வியாழன், 24 டிசம்பர், 2020

கண் கருவளையம் - Black Color around ​​the eye

கருவளையம்

கண்களை ச்சுற்றி கருவளையங்கள் வரக்காரணம்...!

முகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.

ரோஸ்வாட்டர்

கருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை

பாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.

பாதாம்

பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்

இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா

புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

புதன், 23 டிசம்பர், 2020

ஒற்றைத்தலைவலி - Migraine

ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்!

தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி... தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்... அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. சிலருக்கு மாலை வேளையானால் தலைவலி தொடங்கிவிடும். அதிகச் சத்தம் கேட்டால், மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நடந்தால்... என தலைவலிக்கான காரணப் பட்டியலின் நீளம் அதிகம். தலைவலிக்கும் நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால்கூட எரிச்சலாக வரும்; கோபம் தலைக்கு ஏறும். `இதற்குத் தீர்வே இல்லையா?’ எனப் புலம்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  

ஏன் வருகிறது ஒற்றைத்தலைவலி? 

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும். உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும். 

5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.

பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன? 

வலி வருவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரென சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும். 

சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாக கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகி சரியாகும். வாந்தி அல்லது  குமட்டல் உணர்வு இருக்கும். இந்த நேரத்தில், அமைதியாக அறைக்குள், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருளை ஏற்படுத்திக்கொண்டு உறங்குவது சற்று ஆறுதல் தரும்.

உங்க டூத் பேஸ்ட்ல இருக்கு சிக்கல் சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத்தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியதும், கடமைக்கு என வாய் கொப்பளிப்போருக்குத்தான் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். நாக்கிலேயே ஒட்டியிருக்கும் டூத் பேஸ்ட்டின் வேதிக்கலவை, சாப்பிடும்போது அப்படியே உடலுக்குள் சென்றுவிடும். நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். பல நாட்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, தலைவலியை உண்டாக்கிவிடும். 

தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பௌடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு சாக்லேட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.

பாதிப்பது அதிகம் பெண்களே! 

ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. தவிர, பூப்பெய்தும் காலம்,  மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும்.  இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.

எப்படிக் குணப்படுத்துவது? 

பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும். 

அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.

தலைவலி நீங்க! 

  • இரவு நேரங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகச் சாப்பிடுவதும் கூடாது.
  • வாரம் ஒரு முறையாவது உணவு உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது, வயிற்றைச் சுத்தம்செய்ய வேண்டும்.
  • குளிர் மற்றும் பனிக் காலங்களில் செரிமானம் குறைவாக இருக்கும். வெந்நீர் அல்லது வெந்நீரில் சீரகம் சேர்த்துப் பருகுவதால், செரிமானம் எளிதாகும். கோடை காலத்தில் சாதாரண நீரைப் பருகலாம்.
  • காலை உணவை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. டீ, காபியை முடிந்த அளவுக்குத் தவிர்க்கலாம்.

ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க... 

  • சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப் பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்து வரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.
  • இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.
  • 20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒற்றைத் தலைவலி... சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.

மைக்ரேனைத் தூண்டும் காரணிகளில், மிகமுக்கியப் பங்கு உணவுகளுக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கோடையில் வெப்பம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையத் தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் பாதிப்புகளில், முதன்மையானது தலைவலி. ஏற்கெனவே மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, தலைவலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். பொதுவாக மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, வேறு சில உடல் உபாதைகளும் இருக்கக்கூடும்.

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குப் பசியின்மை இருக்கும். அவர்களில் பலர் பெரும்பாலான நாள்கள், ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவர்.

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குச் சரியான நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் டீ, காபியை மட்டுமே குடிப்பார்கள்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

* தூக்க நெறிமுறை இருக்காது.

* அதிக மனஅழுத்தத்துடன் காணப்படுவார்கள்.

* ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்.

* வெளியிடங்களில் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

உணவு முறையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் மேலே சொல்லப்பட்டவற்றில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்வதும், தவறான பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் மைக்ரேனைத் தவிர்க்க உதவும்.

மைக்ரேன் பிரச்னையை சில உணவுகள் அதிகரிக்கும். அந்த உணவுகளில் பொதுவான சிலவற்றைப் பார்ப்போம்.

சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, `டைராமைன்' (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள், `எம்.எஸ்.ஜி' எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்' (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.

`மைக்ரேன்' தலைவலியை அதிகரிக்கும் உணவுகள் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து, ஒருவருக்கொருவர் மாறுபடும். எந்த உணவு மைக்ரேன் தலைவலியை அதிகரிக்கிறது என்பதை, நோயாளிகள் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு, உணவுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொருமுறை `மைக்ரேன்' தலைவலி ஏற்படும்போதும், என்ன உணவு உட்கொண்டோம் என்பதைப் பரிசோதித்து, அடுத்தடுத்த நாள்களில் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

மைக்ரேன் தலைவலி உள்ளவர்கள், அவசியம் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* புதிதாக டயட் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி `மைக்ரேன்' பிரச்னையை ஏற்படுத்தலாம். முறையாக ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று டயட்டைப் பின்பற்றவும்.

* மைக்ரேன் உள்ளவர்களில் பெரும்பாலோனோருக்கு, டீ, காபி அளவுக்கதிகமாக குடிக்கும் பழக்கம் இருக்கும். கோடைக்காலத்தில் அப்பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். அதற்குப் பதிலாக இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம்.

* ஒருநாளில் மூன்று வேளை உணவு என்பதை, ஆறு வேளை என மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டுக்கான நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு, தினமும் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

* தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். அதேபோல், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் யோகா மற்றும் தியானம் செய்யவேண்டும். மேற்சொன்னவாறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, மைக்ரேன் வலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து வந்தால் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம்.

தலை முடி பராமரிப்பு - Hair Maintainance

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்... இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... பளபளப்பு, மென்மை, கருமை என அலை அலையாய்க் கூந்தலில் வலம் வரலாம்’ என்பனபோன்ற விளம்பரங்கள் பலரையும் ஈர்க்கின்றன. 

சுருள்சுருளாக முடி இருப்பவர்கள், நேர்த்தியான நீள் முடியையும், நீளமான முடி இருப்பவர்கள் அலைஅலையாய்ச் சுருள் முடியையும், அதிக முடி இருப்பவர்கள் குறைவாகவும், குறைந்த முடி இருப்பவர்கள் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று ஏங்குகின்றனர். அனைவரின் ஏக்கத்தையும் போக்குவது இன்று மிகவும் சுலபம். ஆங்காங்கே இருக்கும் அழகு நிலையங்களில் இதற்கான அழகுச் சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அழகுக்கலை நிபுணர், தோல் சிகிச்சை நிபுணரைச் சந்திப்பது நல்லது.

இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.  முடிவு இல்லாப் பிரச்னையாக நீடிக்கும் முடிப் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். 

தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது.

குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி... 

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன.  ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.  சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது.

• பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.  இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.  

• குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.  

• ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம்.  வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும்.  இதனால் முடி அடர்த்தியாக வளரும்.

• பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.  

• ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம்.  ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம்.  அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம்.  பயத்த மாவு எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

• குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது.  இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.  

• மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும்.  இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.  

• இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குத் தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்கூறு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும்.  இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம்.  இதனால் வியர்வை ஏற்படாமல், தலையும் வாசனையாக இருக்கும்.  

தலைமுடி உதிர்வதைத் தடுக்க... 

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.    

• தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.  

• ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி,  தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.  

• மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக் கொள்ளுங்கள்.  இதற்கு 'மேங்கோ பட்டர்’ என்று பெயர்.  இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.

• வெட்டிவேர் - 10 கிராம், சுருள் பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், விளாம் மர இலை - 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.  இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள்.  முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.  

• ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம்.  உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.

• டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள்.  மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள்.  குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.

பேன் / பொடுகைப் போக்க... 

தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல்போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத் தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.

பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.

இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்திலயே கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

• எண்ணெய் தேய்த்து வாரும் வழக்கம் இல்லாமல் போனதன் விளைவு பேன்/பொடுகு தங்குவதற்கு இடம் கிடைத்து விடுகிறது. தினமும் எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும்.

• ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

• இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.

• நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும்.  நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும்.  ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

• ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்து காய்ச்சி, வடிகட்டவும்.  இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும்.  ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுக்கும்போது பேன், பொடுகு வந்துவிடும்.  பிறகு சின்ன சீப்பினால் வாரவும்.

• ஒரு கப் தயிருடன் ஒரு ஸ்பூன் மிளகு பொடியை போட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்து, இந்த மிளகுத் தயிரை  தலை முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் ஊறியபின் தலையை கழுவ பொடுகு தீரும்.  

• வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்/பொடுகு/ஈறு தொல்லை இருக்காது.  

• வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.

• குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைத் தடவிக் குளிப்பாட்டலாம்.

வாரம் ஒரு முறை மேலே கொடுத்துள்ள டிப்ஸ்களை மாற்றி மாற்றிச் செய்யும் போது, தலை சூப்பர் சுத்தமாக்கும்.  

நரையைப் போக்க... 

இன்று எட்டு வயதிலேயே இளநரை எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. சுற்றுச்சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் போன்ற தவிர்க்க முடியாத பிரச்னைகளால் நரை முடி வந்து பலரையும் பாதிக்கிறது. நரை முடியை முற்றிலும் போக்க கறிவேப்பிலைதான் மிகச் சிறந்த மருந்து.  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

20 வயது இளைஞர்கள், நரையை மறைக்க, கலரிங் செய்து கொள்கின்றனர். தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி ஆரோக்கியம் இழந்து, உடைந்து போகிறது. அதன் தரம் குறைகிறது. இதனால், தலைமுடி உதிர்வதுடன், இளமையிலேயே நரை விழத் தொடங்கிவிடுகிறது. அதிலும் ரசாயனம் கலந்த கலரிங் செய்யும் போது, பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான பழங்கள், காய்கறிகளில் தலைக்கு கலரிங் செய்துகொள்ளலாம்.

• இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம் சாப்பிடலாம், ஆம்லா எண்ணெய் தலைக்கு  பயன்படுத்தலாம்.

• நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள்.  இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.  

• நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து இடித்துக் கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள்.  தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணெயை லேசாகச் சூடு பண்ணி, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது.  முடியும் கறுப்பாகும்.

• 100 கிராம் பிஞ்சுக் கடுக்காய்த்தூளை காஃபி பில்டரில் போட்டு, 300 எம்.எல், கொதிக்கும் நீரை ஊற்றவும். டிகாஷன் சொட்டுச் சொட்டாக இறங்க வேண்டும். தலையில் ஆலிவ் ஆயிலைத் தடவி வாரிக்கொள்ளவும். பிறகு, தலையின் சுற்றளவுக்கு ஏற்ப தடிமனான துணியை டிகாஷனில் முக்கி தலையில் வைத்துக் கட்டவும். 2 அல்லது 3 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு அலசவும். அதிக நரை இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்தால், நரை முடி கறுப்பாகும்.      

• நெல்லி முள்ளி, கறிவேப்பிலை, வேப்பங்கொட்டை, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைஸாகப் பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும்.  இந்த எண்ணெயைத் தினமும் தடவிவந்தால், நரை முடி சீக்கிரத்திலேயே மாறிவிடும்.  

கருமையான கூந்தலுக்கு... 

சிலருக்குக் கருகரு முடிகூட, தூசு படிந்தாலோ, சரியான பராமரிப்பு இல்லாமல் போனாலோ, முடியின் நிறம் செம்பட்டை, மஞ்சள் நிறமாக மாறிவிடும்.  இதனால் முகமும் பளிச்சென்று இருக்காது.  

• பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை இந்த நான்கையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.  

• கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, பொடித்துக் கொள்ளவும்.  இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.  தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும்.

• 100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் - 100 கிராம், பயத்தம் பருப்பு - அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக்கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசிவர, கருகருவெனக் கூந்தல் கண் சிமிட்டும்.

• பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்குங்கள்.  மறுநாள், ஊறிய பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள்.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.

• ஒரு கொத்து கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.  

• சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.  

வறட்சி போக்கி, பளபளப்பாக்க... 

எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி, நுனி முடியில் பிளவு ஏற்படும்.  இதனால், ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்.  

• 10 கிராம் கடுக்காய், மிளகு 10 கிராம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டுக் கலக்குங்கள்.  இந்த எண்ணெயைத் தினமும் தடவி சூடான தண்ணீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுங்கள். மிதமான சூட்டில் மசாஜ் செய்யலாம். பிறகு சீப்பால் வாரி பின்னல் போட்டுக் கொள்ளலாம். நுனிப் பிளவு நீங்கி, முடி நன்றாகப் பளபளக்கும்.  நீளமாக வளரத் தொடங்கும்.  

• 100 கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் மாவு, சீயக்காய் கால் கிலோ சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால், தலையில் அழுக்கு நீங்கி சுத்தமாகப் பளபளவென இருக்கும்.  

• தலா 4 துளி ஆலிவ் ஆயில், 4 துளி விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து,  சீப்பால் தினமும் தலை முடியை வாரவும்.  வறட்சியான முடியும் பளபளக்கும்.  
• ஒரு கப் தேங்காய் பாலில், 4 டீஸ்பூன் கடலை மாவு கலந்து தேய்த்து தலைக்குக் குளித்துவந்தால், முடி பளபளப்பாக இருக்கும்.

• 100 மிலி தேங்காய் எண்ணெயை அடுப்பில்வைத்துக் காய்ச்சி, அதில் 50 கிராம் ஃப்ரெஷ் செம்பருத்தி பூவைப் போட்டு வைத்துவிடுங்கள். இந்த எண்ணெயைத் தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம்.  

• மரிக்கொழுந்து, வெட்டிவேர் தலா 50 கிராம் எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஃப்ளோரல் ஆயில் என்று பெயர்.  தலைமுடி பளபளப்பதுடன் பூக்களால் கூந்தல் வாசனையாகவும் இருக்கும்.  

வழுக்கை விழுவதைத் தடுக்க...

வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை.  கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.   

மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர் என்று மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட வேண்டும். 

தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை விழாமல் தடுக்கலாம்.   

• தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக் குளியல் அவசியம்.  தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது. 

• எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளரத் தொடங்கும். 

• குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும். 

தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை மூலம் வழுக்கைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

உணவுப் பழக்கம் கூந்தலைக் காக்கும்

தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை, தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளும்போது முடி மட்டும் அல்ல, சருமமும் ஆரோக்கிய அழகு பெறும்.   

கேரட்: இதில் உள்ள வைட்டமின் ஏ தலையில் உள்ள சீபம் எண்ணெய் உருவாக்கத்துக்கு அவசியம். இந்த சீபம் எண்ணெய்தான் தலைப் பரப்பை காய்ந்துவிடாமல் ஈரப்பதமாக வைக்கிறது. ஈரப்பதமான உச்சந்தலை என்றால், அது ஆரோக்கியமான தலைமுடிக்கு அஸ்திவாரம். 

முட்டை:  ஆரோக்கியமான முடியின் வேர்களுக்குப் புரதச் சத்து அவசியம். முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோடின், வைட்டமின் பி 12 முடியின் வேர்க்காலுக்கு ஊட்டத்தை அளிக்கும். முட்டையில் உள்ள பயோடின், வைட்டமின் பி, முடியைப் பளபளப்பாக்கவும், ஆரோக்கியத்துக்கும், பராமரிப்புக்கும் மிகவும் அவசியம். இதைப் பல ஷாம்புகளில் கலந்திருப்பார்கள். முட்டையில் இது இயற்கையாகவே உள்ளதால், தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம்.  தினமும் உணவிலும் முட்டை சேர்த்துக்கொள்ளவேண்டும்.   

அடர் பச்சை நிறக் காய்கறி கீரைகள்: அன்றாட உணவில் இவை அவசியம் தேவை. இந்த உணவுகள் தான் வைட்டமின் ஏ மற்றும் சி-க்கு ஆதாரங்கள். இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான தாதுப்பொருட்கள் இதில் உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் சீபம் உருவாக்கத்துக்கு உதவி புரிகின்றன. 

சிவப்பு அரிசி: புரதம், வைட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் நார்ச் சத்து இதில் நிறைவாக உள்ளன. இதில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் மிகவும் வலுவான முடி உருவாகத் துணை செய்கிறது. அதிக அளவில் உள்ள வைட்டமின் பி முடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவி புரிகிறது. 

தானியங்கள்: தலைமுடிக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களுடன், அதிக அளவிலான புரதச் சத்தையும் அளிக்கிறது. மேலும் இதில் பயோடின், வைட்டமின் பி போன்ற உயிர் ஊட்டச் சத்துக்களும் நிறைந்துஉள்ளன. இது முடி உடையும் பிரச்னையைத் தவிர்த்து உறுதியாக்கும். 

வாழைப்பழம்: வாழைப் பழத்தில் பி6 வைட்டமின் நிறைவாக உள்ளது. இது முடி உதிர்வைக் குறைக்கும். 

வால்நட்: முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து மற்றும் பராமரிப்பை அளிக்கும் மிக முக்கிய உணவுகளில் ஒன்று. இதில் நிறைவாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், பயோடின், வைட்டமின் ஈ, தாமிரம் போன்றவை சூரியக் கதிர்வீச்சில் இருந்து கேசத்தைப் பாதுகாக்கும். மேலும், முடி உதிர்வைத் தடுத்து முடியின் நிறத்தைப் பாதுகாத்துப் பளபளப்பாக்கும். 

க்ரீன் டீ:  இதில் உள்ள பாலிஃபீனல் உடல் எடையைக் குறைப்பதுடன், தலை சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணை புரிகிறது. க்ரீன் டீயை அருந்துவதுடன், அதைக்கொண்டு தலை முடியை அலசும்போது அல்லது தலை சருமப் பரப்பில் க்ரீன் டீயைத் தடவும்போது பொடுகையும் விரட்டிவிடும். 

மீன்: நெய் மீன் எனப்படும் எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளது. இந்தக் கொழுப்பு அமிலங்கள் முடி உதிர்வைத் தடுக்கின்றன. இந்த வகை மீன்களில் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிகின்றன. 

பூசணி விதை: முடி மற்றும் சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது.  இதில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன. 

வாசம் வீசும் ஹென்னா 

வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.   

• மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஹென்னாவைத் தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலை வாசம் வீசும். 

• மகிழம்பூ 50 கிராமுடன், கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தலா 25 கிராம் கலந்துகொள்ளுங்கள்.  இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். 

• ஒரு பிடி மகிழம்பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவிடுங்கள்.  மகிழம்பூ தைலம் தேய்த்துக் குளித்து முடித்ததும், ஆறவைத்துள்ள மகிழம்பூ தண்ணீரில் அலசுங்கள்.  கூந்தல் வாசம் வீசும். 

• ஒரு கப் மருதாணி இலை, கடுக்காய் தோல் - 4, டீ டிகாக்ஷன் ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு கப், துளசி இலை - ஒரு கப், கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.  வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம்.  தலைமுடிக்கு நல்ல  கண்டிஷனரையும், கலரையும், வாசனையையும் கொடுப்பதுடன் பளபளப்பாக வைத்திருக்கும்.   

• ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிராமுடன் மரிக்கொழுந்து, வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். ஃப்ரெஷ்னெஸை உணர முடியும். 

தலைமுடியை பராமரிக்க ஸ்கேன் 

தலை முடிப் பராமரிப்புக்கு பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் பிரத்யேக ஸ்கேன் கருவி வைத்துள்ளனர். இது தலை முடி சருமப் பரப்பை 200 மடங்கும், ஒரே ஒரு முடியை மட்டும் 1000 மடங்கு பெரிதாக்கிக்காட்டும். இதன் மூலம் தலை சருமப் பரப்பு மற்றும் முடியில் என்ன பிரச்னை உள்ளது என எளிதாகக் கண்டறிய முடியும். இந்த சோதனை அடிப்படையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அங்குள்ள அழகுக் கலை நிபுணர் முடிவுசெய்வார். 

முடிமாற்று அறுவைசிகிச்சை 

முடிகொட்டுவதைத் தடுக்க, முடி அடர்த்தி அதிகரிக்க சில சிகிச்சைகள் உள்ளன. வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு முடி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.  முடி எதனால் கொட்டுகிறது எனக் கண்டறிந்து முதலில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முடி கொட்டுவதற்கு மரபியல், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இதைக் கண்டறிந்து சரிப்படுத்துவதன் மூலம் முடிக் கொட்டுதலைத் தடுக்க முடியும். 

ஏற்கெனவே வழுக்கை விழுந்தவர்களுக்கு மீண்டும் முடி முளைக்கவைக்க முடியாது. முடி கொட்ட ஆரம்பித்தவர்களுக்கு சில ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள்.  அந்த மாத்திரைகள் போடும் வரை முடி கொட்டாது. மாத்திரை போடுவதை நிறுத்தியவுடன் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். ஏனெனில், முடி கொட்டும் நிகழ்வை மாத்திரை தள்ளிப்போடுமே தவிர, தடுத்து நிறுத்தாது. 

வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள நிரந்தர முடி வேர்களை எடுத்து தலையின் முன் பக்கத்தில் நடுவோம். இப்படி சில அமர்வுகளின் மூலம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் முடி வேர்கள் நடப்படும். நடப்பட்ட மூன்று வாரங்களில் முடி முளைக்க ஆரம்பித்துவிடும். இந்த மூன்று வார காலத்துக்குள் நோய்த் தொற்று, அரிப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டால் நடப்பட்ட முடி உதிர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. இந்த சிகிச்சை முறையில் சில சாதகம் மற்றும் பாதகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக சிகிச்சை தேவைப்படுபவருக்கு தெளிவுபடுத்திவிட்டு, அவரது முழு சம்மதத்துடன் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும். இதுதவிர ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளது. ஆனால் ஸ்டெம்செல் சிகிச்சைக்கு இதுவரை அங்கீகாரம் இல்லை. 

எச்சரிக்கை 

பெர்மிங், ஸ்ட்ரெய்ட்டனிங், அயர்னிங், ரீபாண்டிங் செய்துகொள்பவர்கள் கூந்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம். இதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர், இதரப் பொருட்களை மட்டுமே முறையாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும். 

மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுக்கு ஏற்ப, பெர்மிங், அயர்னிங், ஸ்ட்ரெய்ட்டனிங் என அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருந்தால் முடியின் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டுவிடும். பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

அழகுக்காக செய்துகொள்ளும் எந்த சிகிச்சையாக இருந்தாலும், கூந்தலின் தன்மை, எதையும் தாங்கும் சக்தி, சென்சிட்டிவ் கூந்தலா?  சாதாரணக் கூந்தலா? ஹென்னா, கலரிங், கெமிக்கல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதா என்று ஆராய்ந்து பிறகே மேற்கொள்ளவேண்டும்.  

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

சிறுநீரகக் கல் - Kidney Stone

சிறுநீரகத்தில் கல் வர காரணம், அறிகுறிகள் மற்றும் கல் உருவாவதைத் தடுக்கக் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு, இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும்.

அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இது தான் சிறுநீரகக் கல்.

இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

சிறுநீரக கல் உருவாக காரணங்கள்

சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது, உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது, கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல், உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகின்றன.

கற்கள் என்ன செய்யும் ?

சிறுநீரகப் பாதையில் உருவாகும் கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

* சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும்.

* முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்.

* சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம்வரை பரவும்.

* இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கக் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஏற்கனவே கல் உருவாகி அதற்கு சிகிச்சை எடுத்தவர்களும் இதை 

பின்பற்ற வேண்டும்.

வெயிலில் அலையாதீர்கள் !

பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

உப்பைக் குறைக்கவும் !

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 2.5 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) போதும். சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும்

பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவு உணவு, பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

எதைச் சாப்பிடக் கூடாது?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, சீஸ், சாஸ், ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது.

* இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக் கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.

* உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* கேழ்வரகு, கீரைகள், கருணைக் கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம்.

* இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.

* ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவை குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும்.

தண்ணீர் அருந்துங்கள் !

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்).

* பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

* சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.

* நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும்.

* அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.

* எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும்.

* கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

* உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

வீட்டு வைத்தியம்

* பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.

*  அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

* முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.

* வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

*  வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.

* பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

 எளிய முறையில் உடல் எடை குறைய 

*  வெந்தயம் 4 டீ ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடியுங்கள். காலை எழுந்தவுடன், இரவு படுக்க போகும் முன்பு என தினம் இருவேளை இதனையே பின்பற்றுங்கள். இரண்டே மாதத்தில் உடல் லேசாக இருப்பது போன்று உணருவீர்கள். உங்கள் எடையை நீங்கள் சுமக்கும் பாரமே தெரியாது. உடை எடை கணிசமாக குறையும்.

*  4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பாலுடன் பூண்டை சாப்பிடுங்கள்.  பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.

*  இஞ்சி சாறு அருந்தலாம் இது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்க உதவும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். இஞ்சி சாற்றினை தினம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை விரைவில் குறையும்.

*  இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

*  காலை 7 - 9 மணிக்குள் காலை உணவாக 4 இட்லி அல்லது எண்ணெய் குறைவாக இரண்டு தோசை. மதியம் 12 - 2 மணிக்குள் ஒரு கப் சாதம், நிறைய காய்கறிகளுடன், இரவு 7 - 9 மணிக்குள் 2 சப்பாத்தி அல்லது 3 இட்லி. இடையில் பழங்கள், பழச்சாறுகள் என்று உங்கள் டயட்டை ஒரு மாதத்திற்கு மெயின்டெய்ன் செய்து பாருங்கள். தொப்பை தானாக குறையும்.

*  என்னதான் உணவில் நீங்கள் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், தினம் அட்லீஸ்ட் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். தினம் 5 முறை குனிந்து உங்கள் கால் கட்டை விரலை தொடுங்கள். 2 நிமிடங்கள் தாக்குப் பிடித்து தொடர்ச்சியாக நில்லுங்கள்.  

குறிப்பு 

வெந்தயம், பூண்டு, இஞ்சிச்சாறு, இலவங்கப்பட்டை பொடி ஏதாவது ஒரு முறையை பின்பற்றுங்கள். உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம்.

வெந்தயம், பூண்டு,  இலவங்கப்பட்டை பொடி வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின் காபி, டீ குடிக்ககூடாது. சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று நினைத்தால் வெந்நீர் அல்லது பால் சேர்க்காத காபி / டீ குடிக்கலாம். காலை உணவுக்குபின் அரை மணி நேரம் கழித்து காபி / டீ குடிக்கலாம்.


சனி, 12 டிசம்பர், 2020

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-

1. அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

2. காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

3. சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

4. பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

5. கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

6. மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

7. குப்பைக்கீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

8. அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

9. புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 

10. பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

11. பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

12. பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

13. சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

14. வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.

15. முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

16. வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

17. முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

18. புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

19. புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

20. நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

21. தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

22. ஆடாதோடை கீரை  - சளி, இருமலை துளைத்தெரியும்.

23. முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.

24. பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

25. புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

26. மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

27. மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 

28. முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

29. சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

30. வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

31. தூதுவளை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

32. தவசிக்கீரை - இருமலை போக்கும்.

33. சாணக்கீரை - காயம் ஆற்றும்.

34. வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

35. விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

36. கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

37. துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

38. துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

39. காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.

40. நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்....

இரத்தக்கட்டு ரகசியம் - ஏன்? எப்படி?

மனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் முக்கியமானது ரத்தக்கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல், கன்றிப்போய், சிவந்து, வீக்கத்துடன் பார்க்கவே பயங்கரமாக காணப்படும். ரத்தக்கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக்கட்டு பாதிப்பில் இருந்து உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார் "டாக்டர் அரவிந்த்".

‘‘ஒருவருக்கு அடிபட்டவுடன் உடலில் இயல்பாகவே ஏற்படும் செயல்முறை 'ரத்தக்கட்டு' என அழைக்கப் படுகிறது. ரத்த நாளங்களில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான செயல்  முறைகள் ‘உறைவு உருவாக்கம்’ (Thrombus Formation) எனப்படும். ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் 3 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களுக்குள் இயல்பாகவே ரத்தக்கட்டு ஏற்பட்டு விடும். இவ்வாறு அடிபட்டவுடன் மனித உடலில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு ரத்த வட்டுகள் (Platelets) மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றன.

இந்த ரத்த வட்டுகளின் எண்ணிக்கை நமது உடலில் ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்கலாம். இவற்றின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ரத்தக்கட்டுக் குறைபாடுகள் ஏற்படும். ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை த்ரோம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என்றும் ரத்தவட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை த்ரோம்போசைட்டோசிஸ் (Thrombocytosis) என்றும் குறிப்பிடுவர்.

நமது உடலில் ரத்தக்கட்டை ஏற்படுத்துவதற்கென 13 காரணிகள் உள்ளன. இவை உறைதல் காரணிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் V, VII, VIII, IX, X ஆகிய உறைதல் காரணிகள் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உறைதல் காரணிகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், உடனே முதலுதவி சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும்.

இதனை சுருக்கமாக டாக்டர்கள் ‘Rice’ என அழைப்பர். ‘RÕ என்பதற்கு ரெஸ்ட் என்று பொருள். அதாவது, அடிபட்ட பாகத்துக்கு அதிகமாக அசைவுகள் கொடுக்காமல் இருந்தால், ரத்தக்கட்டு உடனடியாக ஏற்பட உறுதுணையாக இருக்கும். அடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதை Ice Compression என்பர். இதுவும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, ரத்தக்கட்டு ஏற்பட உதவும். இதற்கு நாளங்களில் குறுக்களவு குறைதல் என்று பெயர்.

ரத்தம் வெளியேறும் இடத்தினை பாண்டேஜ் துணியால் கட்டுவதன் மூலம், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம். இந்த சிகிச்சை முறை Compression என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையைக் கையாளும் போது, பாண்டேஜ் துணியை மிக இறுக்கமாகக் கட்டக்கூடாது.

அப்படிச் செய்தால், அடிபட்ட இடத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக்கட்டுக்கான முதலுதவி சிகிச்சை முறைகளில், கடைசியாக செய்யப்படுவது ‘E’ Elevation என்பதாகும். இதில் அடிபட்ட இடம் அல்லது காயம்பட்ட இடத்தினை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக்கட்டு ஏற்பட வழி உண்டாகும். இவை அடிபட்ட உடனே மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகும்.

இடித்துக் கொள்ளாமலும் காயம்படாமலும் கூட ஒருவருக்கு ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு (Deep Vein Thrombosis) என்று பெயர். இவ்வகை ரத்தக்கட்டு கர்ப்பிணிகள், கருத்தரிப்பு மாத்திரையை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள், பருமனாக இருப்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் வயதானவர்கள் போன்றவர்களுக்கு அதிகம் வரலாம். இவர்களுக்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு வராமல் தடுக்க வீட்டில் இருந்த வாறே சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். வீக்கம் ஏற்பட்ட கை மற்றும் கால்களுக்கு அவ்வப்போது அசைவுகள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதன்மூலம், ரத்தம் தேங்குவதைக் குறைத்து, ரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்கலாம். வீக்கம் ஏற்பட்டுள்ள உடல் உறுப்புகளைத் தலையணை வைத்து உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்க காலுறைகளைப் பயன்படுத்தலாம். இப்படி முதலிலேயே வீக்கத்தைக் கட்டுப் படுத்தவில்லை என்றால், ரத்தக்கட்டி உடைந்து நுரையீரல், இதயம், மூளை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி விடும்.