சனி, 13 பிப்ரவரி, 2016

Health Benefits of Carrot - கேரட்டின் மருத்துவ குணங்கள்

தாவர தங்கம் கேரட்

மக்கள் இயற்கை உணவுகளை தவிர்த்து, எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர், போதாக்குறைக்கு வைட்டமின் டானிக் மற்றும் மாத்திரை என உட்கொள்கின்றனர். இதனால் பல வகையான வியாதிகள் உடலில் ஏற்படுகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை அடையலாம் என்பதில் ஐயமில்லை.

உணவே மருந்து என்ற அடிப்படையில் பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் வேர்க்காய் வகையை சார்ந்த கேரட் ஒரு சத்தான கிழங்காகும். கேரட் செடியானது தனது வேரில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள பல சில்லடை வேர்களைக் கொண்ட கூம்பு வடிவில் பருத்த கிழங்காக கேரட்டை நமக்கு தருகிறது. பல்வேறு சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன கேரட் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், இரத்த அழுத்தம் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. 



கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் 


இயற்கையில் இனிப்பு சுவையுடைய கேரட் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காயாகும். கேரட்டில் அடங்கியுள்ள சத்து விவரங்களை பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:


சக்தி 41 கலோரிகள்
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம் 
நார்சத்து 3 கிராம்    
கொழுப்புச் சத்து 0.2 கிராம்    
புரோட்டின் 1 கிராம் 
வைட்டமின் A - 93% (835 m.g.)
பீட்டா கரோட்டின் - 77% (8285 m.g.)   
வைட்டமின் B1 - 3% (0.04 m.g.)
வைட்டமின் B2 - 3% (0.05 m.g.)
வைட்டமின் B3 - 8% (1.2 m.g.)
வைட்டமின் B6 - 8% (0.1 m.g.)
வைட்டமின் B9 - 5% (9 m.g.)
வைட்டமின் C - 12% (7 m.g.)
கால்சியம் - 3% (33 m.g.)
இரும்புச் சத்து - 5% (0.66 m.g.)
மங்கனீஷ் - 5% (18 m.g.)
பாஸ்பரஸ் - 5% (35 m.g.)
பொட்டாசியம் - 5% (240 m.g.)
சோடியம் 2.4 m.g.)

கண்களுக்கு ஆரோக்கியம் தரும் 

கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை பார்த்தல் நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். இதில் வைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும்.

கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.

கேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டாகேரட்டின் தடுக்கிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகளை விட கூடுதல் பலனை தருகிறது கேரட்.

கேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மை நீங்கி கண் பார்வை கூர்மையாகும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்தை தீர்க்கும்.

கேரட் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்திலும் கண்பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.

மூளை சுறுசுறுப்படையும்

கேரட் சாறுடன் பாதாம் பருப்பை தூள் செய்து கலந்து அருந்தி வந்தால், மூளை சுறுசுறுப்படையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும், மூளை பலமடையும். பைத்தியம் குறைக்கும் நிவாரணியாகவும் இருக்கும்.

கேரட் மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.

பல் பராமரிப்பு

கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடைவதோடு பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கேரட்டை அடிக்கடி பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். ஈறுகளும் பலப்படும்.

நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்களை நீக்கி பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.

இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள்

கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்

கேரட் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி, விருத்தி அடையச் செய்கின்றது.

கேரட் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை நீக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

இரத்தப் புற்றுநோய்
க்கு தினமும் கேரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, இரத்த கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்

இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

கேரட் சாப்பிட்டால், இருதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாத்து மாரடைப்பு மற்றும் இருதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

கேரட் இதயத் துடிப்பைச் சீராக்கும். இருதயநோய் அணுகாமல் காக்கிறது.

வயிற்றுக் கோளாறுகள் 

கேரட்டை வாரத்தில் இரண்டு நாட்கள் சமையலில் பயன்படுத்தினால் இதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியை தரும்.

செரிமான பிரச்சனை இருந்தால் தினம் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து உணவை எளிதில் ஜீரணக்கச் செய்யும்.

நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் போன்ற வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

கேரட் ஜுஸ் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வாயுத் தொல்லை, மூல நோய் விரைவில் குணமடையும்.

கேரட் தயிர் பச்சடியாக மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். கேரட் தயிர் பச்சடி குறிப்பு கடைசியில் பார்க்கவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடல் புழுக்கள் மற்றும் வயிற்று பூச்சிகள் வெளியேறும்.

அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறு எடுத்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் குணமாகும்.

வாயில் துர்நாற்றம் இருந்தால் அதற்கு காரணம் வயிற்றிலிருக்கும் கோளாறுதான் எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்தினால் வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கி வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

சாப்பிட பின்னும் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும் நபர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வர தீரும். பசி எடுக்கும் சமயத்தில் ஒரு காரட் சாப்பிட்டால் பசி அடங்கும்.

வயிற்றோட்டத்திற்கு, கேரட் 1/4 கிலோ எடுத்து சுத்தம் செய்து குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து, அந்த வேகவைத்த நீருடன் சிறுது உப்புச் சேர்த்து, 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு ஸ்பூன் வீதம் குடித்தால் சரியாகும். வயிற்றோட்டத்தின் மூலம் இழந்த சத்துக்களையும் இந்த சூப் ஈடு செய்யும்.

உணவு உண்டப்பின் ஒரு கேரட்டை சாப்பிட உடலில் இருக்கும் தேவையற்ற கிருமிகள் வெளியேறும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர, இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கும்.

கேரட் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு, புதினாசாறு கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

நீரிழிவு நோய் 

நீரிழிவு நோயாளிகள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.

கேரட் இன்சுலினை இயற்கையாக சுரக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக கேரட்டை சாப்பிடலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு மற்றும் தரம் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பது நல்லது.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உடல் எடை குறையும்

கேரட்டை உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கும் அதனால் சாப்பிடும் அளவு குறைந்து உடலில் உள்ள அதிகபடியான சதை குறையும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கேரட் வெளியேற்றும் மேலும் சேரவிடாமல் பாதுகாக்கும்.

அழகுக்கலை 

கேரட்டை தாவரத் தங்கம் என்று சொல்லலாம், ஏன்னெனில் கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி தங்கம் போல் பளபளப்பாகும்.

சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

கேரட்டை அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகப்பரு, முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாகும் சிவப்பழகு கூடும்.

கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறும்.

கேரட் சாப்பிட்டு வந்தால் மேனியில் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் மாறும்.

இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுத்து அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் பொன்னிறமாகும்

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வர, இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றம் மாறும்.

கேரட்டில் சர்க்கரை சேர்த்து, மையாக அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

வலியுடைய மூட்டு வீக்கம்

மூட்டு வீக்கம் மற்றும் வலிக்கு, தினமும் கேரட்டை சாப்பிட்டு வர இதில் உள்ள வைட்டமின் சி, மூட்டு வீக்கத்தை குறைத்து வலியை நீக்கும், மேலும் எலும்புகளை வலுவாக்கும்.

இரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கேரட் சாறு கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் நீங்கி குணம் பெறலாம். .

புற்றுநோயை தடுக்கும்

கேரட் புற்றுநோய் வராமல் காக்கும், ஆரம்ப நிலை நோயாக இருப்பின் முற்றாமல் காத்து, புற்றுநோய் செல்களை அழித்து நோயிலிருந்து விடுபடலாம்.

கேரட் புற்றுநோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்கும் , நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது. கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.

கேரட் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல், பெருங்குடலில், மார்பகப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். எனவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.

பெண்களுக்கு

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.

மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் பேருதவி புரியும். 

பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கேரட்டிற்கு உள்ளது.

கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. இரத்த சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது

உடல் சூடு

கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட்டால்

கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து கேரட்டை மசித்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்.

உடல் வலிமை அடையும்

நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும். இந்த  பச்சைக்  கேரட் ஜூஸ் நம்முடைய உடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்ததை உற்பத்தி செய்யும்.

கேரட்டை சிறு துண்டாக வெட்டிப் பசும் பாலில் போட்டு காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து அருந்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர்ப் பிரச்சனைகள்

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும். சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.

கேரட் ஜூஸ்

உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. ஜூஸ் போட்டு அருந்த விரும்பினால் உடனுக்குடன் ஜூஸ் போட்டு அருந்துவது சிறந்த பலனை கொடுக்கும். ஒரு வாரத்திற்கு 5 கிளாஸ் என்ற கணக்கில் அருந்தினால் போதுமானது அதிகம் அருந்தினால் மூலதொந்திரவு ஏற்படும்.  சருமம் மஞ்சள் நிறமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
.
கேரட் ஜுஸ் தயாரிக்கும் முறை

கேரட்டில் வைட்டமின் A சத்து தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், கேரட்டை துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது தேங்காய்ப் பால் எடுப்பது போல் ஜூசை எடுக்க வேண்டும்) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு கலந்து, இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம். குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.

  • காரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும். 
  • தலைமுடி உதிர்வதை தடுக்கும் முடியும் நீளமாக வளரும்.
  • உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. 
  • நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. 
  • வாயுப் பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும். ஹெர்ண்யா வராது. 
  • கல்லீரல் மற்றும் வயிற்றில் புண்கள், சிறுநீரக கற்க்கள் நீங்க கேரட் ஜூஸ் நல்ல மருந்து.
  • வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் வராமல் பாதுகாக்கும். 
  • நரம்புகள் பலப்படவும், தலைச்சுற்றல், மயக்கம் வராமல் தடுக்கும். 
  • நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும். 
  • சூதகக் கட்டு (மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலி) ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படும்.  
  • ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும். 
  • அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளதால் எலும்புகள் உறுதியாகும் பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம். 
  • முதுமையில் ஏற்படும் கால்சிய இழப்பை சரிகட்டி உடல் பலவீனத்தை போக்கும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது. 
  • கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். 
  • தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க செய்யும். 

கேரட் வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

காரட் மில்க் ஷேக் 1:

ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் கேரட் துருவல் கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதோடு தேவையான அளவு தண்ணீர், கற்கண்டு கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன்படுத்தலாம்.

காரட் மில்க் ஷேக் 2:

இரண்டு கேரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும், 4 பாதாம் பருப்பை தண்ணிரில் ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து, அவித்த கேரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.

கேரட் சட்னி

தேவையானப்பொருட்கள்:

கேரட் – 2 

காய்ந்த  மிளகாய் – காரம் தேவைக்கு ஏற்ப
புளி – தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கேரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.


கேரட் தயிர் பச்சடி 

நம் தேவைக்கு ஏற்ப கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து துருவி எடுத்து,  அதனுடன் 4 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப எடுத்து இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து, கொத்தமல்லி இலை இரண்டு இணுக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு மசித்து வைத்து, தேவையான அளவு உப்பு  அனைத்தையும் மோரில் கலந்து ஊறவைத்தால் கேரட் தயிர் பச்சடி ரெடி. 1 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும். 

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் புற்றுநோயும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம். இதை மிக அதிகமாகத் சாப்பிட்டால் பித்தமாகும்..

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இயற்கை உணவுக்கு மாறுவோம் நோயை வெல்வோம் !  



வாழ்க வளமுடன் 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

Health Benefits of Pomegranate - மாதுளம்பழத்தின் மருத்துவ பயன்கள்

கண்ணைக் கவரும் சிவப்பு நிறப் பழங்கள் 

இயற்கை நமக்களித்த கொடை, சமைக்காமல் உண்ணக் கூடிய உணவான பழமாகும், பழம் நம் நாவுக்கு ருசியை தந்து உடலுக்கு ஊட்டத்தையும் புத்துணர்ச்சியும் வழங்குகிறது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம், நோயுற்றவர்கள் சாப்பிட்டால் உடல் நலம் தேறி புதிய தெம்போடு இருக்கலாம்.

வண்ணத்திற்கும் பழத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அதாவது மனதை கவரும் சிவப்பு வண்ணம் கொண்ட பழங்கள், நம் உடலின் இரத்த சம்பந்தமான நோய்களை தீர்க்கவும், நரம்பு, தசைகள், எலும்புகள், பார்வை மற்றும் சிறுநீரகங்களை பலப்படுத்தவும் உதவும், எல்லாவற்றுக்கும் மேலாக இருதயத்திற்கு சிறந்த டானிக்காக விளங்குகின்றன.

முத்துகளால் நிறைந்த மாதுளம்பழம்

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் தான்  நம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும், உடலில் தேங்கும் கழிவுகளை அவ்வப்போது நீக்கி உடலுக்கான ஆற்றலை கொடுத்து நல்ல உடல் நலத்தோடு நம்மை வைப்பது தான் இயற்கையின் இயல்பே, அதற்கு உதவும் வகையில் நாம் வாழ தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, சிப்பிக்குள் முத்து இருப்பது போல், சிவந்த தோலுக்குள் சத்தான, சிவப்பு நிற முத்துகளை கொண்ட மாதுளம்பழம் பற்றி பார்க்கலாம்.

மாதுளம்பழம் நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து, நமக்கு 
நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியமும் அளிக்கிறது.


மருத்துவ குணங்கள்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.  மாதுளையில் இலை, பூ, மொட்டு, பிஞ்சு, பழம், பழத்தோல், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையவை. மாதுளம்பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், வைட்டமின்களும், உயிர்ச் சத்துக்களும் உள்ளன.

மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78% உள்ளது. புரதச்சத்து 1.6%, நார்ச்சத்து 5%, கார்போ ஹைட்ரேட் 14.5%, தாதுக்கள் 0.7%, சுண்ணாம்புச் சத்து 10%, மக்னீஷியம் 12%, சிலிக் திராவகம் 14 Mg, கந்தகம் 12%,    குளோரின் 20%,    தயாமின் 0.46%, பாஸ்பரஸ் 1.33%, செம்பு 0.2%, நிக்கோடினிக் அமிலம் 0.30% வைட்டமின் C சத்து 16 Mg அடங்கியுள்ளது.

கண்ணுக்கு  பாதுகாப்பு 

மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் பார்வை தெளிவாகும், கண் குறைபாடுகள் நீங்கும், மாலைக் கண்நோய்த் தீரும்.

மாதுளை இலைகளை மையாக அரைத்து கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும்.

கண்ணை திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கி, இமைகள் ஒட்டிக் கொண்டால், ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்த தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

பற்கள் பலப்படும்

மாதுளம்பழம் ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை அழித்து, பற்களையும், ஈறுகளையும் பாதுகாக்கும்.

மாதுளம் மரப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் ஈறு நோய்கள் தீரும், பல் வலி குறையும், ஆடும் பற்கள் கெட்டிப்படும்.

மாதுளம் பூக்களைச் உலர்த்தி தூள் செய்து, கால் டம்ளர் தண்ணீரில் அரை தேக்கரண்டி அளவு போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டைபுண் மற்றும் வலி தீரும்.

சரும வளத்தை பேணும்

கற்கண்டு, வெண்ணை, தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் சம அளவு எடுத்து, கடாயில் போட்டு உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்சி எடுத்து, இதை இரண்டு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற நோய்கள் மறைந்து, சருமம் பழைய நிலையை அடையும்.

துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட புண்கள் வடு இல்லாமல் விரைவில் ஆறும்.

இளமைத் தோற்றம்

மாதுளம்பழத்தை தினம் சாப்பிட்டால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாமல் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

முதுமையின் அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கம் நீங்க மாதுளம்பழச் சாறு மற்றும் வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகப் பேஸ்ட் போல் குழைத்து, தோலில் சுருக்கம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

உடல் அழகுக்கு கை கொடுக்கும் மகத்துவம்

தலையில் ஏற்பட்ட புழுவெட்டால் முடி உதிர்ந்து இருந்தால் 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அரைத்துக் கொள்ள வேண்டும், காலையில் குளிக்கும் முன் புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து சாறு எடுத்து தலை முழுவதும் படும்படி நன்றாக தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, குளிக்கும் போது அரைத்து வைத்த விழுதை தலையில் தேய்த்து நீரில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்தால், புழுவெட்டு நீங்கி முடி வளர ஆரம்பிக்கும்.

மாதுளம்பழத்தின் தோலை நன்றாகக் காய வைத்து பொடியாக்கி, இதனுடன் பாசிப்பருப்பு பொடியை சம அளவு கலந்து, தினமும் குளிப்பதற்கு இந்த பொடியை உபயோகித்தல் வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகும்.

மாதுளை ஜூஸ் ஒரு டீஸ்பூன், சந்தனம் அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.

பருக்களை மறைய வைக்க மாதுளம்பழத்தை உதிர்த்து முத்துக்களை ப்ரீசரில் வைத்து பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் உறைந்துப்போய் இருக்கும் இதை பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் இந்த பொடி, ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பு பொடி, இரண்டையும் எலுமிச்சைச் சாற்றில் கலந்து, முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

வெட்டிவேர் பொடி ஒரு டீஸ்பூன் எடுத்து மாதுளம் பழச்சாறுடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி வந்தால் பரு வராமல் தடுக்கலாம். .

இருமலுக்கு நிவாரணம்

வறட்டு இருமலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்தை சாப்பிட குணமாகும்.

மாதுளம்பழச்சாறு, இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து தேனில் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் தீரும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடி செய்து, மூன்று வேளை ஒரு சிட்டிகை வீதம் தொடர்ந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

இருதய நோய்க்கு தீர்வு  

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துளையிட்டு அதனுள் சமையலுக்கு பயன்படும் பாதாம் எண்ணெயை 15 மில்லிக்கு குறையாமல் செலுத்தி, அந்த பழத்தை இட்லி அவிப்பது போல் அவித்தல் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும் இந்த பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி மற்றும் நீண்ட நாள் இருமல் குணமாகும்.

மாதுளம்பழம் தினம் சாப்பிடுவதால் இருதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்டகொழுப்புகள் தங்காது மேலும் கொழுப்பு அடைப்பு இருந்தால் நீங்கும், இரத்தம் இருதயத்திற்கு தடையில்லாமல் சென்று இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் தடுக்கும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தொடர்ந்து மாதுளம்பழம் பழம் சாப்பிட இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகும்.

மாதுளம் முத்துக்களை மட்டும் சாப்பிடுவதைவிட அதன் விதை மற்றும் தோல் ஆகிய அனைத்தையும் சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படும்

நீரழிவு நோயாளிகள் தாராளமாக மாதுளம்பழத்தை சாப்பிடலாம் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படாது. நீரழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து இரண்டு வாரங்கள் மாதுளை ஜுஸ் கொடுத்து பார்த்ததில் அவர்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள்  

பித்த சம்பந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம் முத்துக்களையும் மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.

மலச்சிக்களுக்கு தீர்வு

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை விதையுடன் நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

வயிற்றுப்போக்கு

மாதுளம் பழத்தின் தோல், விதை, பூ இவற்றில் ஏதாவது ஒன்றை மை போல் அரைத்து எலுமிச்சம்பழம் அளவு 100மி.லி. எருமை தயிரில் கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.

சீதபேதி நோயின் பாதிப்பால் பலவினம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெரும், எடையும் கூடும்.

மாதுளம்பழத் தோலைக் காய வைத்து பொடியாக்கி கால் பங்கு சாதிக்காய் சேர்த்து வெண்ணை அல்லது நெய்யுடன் கலந்து உண்ண சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.

மாதுளம் பிஞ்சு சாறு 50மி.லி. அருந்த மலத்தில் இரத்தம் வருதல் மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்தாகும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்பட்டால் மாதுளை மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால் நோய் குணமாகும்.

மாதுளம் இலைச்சாறு வயிற்றுப்போக்கினை தீர்க்கும். மாதுளம் செடித் தண்டு மற்றும் வேர்ப்பட்டை கசாயம் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும்.

மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து எடுத்து அதனுடன் சிறிதளவு ஏலம், கசகசாவை சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு, அதில் 10 கிராம் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீதபேதியும் குணமாகும்.

வயிற்றுப் பிரச்சனைகள்

புளிப்பு மாதுளையைச் சாப்பிடுவதால் வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. குடற்புண் மற்றும் எல்லாவகை அல்சர் நோய்களையும் குணமாக்குகிறது.

புளிப்பு மாதுளம் பழத்தோல், சாதிக்காய் சம அளவு எடுத்து வினிகர் சேர்த்து நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்து, தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

மாதுளம் பழச்சாறு 1 டம்ளர் மற்றும் தேன் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் தீரும், வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சி, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேறி விடும்.

மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து, இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.

மாதுளம்பழம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தால் குணமாகும் மேலும் உமிழ்நீரை அதிகம் சுரக்க வைத்து ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும்.

மாதுளம் விதை மற்றும் உட்சதைப்பற்று வயிற்று வலியினை போக்கும்.

மூல நோய்க்கு நிவாரணம்

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லி எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் ஆசனக்கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம், இரத்த மூலம் ஆகியவை ஒழியும். உடல் சூடு தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் தீரும். (பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்).

மாதுளம்பூச்சாறு 300மில்லி, பசு நெய் 200 கிராம் சேர்த்து கடாயில் போட்டு, பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை தொடர்ந்து இருபது தினங்கள் இந்த நெய்யை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும். இரண்டு மாதம் சாப்பிட்டால் கடுமையான சயரோகப்பாதிப்பு (காசநோய்) படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும்

மாதுளம் இலை கசாயம் மூல நோயிலிருந்து காக்கும்.

சிறுநீரகப் பிரச்சனைகள்

மாதுளம்பழச் சாறு ஒரு டீஸ்பூன், அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறு சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரகக்கல் பிரச்சனை தீருமாம்.

சிறுநீர் வெளியேறாமல் கஷ்டப்படுபவர்கள் புளிப்பு மாதுளையைச் சாப்பிட்டால் தடைநீங்கி சிறுநீர் எளிதாக வெளியேறும். நீர்க்கடுப்புக்கும் நல்ல பலன் தரும்.

மாதுளம் பழச்சாறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படுகிறது.

இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்

நாள்ப்பட்ட நோயின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை வேளையில் அருந்தினால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் அடையும் புது ரத்தம் உற்பத்தியாகும்.

மாதுளம்பழத்தில் உள்ள வைட்டமின் C சத்து இரத்த உற்பத்திக்கும், இரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது.

மாதுளம்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும்.

மாதுளம்பழத்தில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து இரத்தச் சோகையை குணப்படுத்தும்.

எடையை குறைக்கும்

மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, தசையும் இறுகும்.

மாதுளம்பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு உடலில் மேலும் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும், குண்டானவர்கள் அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

புற்றுநோயை தடுக்கும்

மாதுளம்பழம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. . ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய்யை - Prostate Cancer (சிறுநீர்ப் பையை சுற்றி ஏற்படும் புற்றுநோய்) தடுக்கும் வல்லமை மாதுளம்பழத்திற்கு உண்டு.

மாதுளம்பழம் நம் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, நோய் தாக்கம் இருப்பின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து மேலும் பரவாமல் பாதுகாக்கிறது, இறந்த செல்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தி நோயின் பாதிப்பிலிருந்து வெளிவர உதவுகிறது.

உடல்ச்  சூடு நீங்கும்

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியை தரும்.

மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும், அதிக தாகத்தைப் போக்கும்.

பெண்கள் மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் வெப்பநோய், தலைவலி தீரும்

பெண்களுக்கான குறிப்புகள்

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் மேம்படும்.  
கருவுற்றிருக்கும் பெண்களின்  மசக்கை, வாந்திக்கு மாதுளம்பழம் சிறந்த மருந்து.

பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து 30 மில்லி வீதம் மூன்று வேளை மூன்று தினங்களுக்குக் கொடுக்க தீரும், மூக்கிலிருந்து இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் வெல்லம் 25 கிராம் சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பழச்சாறு கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகையை சரிசெய்யும். குழந்தை பெற்றபின் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்ட வேண்டும்.

கர்ப்பிணிகள் தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிடுவதால் தாய்க்கும், சேய்க்கும் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

மாதுளம்பழம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை தீர்க்கும்.

ஆண்களுக்குக் குறிப்புகள்  

ஆண் தன்மை பாதிப்பு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து உடலுக்கு சக்தியை கொடுக்கிறது.

மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

மேக நோய்

மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் (வெட்டை நோய் என்னும் பால்வினை நோய்) பாதிப்பு நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.

மயக்கம் தெளியும்

அடிக்கடி மயக்கம் ஏற்படும் தன்மை உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தீரும்.

அளவுக்கு மீறிய போதையில் மயங்கி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுத்தால் போதை தெளியும்.

மயக்கம், தலைசுற்றல் தீர மாதுளம்பழச்சாறு 100 மில்லி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மேலும் பிரயாணத்தின் போது வாந்தி வருவது போன்ற உணர்வு, அடக்கடி ஏற்படும் தொண்டை வறட்சி, புளிச்ச‌யேப்பம், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் பயன் தரும்.

மாதுளம் பூ

மாதுளம்பூ கசாயம் அருந்தினால் இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு தீரும், உடல் சூடு தணியும், இரத்தம் சுத்தம் அடைந்து இரத்த விருத்தி உண்டாகும்.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு, மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும்.

மாதுளம்பூக்கள், அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம் சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து, 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சிறிது சேர்த்துக் கலக்கி காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜி, மூலச்சூடு, வெட்டைநோய், நீர்க்கடுப்பும் குணமாகும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் தீரும்.

முழு மாதுளம்பழத்தை சாப்பிடலாமா ? 

மாதுளம்பழம் என்றாலே அதன் முத்துக்களின் சாறை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்து விடுவோம், ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில் தான் உள்ளது. அதனால் விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும். மேலும் அதன் தோலையும் சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும், முடியாத பட்சத்தில் தோலை பதப்படுத்தி சாப்பிடலாம்.

மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


  • நினைவாற்றல் பெருகும். 
  • நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்களின் உடல் நலம் தேறி உடல் எடை கூடும். 
  • தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
  • விக்கல் ஏற்படும் போது சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
  • கால்சியம் உடலில் சேருவதற்கு உதவுவதால் பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். 
  • இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. 
  • நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும். 
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் பால் உணர்வுகளை தூண்டும் ஆற்றல் பெற்றது.
  • இரத்த ஓட்டத்திற்கு ஏற்றது மாதுளை.
  • உடலுக்கு சக்தியை தரக்கூடியது மாதுளை. 
  • உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் (மந்தநிலை) தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது.

மாதுளம்பழம் மணப்பாகு

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சர்க்கரை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து மீண்டும் பாகுபதம் வரும் வரை சூடு செய்து, பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும். பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி கரு வளர்ச்சிக்கு உதவும் இரத்த விருத்தி ஏற்படும்.

மாதுளம்பழச் சாறு

மாதுளம்பழம் சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறு எடுத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அருந்தலாம், மாதுளம்பழச் சாற்றல் ஏற்படும் நன்மைகள் :

செரிமானத் திறன் குறைந்தவர்கள், அடிக்கடி மலம் கழிப்பவர்கள், அதிக உடல் எடை மற்றும் ஓய்வற்ற உழைப்பால் மன உளைச்சல், உடற்சூடு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, குமட்டல், மயக்கம், விக்கல், வாய்நீர்ச் சுரப்பு, நெஞ்சுச் எரிச்சல், புளிச்சயேப்பம், காதடைப்பு, போன்ற தொல்லைக்கு தொடர்ந்து அருந்த குணமடையலாம்

காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் ஒரு மாதம் அருந்தினால் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்து அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும்.

மாதுளை பழத்தின்  தோலை உரித்து சாப்பிடுவதற்கு சோம்பல்பட்டு, பலர் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர். எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான் அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள்.


மாதுளை பொறாமையையும் பகையுணர்வையும் நம்மிடம் இருந்து நீக்கும் ஆற்றல் படைத்தது எனவே அதனை விரும்பி உண்ணுங்கள் என முகமது நபி அவர்கள் கூறியிருக்கிறார்.


வாழ்க வளமுடன்