செவ்வாய், 24 அக்டோபர், 2017

Salt - உப்பு

உப்பை அறிவோம் நலமுடன் வாழ்வோம் !!!

அயோடைஸ்டு உப்பு சிறந்ததா? சாதாரண உப்பு நல்லதா? குறைந்தால் தைராய்டு வருமா? இப்படி இயல்பாகவே உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பைப்பற்றி மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு. 

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற பரவலான கருத்தும் உள்ளது. ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்துத்தான் உணவு சமைக்கிறோம். அதில் ஒரே அளவில்தான் உப்பு சேர்க்கிறோம். ஆனால், அனைவருக்கும் ரத்த அழுத்தம் இருப்பதில்லையே... இன்னும் சொல்லப்போனால் ஊறுகாய், அப்பளம் என உப்பு நிறைய எடுத்துக் கொள்பர்களுக்கெல்லாம் ரத்த அழுத்தம் உருவாவதில்லையே,  இதற்குக் காரணம், சோடியம் தவிர வேறு காரணிகளாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். ஒருவரின் உப்பின் உணர்திறன்(Salt sensitivity) காரணமாக ஒவ்வொரு நபருக்கும் ரத்த அழுத்தத்தில் சோடியத்தினால் ஏற்படும் விளைவு வித்தியாசமாக இருக்கிறது. Salt sensitivity என்பது உப்பு உட்கொள்ளும்போது ஒருவருடைய ரத்த அழுத்தம் எவ்வாறு பிரதிபலிக்கிறது அல்லது எதிர்வினையாற்றுகிறது என்பதைக் குறிக்கிறது.

இந்த சால்ட் சென்சிட்டிவிட்டியைப் பொறுத்தவரை மனிதர்கள் இரண்டு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். உப்பு உணர்திறன் கொண்டவர்கள்(Salt sensitive) அல்லது உப்பு எதிர்க்கும் திறன்(Salt resistant) உடையவர்–்கள். சால்ட் சென்சிட்டிவிட்டி இருப்பவர்கள் சால்ட் ரெசிஸ்டன்ட் கொண்டவர்களை விட உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றினால் அதிக அளவில் ஆபத்துக்கு உள்ளாகின்றனர். அதிக சோடியம் சேர்க்கப்பட்ட உணவு இவர்களது ஆபத்தை இன்னும் அதிகரிக்கிறது.

நீங்கள் Salt Sensitivity உள்ளவரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு நபர் சால்ட் சென்சிட்டிவிட்டி அல்லது சால்ட் ரெசிஸ்டன்ட் இருந்தால் அதை அளவிட பல வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி...4 நாட்களுக்கு ஒரு சோடியம் உணவை(சுமார் 230 மி.கி. சோடியம் அல்லது 600 மி.கி. டேபிள் சால்ட்) சாப்பிடுவது, 4 நாட்களுக்குப் பிறகு உயர் சோடியம் உணவு (4.6 கிராம் சோடியம் அல்லது 12 கிராம் டேபிள் சால்ட் ஒரு நாளைக்கு) எடுத்துக் கொண்டு, உயர் சோடியம் காலக்கட்டத்தின் முடிவில் ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 5% அதிகரித்தால், அவருக்கு உப்பு உணர்திறன் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில், அவர் உப்பு எதிர்ப்பு உள்ளவர் என்று கூறப்படுகிறது.

இதற்கு என்ன தீர்வு?

உப்பு உணர்திறன் உள்ளவர்கள் தங்கள் உணவில் இருக்கும் சோடியத்தின் அளவு பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உணவில் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகரிப்பது நல்லது. அதனுடன் கீழ் குறிப்பிட்டுள்ள ஐந்து எளிய வழிமுறைகளை பின்பற்றுவது மூலம் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து தங்களை பாதுகாக்கலாம்.

* காய்கறி மற்றும் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை சோடியம் குறைவாகவும் மற்றும் பொட்டாசியம் அதிகமாகவும் கொண்டவை.

* புதிதாக சமைத்த உணவுகள் மற்றும் குறைவாக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுங்கள். புதிய உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட குறைந்த அளவே சோடியம் கொண்டிருக்கும்.

* Baked உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதில் பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதில் இருக்கும் சோடியம் பற்றி பெரும்பாலும் மக்களுக்கு தெரிவதில்லை.

* பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துப் பட்டியலை படித்து பார்க்க வேண்டும். சோடியம் குறைவான உணவுகளை தேர்வு செய்ய இது உதவும்.

* உணவகங்களில் சாப்பிடும்போது, உப்பு குறைவான அளவில் உள்ள உணவுகளை தேர்வு செய்யுங்கள். சாஸ், மையோனஸ் போன்றவை அதிக உப்பு உள்ளடங்கியது. சைனீஸ் உணவு வகைகளில் சில மோசமான சுவையூட்டிகள் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த உணவகங்களில் எம்மாதிரியான உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசித்து தேர்வு செய்வது நல்லது.

* நம் மூதாதையர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காடுகளில் பசிக்கும்போது கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உண்டும் வாழ்ந்து வந்தனர். அதனால் உணவை நீண்டநேரம் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அதனால், சமைக்காத உணவுகளிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கிராம் அளவிலான உப்பையே உட்கொண்டனர்.

சுவையாக சாப்பிடவும், அதை நீண்ட நேரமோ, நாட்களோ பாதுகாப்பதற்காக வேண்டி உப்பை சேர்க்கத் தொடங்கிய பின்னர், அதிகமான பயன்பாட்டுக்கு உப்பு வந்துவிட்டது. தற்போது ஒருநாளைக்கு 10 கிராம் அளவுக்கு உப்பை சேர்த்துக் கொள்கிறோம். அதாவது உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய அளவை விட அதிகம். இந்த பழக்கமே ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்க காரணமாகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு நாளைக்கு 1500 மி.கி. அல்லது 1/2 தேக்கரண்டி உப்பு பரிந்துரை செய்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய உணவுகளான பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்துகள் ஆகியவை உணவில் நிறைந்திருக்க வேண்டும். கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக இருக்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிக சோடியம் நிறைந்த உணவுகளால் ஏற்படும் பாதிப்பை சமநிலைப்படுத்த முடியும்.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்

காய்கறிகள்: பீட்ரூட், உருளைக்கிழங்கு, கீரை, பூசணிக்காய், டர்னிப், காளான், தக்காளி, சோளம், பீன்ஸ், ப்ரோக்கோலி.

பழங்கள்: கொய்யா, ஆப்ரிகாட், வாழைப்பழம், கிவி, முலாம்பழம்,மாம்பழம், பேரீச்சம்பழம்.

பீன்ஸ் வகைகள் : லிமா பீன்ஸ், சோயா, கிட்னி பீன்ஸ், பாசிப்பயறு, மொச்சை பருப்பு.

நட்ஸ்: ஆளிவிதைகள், வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா பருப்பு, பரங்கி விதை.

தானியங்கள் : குத்தரிசி, பார்லி, ஓட்ஸ், முழு கோதுமை.

இப்பொழுது உப்பு பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் உணவில் சரியான அளவில் உப்பை சேர்த்துக் கொண்டு உடல்
ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

குங்குமம் டாக்டர் 01 Sep 2017

சனி, 23 செப்டம்பர், 2017

Child Care - குழந்தைகள் நலம்

குழந்தைகள் வளரும் வீடு !!!

‘‘சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க இன்னொன்றும் அவசியம். அது குழந்தை வளரும் வீட்டின் சூழல்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரியா சந்திரசேகர்.

சரி... குழந்தைகள் வளரும் வீடு எப்படி இருக்க வேண்டும் ?

‘‘குழந்தை வளர்ச்சியில் வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஆரம்பகட்டத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வளர்ச்சியடைகிறது. அதனால் வீட்டு சூழலிலும் கவனம் செலுத்துவதும் அவசியமான ஒன்று. முதலில் குழந்தைகள் வளரக்கூடிய வீடு இரைச்சல்கள் இன்றி அமைதியாக இருக்கவேண்டும்.

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ இருக்கக்கூடாது. மாத்திரை, மருந்துகளை குழந்தைகள் கண்ணில் படும்படி வைக்காமல் இருப்பதும் அவசியம்.

குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களால் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பாதிப்புகள் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு விலை உயர்ந்த விளையாட்டு பொருட்கள் வாங்கி தர ஆசைப்படுவது தவறில்லை. அதன் பொருளாதார மதிப்பு நமக்குத்தான் தெரியும். ஆனால், குழந்தைக்கு அது வெறும் பொருள்தான். அதனால், காஸ்ட்லியான பொருட்களை குழந்தை உடைத்த பிறகு கோபப்படுவது, அடிப்பதில் நியாயம் இல்லை.

குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டு பாடும் பழக்கம் நம் கலாசாரத்தில் உண்டு. இதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், மன வளர்ச்சியும் மேம்படும் வாய்ப்பு அதிகம். தாயுடன் உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் உருவாகும்.
அதேபோல், குழந்தைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் நம்முடைய நல்ல பழக்கங்கள் குழந்தைகளின் மனதிலும் ஆழப்பதியும்.

இவற்றுடன் வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் முடிந்தால் கவனம் செலுத்தலாம்கண்ணுக்கு இதம் தரும் வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, பொம்மை படங்கள் வரைந்து வைப்பது, பூக்களால் அலங்கரிப்பது, பூந்தொட்டிகள் வைப்பது போன்றவை குழந்தையின் மனதை குதூகலப்படுத்தும். வீட்டின் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு போன்ற பிராணிகளோடு விளையாட விடும்போது வேறு உயிர்களின் அறிமுகமும் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.

ஆனால், அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் கண்காணிப்பதற்கும் மறக்க வேண்டாம். மேலும், குழந்தைகளுக்காக பாடுவது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, குழந்தையை வீட்டுக்குள்ளே பொத்தி வைக்காமல் அவர்களுக்கு வெளி உலகத்தை அறிமுகப்படுத்துவது, சக குழந்தை களோடு அவர்களை விளையாடும் சூழலை உருவாக்குவதும் அவசியம்’’ என்கிறார்.

குங்குமம் டாக்டர் 16 Dec 2016

Mental Stress - மன அழுத்தம்

மன அழுத்தம் நீங்க வழிகள்

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.

மனச்சோர்வை விட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.
இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:

பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.

அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.

தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:

தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:

மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்கலாம் என்று அக்குபஞ்சரில் அறிவுறுத்தப்படுகிறது.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.
2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.
3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:

எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

கவனம் குவியுங்கள்:

மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:

பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

Healthy Foods - ஆரோக்கிய உணவுகள்

இயற்கை இனிப்பு லட்டு

முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.

பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொண்டு, அரைத்த கலவையை லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்: ஊட்டச்சத்தான லட்டு. பலவீனமான குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம். ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.

இயற்கை உணவு முறைகள்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சேற்றுப்புண் -

சேற்றுப்புண்களை குணமாக்கும் வழிமுறைகள் !!!

மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். 


சேற்றுப்புண், சாதாரணமாகத் தொடங்கும். படிப்படியாக தொந்தரவு அதிகமாகிவிடும். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும். காலணிகள், பயன்படுத்த முடியாது. நடப்பதற்கே சிரமமாகிவிடும். 

சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நுண்கிருமிகளின் தொற்றினால்  கால்களில் உண்டாகும் புண்களையே சேற்றுப்புண் என்கிறோம். மண், சேறு சகதியில் உள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள் கால் விரல்களின் இடுக்குகளில் தங்கிவிடும். வியர்வை காரணமாக  வேகமாக வளரத்தொடங்கும். கால்களை சரியாக சுத்தப்படுத்தாமல் விட்டால், சேற்றுப்புண் வரும். இந்த புண்கள் பெரும்பாலும் பாதங்களிலும், விரல்களுக்கு நடுவிலும் வந்து பாடாய்ப் படுத்தி எடுக்கும். 

"மிகுந்த கவனத்துடன் கால்களைப் பராமரிப்பதன் மூலம் சேற்றுப்புண்ணை தவிர்க்கலாம்" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

சேற்றுப்புண்ணில் இருந்து கால்களை எப்படி காத்துக்கொள்வது? 

சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு என்ன தீர்வு? விரிவாக விளக்குகிறார் அவர். “மழை காலத்தில் வந்து நம்மை அவதிக்கு உள்ளாக்கும் சேற்றுப்புண் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவ நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு சமஸ்கிருதத்தில் 'அல்ச' என்று பெயர்.  'இது சகதியில் பாதங்களை வைப்பதால் ஏற்படுகிறது என்றும் இது பாதங்களில் இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. 

எப்படி வருகிறது?


தொடர் மழையால் தேங்கி நிற்கும் நுண்கிருமிகள் தாக்குதல் இந்த சேற்றுப்புண் தொந்தரவுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் எப்போது ஈரப்பதமான  இடங்களில் நின்று கொண்டு வேலை செய்பவர்களை சேற்றுப்புண் அதிகம் பாதிக்கும். மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்பது, பாதங்களில் அழுக்கு சேர்வது போன்ற  காரணங்களால் இது தீவிரமாகும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?

சேற்றுப்புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  ஈரப்பதம்.  துணி துவைப்பது போன்ற வேலைகளின்போது, அதிக நேரம் தண்ணீரில் நிற்க வேண்டியிருக்கும். அதுபோன்ற வேலைகளை முடித்துவிட்டு, மென்மையான துணியைக்கொண்டு கால்விரல்களையும் இடுக்குகளையும் நன்றாகத் துடைக்க வேண்டும். அதேபோல, மழைநீரில் நனைந்த கால்களை வீட்டிற்கு வந்ததும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

காலணிகளையும் நன்றாக கழுவிய பின் சுத்தம் செய்து உலர்ந்த பின்பு மீண்டும் பயன்படுத்தலாம். வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ,  எலுமிச்சை பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம். ஒரு கைப்பிடி அளவு  வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.

வீட்டில் அரிசியை அலசும் தண்ணீரை சேகரித்து, அதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு பாதங்களை கழுவிய  பின்பு  ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். 

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.

சேற்றுப்புண் பாதித்தவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

மேற்கண்ட வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி  பாதங்களை  நன்றாக கழுவி பின்பு ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துப் பூச வேண்டும். அதேபோல, அறுகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூசலாம்.

மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.  மஞ்சளை மட்டும் நீர்விட்டு அரைத்துப் பூசலாம். அம்மான் பச்சரிசி இலையை அரைத்தும் பூசலாம். வேப்பெண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம். வேப்பிலையும் எள்ளையும் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவலாம். 

கால்களை பராமரியுங்கள்

'சிந்துராதி லேபம்',  'மகாதிக்தக லேபம்' போன்ற மருத்துகளை காலை மாலை இரு வேளை பூசிக் கொள்ளலாம், இது தவிர ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும்  சுத்தமான தேங்காய் எண்ணெயும் சூடு செய்து பூசலாம். 

குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண்  வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம். இதனால் எரிச்சல் இல்லாமல் இருக்கும். 

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சேற்றுப்புண் வந்தால் பெரும்பாலும் விரைவில் ஆறாது. எனவே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. பொதுவாக, சேற்றுப்புண் வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.." என்கிறார்.

ஜி.லட்சுமணன்
விகடன் ஆரோக்கிய செய்திகள்

குடல் சுத்தம் - Clean Intestine

குடல் சுத்தமானால் உடல் சுத்தமாகும் !!!

‘‘உண்ணும் உணவு செரிமானம் ஆகக்கூடிய ஒரு முக்கியமான பகுதிதான் குடல். அத்தோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொண்டு உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதும் குடல்தான். அதனால் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக்க அவசியம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.

குடலை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதற்கான சில எளிய வழிமுறைகளையும் கூறுகிறார்.

குடலை நான்கு பகுதிகளாக பிரித்து வைத்திருக்கின்றனர். வாய், உணவு செல்லும் பாதை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவையாகும். உணவை நாம் வாயில் சாப்பிட ஆரம்பிக்கிறோம். அது கடந்து உணவுப் பாதை வழியாக இரைப்பைக்குச் செல்கிறது. அப்போது உணவை உடைக்கக்கூடிய சில அமிலங்களின் மூலம் இரைப்பையில் உணவு சென்று உடைகிறது. அதன் பிறகு உணவு கூழ் ஆக்கப்பட்டு சிறுகுடலுக்குச் செல்கிறது.

சிறுகுடலில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறியப்பட்டு, பெருங்குடலுக்குச் சென்று மேலும் சில சத்துக்கள் உறியப்பட்ட பிறகே மலமாக தங்கியிருந்து ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதுவே குடலின் முக்கியமான பிரதான பணியாகும். அதனால் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்.

மனோநிலையிலும் கவனம் அவசியம்

நம் உடலுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும்போது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆரோக்கியமான உணவை உண்ணும்போது நம்முடைய மனமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சாப்பிட அமரும்போது தொலைத்தொடர்பு சாதனங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு அமைதியாகவும், மகிழ்ச்சியான மனநிலையிலும் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

ரசித்து சாப்பிடுங்கள்

உங்கள் தட்டில் இருக்கும் உணவை அதை கையில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாயில் இருக்கும் உணவை மென்று எச்சில் ஊற ரசித்துச் சாப்பிட வேண்டும். அத்தோடு உணவை அவசரகதியில் எடுத்துக் கொள்ளாமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்பதும் அவசியம். அதேபோல, உணவை நன்றாகப் பசித்தபிறகே எடுத்துக் கொள்ள வேண்டும். இது நாம் நம் குடலுக்கு பெரிதும் உதவுவதாகும்.

ஆயுர்வேதம் காட்டும் வழி

உணவை எடுத்துக் கொள்ளும்போது ஆயுர்வேத மருத்துவத்தின்படி இரைப்பையை நான்கு விதமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இரைப்பையின் பாதி பகுதி திட உணவாலும், கால் பகுதி திரவ உணவாலும், கால் பகுதியை காலியாகவும் விட்டுவிட வேண்டும். இதன் மூலம் உங்களுடைய குடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக உறியப்பட்டு சரியாக வெளியேற்றப்படும்.

மலம் கழிக்கும் முறை

முடிந்தவரை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மலம் கழிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஒரு முறையாவது, அதுவும் அதிகாலையில் மலம் கழிப்பது நல்லது. அதேபோல உடலில் தேங்கியுள்ள மலம் வெளியேற்றுவதற்கான சரியான நேரமாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி சரியான நேரமாகும். அப்போதுதான் உடலில் அபான வாயு திறன்மிக்கதாக இருக்கிறது. திறன்மிக்கதான இந்த வாயு மலத்தினை வெளியேற்றுவதற்காக உதவுகிறது. அதிகாலையில் எழுவது அவசியம் என்று கூறுவதற்கு இதுவும் முக்கியக் காரணம்.

விரதம் இருக்கலாமா ?

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரதம் எடுப்பது நல்லது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு நாள் முழுக்க எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் பசிக்கும்போது எடுத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் திரவ உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய குடல் பகுதி புத்துணர்வு பெற்று வலிமை மிக்கதாக மாறுகிறது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை...

மருத்துவரின் ஆலோசனைப்படியும், அவரின் வழிகாட்டுதல்படியும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள எல்லா கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியமாக இருப்பதோடு புத்துணர்வும் பெறுகிறது. முக்கியமாக, பேதி மாத்திரை எடுத்துக் கொள்ளும் ஒரு நாள் மட்டும் அரிசி கஞ்சி, தயிர்சாதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் உடலை நோய் நொடி இல்லாமல் வைத்துக் கொள்ள முடியும்.

நோயாளிகளின் கவனத்துக்கு

மேலே குறிப்பிட்ட எல்லா வழி முறைகளும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதனால் ஏற்கெனவே வயிறு பிரச்னை உடையவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் முறையான ஆலோசனையின்படியே இந்த வழி முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றாடம் செய்ய வேண்டியது

சாப்பிட்டவுடனே தூங்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நேரத்துக்குத் தூங்கி அதிகாலையில் எழுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப் பகுதியை நன்றாகத் துலக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் 10 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பது வாயை நன்கு சுத்தப்படுத்தும்.

காலையில் எழுந்தவுடன் வெது வெதுப்பான சுடுதண்ணீர் குடிப்பதும் நல்லது. இது மலம் கழிப்பதை சுலபமாக்க உதவும். அடிக்கடி தேநீர், காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது எல்லா விதங்களிலும் நல்லது. அதேபோல் சாப்பிடும்போது அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாது. முதல் வேளை உணவுக்கும் இரண்டாம் வேளை உணவுக்கும் இடையில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.

சக்தியை இழக்காதீர்கள்!

பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதுபோல நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த வகை உணவும் சரியான தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நிலையிலோ அதிக வெப்ப நிலையிலோ இருக்கக் கூடாது. இதனால் குடல் செரிமான சக்தியை இழக்க நேரிடும்.

குங்குமம் டாக்டர் 01 Sep 2017

புதன், 20 செப்டம்பர், 2017

தலைவலி - Headache

தலைவலி !!!
தலைக்குள் இடி இடித்தால் !! வலியும் வாழ்வும்....!!
‘தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று ஒருவரை சித்தாந்தம் பேச வைக்கும்அளவுக்கு தலைவலியின் அனுபவம் பயங்கரமானது. இலங்கையில் என்ன காரணத்தாலோ ‘மண்டையிடி’ என்று தலைவலிக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தலைவலிக்காரர்களுக்கு சங்கம் கூட உண்டு.
ஆன்மிக பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் போல் தலைவலிக்காகவே தனிப் பத்திரிகைகளும் வருகின்றன. தலைவலி பற்றி தேடினால் பிரத்யேக இணையதளங்கள் கூகுளில் வரிசை கட்டுகின்றன. இத்தனைக்கும் காரணம், தலைவலியின் கொடுமையான வில்லத்தனம்தான்!
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் தினேஷ் நாயக்கிடம் இதுபற்றிக் கேட்டபோது தலைவலியின் பல வகைகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் விளக்கினார். ‘‘சாதாரண தலைவலி முதல் ஆபத்தான தலைவலி வரை பல வகைகள் உண்டு.
இவற்றை முதல்நிலைத் தலைவலி, இரண்டாம் நிலைத் தலைவலி என்று இரண்டாகப் பிரித்துவிடுவோம். பொதுவாக நம்மில் பலருக்கும் வருவது முதல் நிலைத் தலைவலிதான். மன அழுத்தம், போதுமான தூக்கம் இன்மை, வெயில், சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிதான் அதிகம்.
இவை முதல்நிலையைச் சேர்ந்தவை. இந்தத் தலைவலிகள் தொந்தரவு தருமே தவிர, வேறு பிரச்னைகள் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவலிகள்தான் மிகவும் ஆபத்தானவை’’ என்று இடைவெளி விடுகிறார்.‘‘இந்த முதல்நிலைத் தலை வலியில் வழக்கமாக வரும் டென்ஷன் தலைவலியுடன், சைனஸ் அறைகளில் அடைப்பு ஏற்படுவதால் வரும் சைனஸ் தலைவலி, மைக்ரேன் தலைவலி, க்ளஸ்டர் ஆகிய 3 தலைவலிகள் நம்மை அதிகம் பாதிப்பவை.
இதில் டென்ஷன் தலைவலி வருவதற்கு அதிகம் யோசிப்பது, மன அழுத்தம், வேலைப்பளு, பதற்றம் போன்ற வாழ்க்கைமுறை குளறுபடிகள்தான் காரணம். 70 சதவிகிதம் பேருக்கு வந்துவிட்டுச் செல்வது இந்த டென்ஷன் தலைவலிதான். யோகா, தியானம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டாலே இந்தத் தலைவலி நம்மை அண்டாது.
இதற்கு அடுத்து மைக்ரேன் தலைவலி அதிகம் பாதிக்கிறது. தலையின் ஒரு பக்கமாக வலி ஏற்படுவதால் ‘ஒற்றைத் தலைவலி’ என்றும் பெயர் உண்டு. ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் ஏற்றுக் கொள்ளாதது, குளித்துவிட்டுக் கூந்தலை உலர்த்தாமல் இருப்பது, அதிக வெயில், உரிய நேரத்தில் சாப்பிடாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்தத் தலைவலி தூண்டப் படும். பெண்களுக்கே மைக்ரேன் தலைவலி அதிகம் வரும் என்பதால் ‘பெண்களின் தலைவலி’ என்றும் பெயர் உண்டு.
மைக்ரேன் தலைவலி பெண்களுக்கு மட்டும் வருவதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. குறிப்பிட்ட சூழல் தலைவலியை தூண்டுவதை கவனித்து, அந்தக் காரணங்களை தவிர்த்தாலே இதிலிருந்து தப்பிக்கலாம். க்ளஸ்டர் தலைவலி அதிகமாக ஆண்களையே பாதிக்கும் என்பதால், ‘ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டுப் போகும்.
ஒரு மணி நேரம் என்றால் அந்த ஒருமணி நேரமும் பாடாகப்படுத்திவிடும். இந்தத் தலைவலி வந்தால் கண்களுக்குப் பின்னால் தாங்க முடியாத வலி ஏற்படும்... கண்ணீர் வரும்... கண் சிவக்கும்...
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். ஆனால், மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் வரும். மது, புகைப்பழக்கம், பருமன் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு ஏற்படும் தலைவலி என்பதால் தீய பழக்கங்களுக்குத் தடா போட்டாலே இதிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.
இதில் இரண்டாம் நிலைத் தலைவலிகள் ஏற்படுவதற்கு ரத்த அழுத்தம் அதிகமாவது, கண் தொடர்பான குறைபாடுகள், மூளைக்காய்ச்சல், மூளையில் கட்டி, ரத்தக்குழாய் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற சீரியஸான பிரச்னைகள் காரணங்களாக இருக்கலாம். இந்த இரண்டாம் நிலைத் தலைவலியிலும் நிறைய வகைகள் உள்ளன. tலீuஸீபீமீக்ஷீநீறீணீஜீ லீமீணீபீணீநீலீமீ ஏற்பட்டால் தலைக்குள் இடி இடிப்பது போல, மிக அதிகமான வலி உண்டாகும்.
மூளையில் ரத்தக் குழாய் வெடிக்கும்போது இது போல் அதீத வலி ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக கை, கால் செயலிழப்பதும் நடக்கும். இப்படி திடீர் என்று அதீத தலைவலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். இப்போது லேஸர் தொழில்நுட்பம் வந்துவிட்டதால் இதயத்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது போல, வலி இல்லாமலேயே இந்த ரத்தக் குழாயின் வீக்கத்தை சரி செய்துவிடுவார்கள்.
சிலருக்கு தூக்கத்தில் திடீர் என தலைவலி ஏற்படும். தலைவலியுடன் தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். நீண்ட நாட்களாக இப்படி தலைவலியால் தூக்கம் கலைந்து அவதிப்படுகிறவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு களால் சிலருக்கு தலைவலி வரலாம். இதன் தொடர்ச்சியாக வலிப்பு, கை, கால்கள் செயலிழப்பது, பதற்றம் போன்றவையும் ஏற்படும். மதுவுக்கு அடிமையான ஆண்களுக்கும், பிரசவத்துக்குப் பிறகு 2 அல்லது 3 நாட்களில் பெண்களுக்கும் இந்தத்தலைவலி ஏற்படலாம்.
தலைவலியுடன் காய்ச்சலும் சேர்ந்து வருவதற்கு Meningitis என்ற மூளைக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம். நடுத்தர வயதினரில், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் Temporal arteritis என்ற ரத்தக்குழாயில் ஏற்படும் கோளாறால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். இந்தக் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை செய்யும்போது ஈ.எஸ்.ஆர். என்ற முடிவின் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள்.
இந்தத் தலைவலிகளில் நமக்கு ஏற்படு வது சாதாரண முதல்நிலைத் தலை வலியா, ஆபத்தான இரண்டாம் நிலைத் தலைவலியா என்பதை ஒரு மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும். அடிக்கடி தலைவலி வருகிறவர்கள், அதீத தலை வலியால் அவதிப்படுகிறவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.
இரண்டாம் நிலைத் தலைவலியாக இருக்கலாம் என்று மருத்துவர் சந்தேகிக்கும் பட்சத்தில் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் மூலம் அது எந்தத் தலைவலி என்பதை உறுதிப்படுத்திவிடுவார். அதனால், நாமே ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டோ, சுய மருத்துவம் செய்து கொண்டோ அலட்சியப்படுத்துவது நல்லதல்ல!’’ என்று எச்சரிக்கிறார் தினேஷ் நாயக்.
‘பெண்களின் தலைவலி’‘‘மைக்ரேன் தலைவலிக்கு என்றும் க்ளஸ்டர் தலைவலிக்கு ‘ஆண்களின் தலைவலி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்...’’
தலைவலியால் தூக்கம் கலைந்து ‘‘நீண்ட நாட்களாக அவதிப்படுகிறவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு...’’

குங்குமம் டாக்டர் 14 Nov 2014

Useful Medical Tips - உபயோகமான மருத்துவ டிப்ஸ்


நினைவாற்றல்

1. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.


அல்லது 

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
20/9/2017


2.  ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க சீதபேதி குணமாகும்.

3. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
21/9/2017
4. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

5. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
22/9/2017

6. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

7. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
23/9/2017