முடி பராமரிப்பு - Hair Maintainance

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்... இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... பளபளப்பு, மென்மை, கருமை என அலை அலையாய்க் கூந்தலில் வலம் வரலாம்’ என்பனபோன்ற விளம்பரங்கள் பலரையும் ஈர்க்கின்றன. 

சுருள்சுருளாக முடி இருப்பவர்கள், நேர்த்தியான நீள் முடியையும், நீளமான முடி இருப்பவர்கள் அலைஅலையாய்ச் சுருள் முடியையும், அதிக முடி இருப்பவர்கள் குறைவாகவும், குறைந்த முடி இருப்பவர்கள் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று ஏங்குகின்றனர். அனைவரின் ஏக்கத்தையும் போக்குவது இன்று மிகவும் சுலபம். ஆங்காங்கே இருக்கும் அழகு நிலையங்களில் இதற்கான அழகுச் சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அழகுக்கலை நிபுணர், தோல் சிகிச்சை நிபுணரைச் சந்திப்பது நல்லது.

இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.  முடிவு இல்லாப் பிரச்னையாக நீடிக்கும் முடிப் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். 

தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது.

குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி... 

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன.  ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.  சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது.

• பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.  இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.  

• குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.  

• ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம்.  வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும்.  இதனால் முடி அடர்த்தியாக வளரும்.

• பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.  

• ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம்.  ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம்.  அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம்.  பயத்த மாவு எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

• குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது.  இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.  

• மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும்.  இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.  

• இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குத் தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்கூறு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும்.  இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம்.  இதனால் வியர்வை ஏற்படாமல், தலையும் வாசனையாக இருக்கும்.  

தலைமுடி உதிர்வதைத் தடுக்க... 

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.    

• தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.  

• ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி,  தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.  

• மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக் கொள்ளுங்கள்.  இதற்கு 'மேங்கோ பட்டர்’ என்று பெயர்.  இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.

• வெட்டிவேர் - 10 கிராம், சுருள் பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், விளாம் மர இலை - 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.  இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள்.  முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.  

• ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம்.  உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.

• டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள்.  மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள்.  குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.

பேன் / பொடுகைப் போக்க... 

தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல்போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத் தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.

பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.

இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்திலயே கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

• எண்ணெய் தேய்த்து வாரும் வழக்கம் இல்லாமல் போனதன் விளைவு பேன்/பொடுகு தங்குவதற்கு இடம் கிடைத்து விடுகிறது. தினமும் எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும்.

• ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

• இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.

• நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும்.  நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும்.  ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

• ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்து காய்ச்சி, வடிகட்டவும்.  இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும்.  ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுக்கும்போது பேன், பொடுகு வந்துவிடும்.  பிறகு சின்ன சீப்பினால் வாரவும்.

• ஒரு கப் தயிருடன் ஒரு ஸ்பூன் மிளகு பொடியை போட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்து, இந்த மிளகுத் தயிரை  தலை முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் ஊறியபின் தலையை கழுவ பொடுகு தீரும்.  

• வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்/பொடுகு/ஈறு தொல்லை இருக்காது.  

• வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.

• குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைத் தடவிக் குளிப்பாட்டலாம்.

வாரம் ஒரு முறை மேலே கொடுத்துள்ள டிப்ஸ்களை மாற்றி மாற்றிச் செய்யும் போது, தலை சூப்பர் சுத்தமாக்கும்.  

நரையைப் போக்க... 

இன்று எட்டு வயதிலேயே இளநரை எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. சுற்றுச்சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் போன்ற தவிர்க்க முடியாத பிரச்னைகளால் நரை முடி வந்து பலரையும் பாதிக்கிறது. நரை முடியை முற்றிலும் போக்க கறிவேப்பிலைதான் மிகச் சிறந்த மருந்து.  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

20 வயது இளைஞர்கள், நரையை மறைக்க, கலரிங் செய்து கொள்கின்றனர். தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி ஆரோக்கியம் இழந்து, உடைந்து போகிறது. அதன் தரம் குறைகிறது. இதனால், தலைமுடி உதிர்வதுடன், இளமையிலேயே நரை விழத் தொடங்கிவிடுகிறது. அதிலும் ரசாயனம் கலந்த கலரிங் செய்யும் போது, பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான பழங்கள், காய்கறிகளில் தலைக்கு கலரிங் செய்துகொள்ளலாம்.

• இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம் சாப்பிடலாம், ஆம்லா எண்ணெய் தலைக்கு  பயன்படுத்தலாம்.

• நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள்.  இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.  

• நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து இடித்துக் கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள்.  தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணெயை லேசாகச் சூடு பண்ணி, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது.  முடியும் கறுப்பாகும்.

• 100 கிராம் பிஞ்சுக் கடுக்காய்த்தூளை காஃபி பில்டரில் போட்டு, 300 எம்.எல், கொதிக்கும் நீரை ஊற்றவும். டிகாஷன் சொட்டுச் சொட்டாக இறங்க வேண்டும். தலையில் ஆலிவ் ஆயிலைத் தடவி வாரிக்கொள்ளவும். பிறகு, தலையின் சுற்றளவுக்கு ஏற்ப தடிமனான துணியை டிகாஷனில் முக்கி தலையில் வைத்துக் கட்டவும். 2 அல்லது 3 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு அலசவும். அதிக நரை இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்தால், நரை முடி கறுப்பாகும்.      

• நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப் பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும்.  இந்த எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், நரை முடி சீக்கிரத்திலேயே மாறிவிடும்.  

கருமையான கூந்தலுக்கு... 

சிலருக்குக் கருகரு முடிகூட, தூசு படிந்தாலோ, சரியான பராமரிப்பு இல்லாமல் போனாலோ, முடியின் நிறம் செம்பட்டை, மஞ்சள் நிறமாக மாறிவிடும்.  இதனால் முகமும் பளிச்சென்று இருக்காது.  

• பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை இந்த நான்கையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.  

• கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, பொடித்துக் கொள்ளவும்.  இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.  தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும்.

• 100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் - 100 கிராம், பயத்தம் பருப்பு - அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக்கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசிவர, கருகருவெனக் கூந்தல் கண் சிமிட்டும்.

• பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்குங்கள்.  மறுநாள், ஊறிய பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள்.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.

• ஒரு கொத்து கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.  

• சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.  

வறட்சி போக்கி, பளபளப்பாக்க... 

எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி, நுனி முடியில் பிளவு ஏற்படும்.  இதனால், ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.  

• 10 கிராம் கடுக்காய், மிளகு 10 கிராம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டுக் கலக்குங்கள்.  இந்த எண்ணெயைத் தினமும் தடவி சூடான தண்ணீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுங்கள். மிதமான சூட்டில் மசாஜ் செய்யலாம். பிறகு சீப்பால் வாரி பின்னல் போட்டுக் கொள்ளலாம். நுனிப் பிளவு நீங்கி, முடி நன்றாகப் பளபளக்கும்.  நீளமாக வளரத் தொடங்கும்.  

• 100 கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் மாவு, சீயக்காய் கால் கிலோ சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால், தலையில் அழுக்கு நீங்கி சுத்தமாகப் பளபளவென இருக்கும்.  

• தலா 4 துளி ஆலிவ் ஆயில், 4 துளி விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து,  சீப்பால் தினமும் தலை முடியை வாரவும்.  வறட்சியான முடியும் பளபளக்கும்.  
• ஒரு கப் தேங்காய் பாலில், 4 டீஸ்பூன் கடலை மாவு கலந்து தேய்த்து தலைக்குக் குளித்துவந்தால், முடி பளபளப்பாக இருக்கும்.

• 100 மிலி தேங்காய் எண்ணெயை அடுப்பில்வைத்துக் காய்ச்சி, அதில் 50 கிராம் ஃப்ரெஷ் செம்பருத்தி பூவைப் போட்டு வைத்துவிடுங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம்.  

• மரிக்கொழுந்து, வெட்டிவேர் தலா 50 கிராம் எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஃப்ளோரல் ஆயில் என்று பெயர்.  தலைமுடி பளபளப்பதுடன் பூக்களால் கூந்தல் வாசனையாகவும் இருக்கும்.  

வழுக்கை விழுவதைத் தடுக்க...

வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை.  கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.   

மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர் என்று மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட வேண்டும். 

தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை விழாமல் தடுக்கலாம்.   

• தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக் குளியல் அவசியம்.  தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது. 

• எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளரத் தொடங்கும். 

• குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும். 

தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை மூலம் வழுக்கைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

உணவுப் பழக்கம் கூந்தலைக் காக்கும்

தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை, தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளும்போது முடி மட்டும் அல்ல, சருமமும் ஆரோக்கிய அழகு பெறும்.   

கேரட்: இதில் உள்ள வைட்டமின் ஏ தலையில் உள்ள சீபம் எண்ணெய் உருவாக்கத்துக்கு அவசியம். இந்த சீபம் எண்ணெய்தான் தலைப் பரப்பை காய்ந்துவிடாமல் ஈரப்பதமாக வைக்கிறது. ஈரப்பதமான உச்சந்தலை என்றால், அது ஆரோக்கியமான தலைமுடிக்கு அஸ்திவாரம். 

முட்டை:  ஆரோக்கியமான முடியின் வேர்களுக்குப் புரதச் சத்து அவசியம். முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோடின், வைட்டமின் பி 12 முடியின் வேர்க்காலுக்கு ஊட்டத்தை அளிக்கும். முட்டையில் உள்ள பயோடின், வைட்டமின் பி, முடியைப் பளபளப்பாக்கவும், ஆரோக்கியத்துக்கும், பராமரிப்புக்கும் மிகவும் அவசியம். இதைப் பல ஷாம்புகளில் கலந்திருப்பார்கள். முட்டையில் இது இயற்கையாகவே உள்ளதால், தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம்.  தினமும் உணவிலும் முட்டை சேர்த்துக்கொள்ளவேண்டும்.   

அடர் பச்சை நிறக் காய்கறி கீரைகள்: அன்றாட உணவில் இவை அவசியம் தேவை. இந்த உணவுகள் தான் வைட்டமின் ஏ மற்றும் சி-க்கு ஆதாரங்கள். இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான தாதுப்பொருட்கள் இதில் உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் சீபம் உருவாக்கத்துக்கு உதவி புரிகின்றன. 

சிவப்பு அரிசி: புரதம், வைட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் நார்ச் சத்து இதில் நிறைவாக உள்ளன. இதில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் மிகவும் வலுவான முடி உருவாகத் துணை செய்கிறது. அதிக அளவில் உள்ள வைட்டமின் பி முடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவி புரிகிறது. 

தானியங்கள்: தலைமுடிக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களுடன், அதிக அளவிலான புரதச் சத்தையும் அளிக்கிறது. மேலும் இதில் பயோடின், வைட்டமின் பி போன்ற உயிர் ஊட்டச் சத்துக்களும் நிறைந்துஉள்ளன. இது முடி உடையும் பிரச்னையைத் தவிர்த்து உறுதியாக்கும். 

வாழைப்பழம்: வாழைப் பழத்தில் பி6 வைட்டமின் நிறைவாக உள்ளது. இது முடி உதிர்வைக் குறைக்கும். 

வால்நட்: முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து மற்றும் பராமரிப்பை அளிக்கும் மிக முக்கிய உணவுகளில் ஒன்று. இதில் நிறைவாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், பயோடின், வைட்டமின் ஈ, தாமிரம் போன்றவை சூரியக் கதிர்வீச்சில் இருந்து கேசத்தைப் பாதுகாக்கும். மேலும், முடி உதிர்வைத் தடுத்து முடியின் நிறத்தைப் பாதுகாத்துப் பளபளப்பாக்கும். 

க்ரீன் டீ:  இதில் உள்ள பாலிஃபீனல் உடல் எடையைக் குறைப்பதுடன், தலை சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணை புரிகிறது. க்ரீன் டீயை அருந்துவதுடன், அதைக்கொண்டு தலை முடியை அலசும்போது அல்லது தலை சருமப் பரப்பில் க்ரீன் டீயைத் தடவும்போது பொடுகையும் விரட்டிவிடும். 

மீன்: நெய் மீன் எனப்படும் எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளது. இந்தக் கொழுப்பு அமிலங்கள் முடி உதிர்வைத் தடுக்கின்றன. இந்த வகை மீன்களில் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிகின்றன. 

பூசணி விதை: முடி மற்றும் சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது.  இதில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன. 

வாசம் வீசும் ஹென்னா 

வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.   

• மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும். 

• மகிழம்பூ 50 கிராமுடன், கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தலா 25 கிராம் கலந்துகொள்ளுங்கள்.  இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். 

• ஒரு பிடி மகிழம்பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவிடுங்கள்.  மகிழம்பூ தைலம் தேய்த்துக் குளித்து முடித்ததும், ஆறவைத்துள்ள மகிழம்பூ தண்ணீரில் அலசுங்கள்.  கூந்தல் வாசம் வீசும். 

• ஒரு கப் மருதாணி இலை, கடுக்காய் தோல் - 4, டீ டிகாக்ஷன் ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு கப், துளசி இலை - ஒரு கப், கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.  வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம்.  தலைமுடிக்கு நல்ல  கண்டிஷனரையும், கலரையும், வாசனையையும் கொடுப்பதுடன் பளபளப்பாக வைத்திருக்கும்.   

• ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிராமுடன் மரிக்கொழுந்து, வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். ஃப்ரெஷ்னெஸை உணர முடியும். 

தலைமுடியை பராமரிக்க ஸ்கேன் 

தலை முடிப் பராமரிப்புக்கு பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் பிரத்யேக ஸ்கேன் கருவி வைத்துள்ளனர். இது தலை முடி சருமப் பரப்பை 200 மடங்கும், ஒரே ஒரு முடியை மட்டும் 1000 மடங்கு பெரிதாக்கிக்காட்டும். இதன் மூலம் தலை சருமப் பரப்பு மற்றும் முடியில் என்ன பிரச்னை உள்ளது என எளிதாகக் கண்டறிய முடியும். இந்த சோதனை அடிப்படையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அங்குள்ள அழகுக் கலை நிபுணர் முடிவுசெய்வார். 

முடிமாற்று அறுவைசிகிச்சை 

முடிகொட்டுவதைத் தடுக்க, முடி அடர்த்தி அதிகரிக்க சில சிகிச்சைகள் உள்ளன. வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு முடி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.  முடி எதனால் கொட்டுகிறது எனக் கண்டறிந்து முதலில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முடி கொட்டுவதற்கு மரபியல், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இதைக் கண்டறிந்து சரிப்படுத்துவதன் மூலம் முடிக் கொட்டுதலைத் தடுக்க முடியும். 

ஏற்கெனவே வழுக்கை விழுந்தவர்களுக்கு மீண்டும் முடி முளைக்கவைக்க முடியாது. முடி கொட்ட ஆரம்பித்தவர்களுக்கு சில ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள்.  அந்த மாத்திரைகள் போடும் வரை முடி கொட்டாது. மாத்திரை போடுவதை நிறுத்தியவுடன் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். ஏனெனில், முடி கொட்டும் நிகழ்வை மாத்திரை தள்ளிப்போடுமே தவிர, தடுத்து நிறுத்தாது. 

வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள நிரந்தர முடி வேர்களை எடுத்து தலையின் முன் பக்கத்தில் நடுவோம். இப்படி சில அமர்வுகளின் மூலம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் முடி வேர்கள் நடப்படும். நடப்பட்ட மூன்று வாரங்களில் முடி முளைக்க ஆரம்பித்துவிடும். இந்த மூன்று வார காலத்துக்குள் நோய்த் தொற்று, அரிப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டால் நடப்பட்ட முடி உதிர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. இந்த சிகிச்சை முறையில் சில சாதகம் மற்றும் பாதகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக சிகிச்சை தேவைப்படுபவருக்கு தெளிவுபடுத்திவிட்டு, அவரது முழு சம்மதத்துடன் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும். இதுதவிர ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளது. ஆனால் ஸ்டெம்செல் சிகிச்சைக்கு இதுவரை அங்கீகாரம் இல்லை. 

எச்சரிக்கை 

பெர்மிங், ஸ்ட்ரெய்ட்டனிங், அயர்னிங், ரீபாண்டிங் செய்துகொள்பவர்கள் கூந்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம். இதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர், இதரப் பொருட்களை மட்டுமே முறையாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும். 

மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுக்கு ஏற்ப, பெர்மிங், அயர்னிங், ஸ்ட்ரெய்ட்டனிங் என அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருந்தால் முடியின் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டுவிடும். பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

அழகுக்காக செய்துகொள்ளும் எந்த சிகிச்சையாக இருந்தாலும், கூந்தலின் தன்மை, எதையும் தாங்கும் சக்தி, சென்சிட்டிவ் கூந்தலா?  சாதாரணக் கூந்தலா? ஹென்னா, கலரிங், கெமிக்கல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதா என்று ஆராய்ந்து பிறகே மேற்கொள்ளவேண்டும்.