வெப்பாலை
பெயர்க் காரணம்: பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக்கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
அடையாளம்: இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. மர வகையைச் சார்ந்த இதன் காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர்.
மருந்தாக :
- இது சுரத்தைக் குறைக்கும். சுரத்தால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும், சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும்.
- வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்துக் குடிநீரிட்டு கொடுக்கலாம்.
- வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைகொண்ட ‘வெட்பாலை அரிசிக்கு’ செரிமானத் தொந்தரவுகளைப் போக்கும் திறன் உண்டு.
- துவர்ப்புச் சுவை மிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு.
- செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.
- வெட்பாலை அரிசி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. ‘கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, இரத்தக் குழாயை விரிவடையச் செய்து அதிகுருதி அழுத்தத்தைக் குறைக்கிறது.
- இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘இன்டிரூபின்’ (Indirubin) எனும் வேதிப்பொருளுக்குப் பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இலைகளிலிருக்கும் ‘ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.
வீட்டு மருந்தாக:
- இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.
- இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகத் தடவும் வழக்கம் தொடர்கிறது.
- ஆரம்ப நிலை பல் வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும்.
- இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல் நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாகப் பயன்படுத்தலாம்.
வெட்பாலை எண்ணெய்: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். சாதா தோங்காய் எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம்.
இந்த எண்ணெயை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.
வெட்பாலை நம் வாழ்வை ஆக்கும் பூஞ்சோலை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக