மலச்சிக்கல் தீர எளிய வழிகள்…
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.
மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.
கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும் போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம்.
இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
* போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். தினமும் குறைந்தது 2.5 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
* வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும். மேலும் கண் பார்வை தெளிவாகும். மூலாதார சூட்டையும் தணிக்கும்.
* தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.
* தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.
* இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி, புட்டு, இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.
* காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவதுடன், சரிவிகித உணவு உட் கொள்ளவும்.
* வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.
* மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும்.
* மன அழுத்தம் தவிர்க்கவும்.
மலச்சிக்கல் நீக்கும் உணவுகள்
* காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும்.
* இளநீர், பழச்சாறு அருந்தவும்.
* இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சீஸனல் பழங்களும் உண்ணலாம்.
* நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
* வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள்,
* கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை…
இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்ல தீர்வு தரும்.