திங்கள், 18 ஜனவரி, 2016

Basil and its Health Benefits - துளசிச் செடியின் மருத்துவ பயன்கள்

துளசி பற்றி ஒரு அறிமுகம்

அன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் வீட்டை சுற்றி இருக்கும் இயற்கை வளங்களை கொண்டு எந்த நோய் வந்தாலும் தீர்க்கும் முறையை தங்கள் முன்னோர்கள் மூலம் அறிந்து பயன்படுத்தி நோய்களை வென்றார்கள். இன்றைய காலகட்டத்தில் பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் அநேக வீடுகளில் வயதானவர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது, பெரியோர்களின் முக்கியத்துவமும் அவர்களின் மருத்துவ அறிவும் இன்றைய தலைமுறைக்கு தெரியாமலே போய்விட்டது.

இன்று சளி, இருமல். தும்மல், தலைவலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் வீட்டைச்சுற்றி வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் அரைத்து கசாயம் போட்டு தலைவலி முதல் பிரசவம் வரை மருத்துவம் பார்த்திருக்கின்றனர். ஆனால் இன்று நம்மைச் சுற்றி வளரும் மூலிகைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறோம், அதனால் நம்மைச் சுற்றி இருக்கும் மூலிகைகள் பற்றியும் அதன் மகத்துவதை பற்றியும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன், மூலிகைகளில் சித்தர்களும், முனிவர்களும் மூலிகைகளின் அரசி என போற்றிய மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்த துளசி பற்றி பார்போம். துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் பின் புறத்தில், துளசிமாடம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.

சுற்றுச்சுழலை தூய்மைப்படுத்தும்

துளசிச் செடி காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு மற்ற தாவரங்களை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் தான் நம் முன்னோர்கள் வீடுகளில் துளசியை வளர்த்து அதிகாலையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையாக‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் அதை சுவாசித்து நாம் ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ எண்ணத்தில் இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மேலும் துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

வேறு பெயர்கள் மற்றும் வகைகள் 


துளசிக்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல்வேறு பெயர்களும். நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகளும் உள்ளன. இதில் வெண்துளசியை இல்லங்களில் வளர்க்கிறார்கள். இதன் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை பல நோய்களை தீர்க்கும் தன்மை உடையது.

தலைமுடியை பேணும் 

தலையில் இருக்கும் பேன், பொடுகு, அரிப்பு போன்ற நோய்கள் தீர துளசி சாறு, எலுமிச்சம் சாறு, தூய கற்பூரம் (பச்சை கற்பூரம்) ஆகியவற்றை கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் குளித்தால் குணமாகும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர 

துளசி இலைச்சாற்றுடன் சிறிதளவு தூய கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும். 

துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலியுள்ள இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வர பல் வ‌லி குறையு‌ம்.

சொத்தை பல் மற்றும் ஈறு வீக்கம் இருந்தால் துளசிச் சாற்றோடு கிராம்புத்தூள், கற்பூரம் கலந்து அதன் மேல் 
வை‌த்து அழு‌‌த்‌தி வர குணமாகும்.

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

துளசியின் உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம், அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம், களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி காலையும், இரவு சாப்பிட்ட பின்னும் பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

வாய்ப்புண் வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும், வாய் துர்நாற்றமும் ஏற்படும், துளசி இலையை மென்று சாறினை முழுங்க வயிற்றுப்புண் ஆறுவதோடு வாய்ப்புண்ணும் ஆறி வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

நாக்கில் அழுக்கு அதிகமாக சேர்ந்து சுவை அறியாமல் வாயும் ஒருவித குழகுழப்பு தன்மை கொண்டிருக்கும் அதற்கு துளசி இலையை மென்று உண்டால் அந்த தன்மை நீங்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் ஏற்படும்.

தலைவலி தீர


ஒரு கைப்பிடி துளசி இலை, 3 மிளகு, 1 துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும்.

கடுமையான தலைவலிக்கு கிராம்பு, சுக்கு ஆகியவற்றை துளசி சாற்றுடன் அரைத்து நெற்றியில் பற்றுப் போட குணமாகும்.

நீர்க்கோர்வை மற்றும்  தலை குடைச்சல் குணமாக துளசியைத் தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும் மற்றும் மூக்கடைப்பும் குணமாகும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் கண் சூடு குறைந்து கண் நரம்புகள் பலப்படும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. மாலைக்கண் நோய் குணமாக வாய்ப்புள்ளது.

துளசி இலையை சாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மை போல இட்டால் கண் பொங்குதல் குணமாகும்.

கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற துளசி இலை ஊறிய நீர் கொண்டு கண்ணை கழுவ வேண்டும்.

காது நோய்க்கு தீர்வு

துளசி இலையை கதிர்களுடன் (பூவோடு) பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 அல்லது 15 நாட்களில் காது மந்தம் தீரும்.

துளசி இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைப்பூண்டுச் சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.

துளசிச்சாறு 2 சொட்டு, கரிசலாங்கண்ணிச்சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டு வர காதுவலி மற்றும் காதில் இரத்தம், சீழ்வடிதல் குணமாகும். 

சரும நோய்கள் நீங்கும் 

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகள் குணமடைய துளசி இலையை எலுமிச்சைச் சாறு சேர்த்து மையாக அரைத்து அந்த கலவையை படை மற்றும் சொறி இருந்த இடத்தில் தடவி வர நோய் இருந்த இடம் தெரியாமல் மறையும். 

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் நோய் நீங்கும். 

உடலில் ஏற்படும் தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி, படர்தாமரை சிரங்கு போன்றவற்றில் துளசி இலைச் சாற்றை பற்று போட்டு, இலையை   கஷாயமாக்கி குடித்தால் அந்த நோய்கள் நீங்கிவிடும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை எளிதில் தழும்பு இல்லாமல் குணமாகும். 

துளசி வேர், சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் குணமாகும். 

உடலில் காயம் பட்டு இரத்தம் ஒழுகினால் துளசி இலை பொடி அல்லது துளசி இலைச்சாற்றை போட இரத்தம் நின்று காயம் விரைவில் ஆறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பரு மறையும்.

ஜீரண சக்தியை பெருக்க 

துளசி இலைகளை புட்டு அவிப்பது போல் அவித்து சாறு பிழிந்து 5 மி.லி. விதம் காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும்.

துளசி இலையை மென்று உண்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் நல்ல பசி எடுக்கும்.

உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் இருந்தால் துளசி இலை 10 கிராம் சிறிதளவு கருப்பு உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட குணமாகும், குடல் பூச்சிகளையும் அழிக்கும்.

வயிற்றில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை போக்கும்

விரதம் இருப்பவர்கள் விரத நாட்களில் வெறும் துளசி நீரை மட்டும் அருந்தி வந்தால் அவர்கள் உணவால் கிடைக்கக்கூடிய சத்தை இதில் பெற்றுக் கொள்ளலாம்.

துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் தொடர் பேதி குணமாகும்.

துளசி இலை, மிளகு, ஓமம், பூண்டு, இந்துப்பு, தூய கற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.

துளசி இலையை 200 மில்லி சாறு பிழிந்து கொதிக்க வைத்து சிறிது வெல்லம் கலந்து அருந்தினால் பித்தம் தணியும்.

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ள போது குடித்தால் வயிற்று வலி நீங்கும். 


வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க துளசியை கசாயம் செய்து அருந்தலாம். 

வாயுவினால் ஏற்படும் குடைச்சல், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உப்பிசம், பேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் இருந்து விடுபட துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம் அல்லது ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்தும் சாப்பிடலாம்.

துளசி இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்


  • கல்லீரலை பலப்படுத்தி எந்த நோயும் தாக்காமல் காக்கும். 
  • வாந்தியை நிறுத்தும். 
  • வாய் துர்நாற்றத்தைப் போக்கும். 
  • உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் மற்றும் கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்றும். 
  • சகல விதமான வாயுத் தொல்லையை போக்குகிறது. வாயுப் பிடிப்பு குணமாகும். 
  • குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் நம் வாழ்நாள் முழுவதும் வராது. 
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டு உடலுக்கு ஒரு கிருமி நாசினியாக செயல்படும். 

மூல வியாதியை கட்டுப்படுத்துகிறது

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.

விஷக்கடிக்கு

பூச்சிக் கடி மற்றும் காணாக்கடி (நமக்கு இது கடித்தது என்று தெரியாத கடி) போன்ற கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும் அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

விஷத்தை குடித்தவர்கள் உடல் விஷம் முறியவும் பயன்படுத்தலாம்.

எலிக்கடி, தேள் கடி, பாம்பு கடி விஷத்தை கூட முறித்து உயிர்பிழைக்க வைக்கலாம்..

நோய் எதிர்ப்பு சக்தி

தினம் காலையில் சிறிது துளசியை உண்டு வந்தால் நமது உடல் நோயின்றி ஆரோக்கியமாகத் திகழும்.

தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகி நோய் நம்மை தாக்காது.

கொஞ்சம் துளசி இலைகளை சுத்தமான மண்பானைத் தண்ணீரில் ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால்

  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
  • உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 
  • கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

ஜலதோஷம் மற்றும் இருமல் 

சளி, இருமல், காய்ச்சல் என்று வந்துவிட்டாலே கசாயம் போட நமது பெரியோர்கள் முதலில் தேடுவது துளசி இலை தான், துளசி இலை இல்லாமல் இத்தகைய நோய்க்கு தீர்வு கிடையாது என்பது தான் முற்றிலும் உண்மையாகும்.

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்புப் பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் சளியினால் ஏற்படும் கதகதப்பு குணமாகும்.

  • இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக இருக்கும்.
  • இறுகியுள்ள மார்புச்சளியை இளகச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை நீங்கும். 
மிளகுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும். 

சளித் தொல்லைக்கு ஒரு வெற்றிலையுடன்  3 மிளகு, 5 துளசி இலையை சேர்த்து மென்று விழுங்க குணமாகும்.

துளசி இலைச்சாறில், தேன், இஞ்சிச்சாறு கலந்து ஒரு தேக்கரண்டி அருந்த ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை குணமாக்கும்.

துளசி இலைச் சாறு 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து  சம அளவு தேன் கலந்து அருந்தினால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.

மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டும் சளி, தொடர் இருமலால் ஏற்படும் விலாவலி, உடல் வலி குழந்தைகளுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாமல் உடலை முறுக்கி அழுதல் போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உண்டாக்கி ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு கைபிடி அளவு துளசி இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்புச் சளி, காசநோய், காய்ச்சல் குணமாகும்.

துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு எடுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகைப் பொடியை தேனீல் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.

துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.

துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.

துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.

துளசி ஒரு பிடி, சுக்கு, திப்பிலி, மிளகு என்ற திரிக்கடுகு ஒரு தேக்கரண்டி போட்டு கஷாயமாக்கி அருந்தி வந்தால் சளி, இருமல் அண்டாது,

துளசி நாட்பட்ட இருமலை குணப்படுத்தும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவை குணமாக்கும் நுரையீரலை பலப்படுத்தும்.

ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது

மூளைக் காய்ச்சலுக்கு துளசியை கசாயமாக்கி கொடுக்கலாம். 

வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மலேரியா, விஷ ஜுரம், ஜன்னி வாத ஜுரம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கக் கூடிய வல்லமையும் வந்தால் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. 

துளசி, மிளகு, வெல்லம் ஆகியவற்றை கலந்து செய்த கஷாயம் மலேரியா, யானைக்கால் ஜூரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன

மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.

துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து கடலை அளவு மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் கலந்து கொடுக்க அல்லது 
துளசி இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக் காய்ச்சல், குளிர் ஜுரம், உடல் வலி, தலைப்பாரம், மார்புச்சளி, சாதா ஜுரம், யானைக்கால் ஜுரம், ஜன்னிவாத ஜுரம் என  சகலவிதமான காய்ச்சலும் குணமாகும்.  

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் தாகம் தணியும்.

துளசி இலைச்சாறு ஒரு பங்கு, இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 10 கிராம், மிளகு தூள் 10 கிராம், பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.

துளசி இலை 10, மிளகு 5 சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் மற்றும் வெல்லம் கலந்து பருகுவதால் ஜுரம் தணியும், ஜுரத்தின் ஆரம்ப நிலையில் அருந்தினால் ஜூரம் மேலும் கூடாமல் நின்று விடும்.

மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர் ஜூரம், காணாக்கடி, சாதா ஜூரம் ஆகியவை தீரும். 

துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர் ஜூரம் குணமாகும்.

காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த துளசியை மென்று சாப்பிட வேண்டும்,

தொண்டை வலி

தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

தொண்டைக்கம்மல், வலி நீங்க தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால் குணமாகும் மேலும் சளி, தொண்டைக்கட்டு,  உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

குழந்தைகளுக்கான சளி நீங்க 

துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, சளியினால் மூச்சு விட முடியாமை (மூச்சித் திணறல்) போன்றவை நீங்கும் மார்புச்சளி வெளியேறும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். மேலும் குழந்தைகள் வாந்தி, வயிற்றுப் போக்கை நிறுத்தவும் கொடுக்கலாம்.

துளசி, ஓமம் ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, தேன், சிறுது வெல்லம் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி குணமடையும். (ஓமத்திற்கு பதில் வெற்றிலையும் உபயோகிக்கலாம்).

துளசி சாற்றை இரண்டு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினமும் பருகி வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் தாக்காது.

துளசி இலை 9 எண்ணிக்கை, கடுக்காய் தோல்  5 கிராம், கீழாநெல்லி 10 கிராம், ஓமம் 5 கிராம், மிளகு  3 எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் அவற்றை ஒதுக்கும்.

நீரழிவு நோய்க்கு தீர்வு  

நீரழிவு நோய் வந்தவர்கள் துளசி இலையை மென்று உண்ண உடலில் சர்க்கரையின் அளவு சீராகும்.

துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் நம்மை அண்டாது

சிறுநீர் பிரச்சனைகள் 

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி நீரை பருகுவதன் மூலம் மூத்திரத் துவாரவலி குணமாக.

சிறுநீரகக் கல் நீங்க

சிறுநீரகக் கல் கரைய துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடும். (சிறுநீரகக் கல் உருவான பின் ஏற்படும் வலியை அனுபவிப்பதை விட நாம் கல் உருவாவதை தடுக்கும் வகையில் அவ்வப்போது அருந்தலாம்)

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தம் சுத்தமாக்கும்.

பெண்களுக்கு குறிப்புகள் 

பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (அதிக இரத்தப் போக்கு) துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறவைத்து, தினமும் காலையில் 1 தேக்கரண்டி 48 நாட்கள் அருந்தி வர குணமாகும்.

துளசி இலைச் சாற்றில் பனங்கற்கண்டுத் தூள் கலந்து குடித்தால் பெரும்பாடு நீங்கும்.

துளசி இலைச்சாறு அரை கப் மற்றும் ஒரு கப் அரிசிக் கஞ்சி இரண்டையும் கலந்துச் சாப்பிட்டு  பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.

துளசிஇலைச் சாறு, மணத்தக்காளி இலைச் சாறு, அமுக்கிரா கிழங்கு சாறு தலா 1 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி கலந்து 7 நாட்கள் குடித்தால் தாய்ப்பால் தூய்மை பெறும். சாறு கிடைக்காத பட்சத்தில் மூன்றையும் 1௦ கிராம் விதம் பொடி வடிவில் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீரில் ஊற வைத்து அரைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.

இருதயம் சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்துகிறது

துளசி இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து ஒரு நாளைக்கு  இரு வேளை விதம் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் தீரும்.

கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ 2 இரண்டையும் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள் குடித்து வர இருதயத்தை குத்தும் வலி, பிடிப்பு குணமாகும்.

துளசி இலை ஒரு கைப்பிடி மற்றும் 10 மிளகை தட்டி 2 கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன் கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இருதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை  துளசிக்கு 
உண்டு

உடல் எடை குறைய

துளசியிலை சாறு 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

வெப்ப நோய்கள்

துளசியை கோடை காலத்தில் தினம் 1௦ இலைகள் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் மிகுந்தவர்க்கும் உடல் உஷ்ணம் குறைந்தவர்களுக்கும் உடல் சூட்டை சமச்சீராக வைக்க உதவும்.

அம்மை நோய் ஏற்பட்டிருந்தால் அதிகரிக்காதிருக்க செய்யும். 

துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.

துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி நெஞ்சில் உள்ள கோழையை அகற்றி உடல் வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்

நரம்புக்கு ஊக்கம் தரும்

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடைந்து நரம்புத் தளர்ச்சி நோய் நீங்கி உடல் புத்துணர்வடையும்.

கை, கால், மூட்டு வலிகள் மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு துளசி சாற்றை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் துளசி இலை சிறுது தினம் சாப்பிட குணமாகும்.

துளசி இலைச்சாறு, ஆமணக்கு வேர்ச்சாறு சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும்.

துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறு எடுத்து 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
இரத்தத்தை சுத்தபடுத்தும் குணமும் துளசிக்கு உண்டு.

மன அழுத்தம் நீங்க

துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது.

வலிகளுக்கு நிவாரணம்

விலாவலிக்கு துளசி இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கை, கால் வலி குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசு நெய் கலந்து சாப்பிட்டால் வாத வீக்கம் குணமாகும்.

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக்கட்டுப்பாடு செய்ய தயங்கும் தம்பதிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

தாது விருத்திக்கு 

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால் கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியை  வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் விந்து பலப்படும் மேலும் நீரிழிவு நோயும் குறையும்(தினம் 2 வேளை 40 நாட்கள் இந்த மருந்தை எடுக்க வேண்டும்).

உடல் நலனில் அக்கறை  

துளசியை தினமும் சாப்பிட்டு வந்தால்

  • நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
  • நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி செயல்படும் உடலை தூய்மைப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. 
  • வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. 
  • தாய்பால் சுரப்பு அதிகமாகும். 
  • உடல் சோர்வு தீரும் 
  • தலைசுற்று குணமாகும். 
  • பிரசவ வலி குறையும். 
  • எந்த வியாதியும் உண்டாகமலிருக்கும். 
  • கெட்டரத்தம் சுத்தமாக. 
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற துளசி இலை சாற்றை குடிக்க கொடுக்கலாம். 

துளசி நீர்

செய்யும் 
முறை

சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும். அதல்  சுத்தமான நீர் ஊற்றி ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும். இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால். பல நோய்களை குணமாக்குவதோடு நோய்கள் எதுவும் நம்மை தாக்காது, அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை தெளிவாகும் அதாவது இளமையுடன் என்றும் வாழலாம்.

துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

குறிப்புகள்

துளசி சாறு அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் கால் முதல் அரை அவுன்ஸ் 
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும் அரை ஸ்பூன் முதல் 2 ஸ்பூன் வரை பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

துளசி இலைக்கு இயற்கையில் குடும்பவிருத்தியை கட்டுப்படுத்தும் குணம் இருப்பதால் திருமணத்திற்கு காத்திருக்கும் இளையோரும் இளம் தம்பதிகளும் அளவோடு சாப்பிடவேண்டும். (தவிர்ப்பது நல்லது)


வீடுகளில் துளசி இலைக் கொத்து கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. சுற்றுப்புற மாசுகளை தூய்மை படுத்தி சிறந்த கிருமி நாசினியாக இருக்கும். துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். துளசியை நம் அன்றாட வாழ்வில் சேர்த்து கொணடால் நோய் இன்றி வாழ்வது நிச்சயம். சும்மாவா அந்த காலத்தில் பெரியோர்கள் துளசியை வீட்டில் வளர்க்க வேண்டுமென்று சொன்னார்கள். இனி வீட்டிற்கு அழகுக்காக வைக்கும் செடிகளோடு துளசியை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.



வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக