வியாழன், 3 டிசம்பர், 2015

Tips for Arthritis Pain Relief - மூட்டு வலியை தீர்க்கும் வழிகள்

மூட்டு வலி என்றால் என்ன ? 

அன்றைய காலகட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த மூட்டு நோய் இன்று வாழ்க்கை முறை மாற்றத்தால் 35 வயது இளைஞர்களையும் பாதிக்கிறது. மூட்டு நோய் என்பது மூட்டு இணைப்புக்களில் வலி, வீக்கம் மற்றும் செயல்பாடு குறைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. மனிதனின் செயல் பாட்டுக்கு கை, கால் எலும்பு மூட்டுகள் வலுவாகவும், வலி இல்லாமலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சோர்வு இன்றி உழைக்க முடியும். மூட்டு வலியால் 
அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களை இந்நோய் அதிகமாக பாதிக்கிறது.


மூட்டு வலிக்கு காரணம் .......

மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப உடலில் இயற்கையாகவே வளரக் கூடியது நகம், முடி, மூட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு. மூட்டு வலிக்கு முக்கிய காரணம், மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு அழியும் போது, மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசி கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டுகள் பலமாக இருக்க நம் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

[மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஆவதால் மூட்டு வலி ஏற்படுகிறது இதை நாம் எலும்பு தேய்மானம் என்று அர்த்தம் கொள்கிறோம்] 

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்.........

  • வயதின் காரணமாக உடல் பலவீனம் அடைகிறது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு செயல் இழந்து மூட்டில் வலி ஏற்படுகிறது.
  • மூட்டின் மேல் காயம் ஏற்பட்டு இரத்தக் கசிவு மற்றும் இரத்தம் உறைந்து போவதால் வலி ஏற்படும். 
  • மூட்டி சிப்பி விலகுதல் மற்றும் மூட்டு இணைப்பு சவ்வு சரியான வளர்ச்சி அடையாதபோது. 
  • சுளுக்கு மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு காயங்கள். 
  • இடுப்பிலிருந்து மூட்டு பகுதிக்கு செல்லும் தசைநார்களில் [தொடை பகுதி] காயம் ஏற்படுதல். 
  • உடற்பயிற்சியின்மை மற்றும் உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மூட்டு நோய்கள் ஏற்படுகின்றன.
  • அதிக உடல் எடை, அதிக நேரம் ஓரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதிக பளுவான பொருட்களை தூக்கும் வேலையில் ஈடுபடுவர்களுக்கும் மூட்டு வலி வர வாய்ப்பு உள்ளது. 
  • மன உளைச்சல், சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பில் ஏற்படும் கோளாறுகள் எனப் பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்பட்டு உழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மூட்டு வலியைக் குறைக்க உதவும் வழிகள்......... 

மூட்டு வலியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இயற்கை முறை மருந்து வகைகளை தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை வலியின் தன்மைக்கு ஏற்ப எடுத்து வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும்.


வெளி மருந்தாக உபயோகிக்க :


  • முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
  • கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் வலி குறையும்
  • வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
  • நொச்சி இலைச்சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும்.
  • கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
  • உடைமர இலை ஒரு கைப்பிடி மற்றும் மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் வலி குறையும்.
  • அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
  • முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தை அரைத்து கடுகு எண்ணெயுடன் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
  • பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் வலி குறையும்.
  • புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் வலி குறையும்.
  • அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
  • குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் வலி குறையும்.
  • செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டில் வைத்து கட்டினால் மூட்டு வலி குறையும்.
  • அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட வலி குறையும்.
  • நிலக் கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட வலி குறையும்.
  • எள் (நல்ல) எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு ஒரு கடாயில் ஊற்றி சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை சிறு அளவு சேர்த்து தைலம் பதம் வரும் வரை காய்ச்சி. ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.
  • பச்சை கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
  • சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.
  • வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி மற்றும் எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
  • சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
  • சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்
  • அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
  • நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
  • வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
  • மூட்டு வலி குணமாக அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.


உள் மருந்தாக சாப்பிட..............


  • முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். இந்த இலையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து அருந்தலாம், முடக்கற்றான் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த மருந்து 

  • முடக்கற்றான் சூப் 

தேவையான பொருட்கள்.....

முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை......

முதலில் முடக்கற்றான் கீரையை நன்கு கழுவி ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் ஊற்றவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். சுவையான, ஆரோக்கியமான முடக்கற்றான் சூப் ரெடி.



  • தோசை போல் சுட்டு சாப்பிடலாம் 

இரண்டு கைப்பிடி முடக்கற்றான் கீரையை மை போல் அரைத்து தோசைமாவுடன் (பெரிய கிண்ணம் அளவு) கலந்து தோசை சுட்டால் கீரையின் கசப்பு தெரியாது, காரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

  • லவங்கபட்டையை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தினால் உடம்பில் உள்ள கொழுப்புசத்து குறையும் மூட்டுவலிக்கும் சிறந்தது.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலியை நீங்கும்.
  • பிரண்டை இலை, முடக்கற்றான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும் சவ்வு வளர்ச்சி அடையும்.

  • பிரண்டை இலை துவையல் 

பிரண்டை இலை - ஒரு பிடி
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 2 அ 3
தனியா - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 அ 4 பல்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வதக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

பிரண்டையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள், புளி சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டை நன்கு வதங்க வேண்டும். இல்லையெனில், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். வதங்கியதும் ஆற வைத்து, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். பிரண்டை துவையல் தயார். இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.

  • குப்பைக் கீரை, முடக்கற்றான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
  • மூக்கிரட்டை வேரை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.
  • வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
  • நொச்சி இலைச் சாறு, மிளகு தூள் ,நெய் மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
  • கேரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.
  • குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறுடன் சேர்த்து குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.
  • சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  • சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.
  • காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
  • தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
  • சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை [சுக்கு] கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. 
  • ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு மற்றும் மூட்டு எலும்பு வலியை தடுக்கலாம்.
  • வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு இணைப்புகளில் இருக்கும் சவ்வு வளர்ச்சி அடையும், இதன் காரணமாக ஏற்படும் எலும்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • வெந்தயக் கீரை, மாதுளை மற்றும்  வில்வப் பழ மேல் தோல் மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு இணைப்புகளில் இருக்கும் சவ்வு அழிவை தடுக்கலாம்.
  • அமுக்கரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.
  • அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.
  • அத்தி மரப் பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.
  • வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் செரிமானமாவதோடு கால் வாதத்தையும் குறைக்கும். 
  • 5 கிராம் இஞ்சிடன் சிறிது சீரகம், கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் [சுக்கு பொடி] மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவை வெகுவாகக் குறையும். 

குறிப்பு

  1. மேற்கூறிய முறைகளில் நமக்கு எளிதில் கிடைக்க கூடிய மருந்து பொருட்களை கொண்டு உள் மருந்து மற்றும் வெளி மருந்து செய்து உபயோகித்து பலனை பெறவும். 
  2. எதாவது ஒரு முறையை பயன்படுத்தவும். 

வலியை குறைக்க செய்யவேண்டியது ..........


  • படுக்கும் போது கால் மூட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கத்தினால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். 
  • வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும். 

மூட்டு வலியை தடுக்கும் வழிகள் ......

  • தற்போது உணவுப் பொருட்களில் இரசாயன கலப்பு இருப்பதால் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினால் மூட்டு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • மூட்டிற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் செயல்களை தவிர்க்கவும் உதாரணம் – பளூ தூக்குதல், ஓரே இடத்தில் அதிக நேரம் நிற்பது. 
  • பெற்றோர் சர்க்கரை, இதயம், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பிள்ளைகள் 30 வயதுக்கு மேல்தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 30-லிருந்து 40 நிமிடம் வரை நடைபயிற்சி அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும். 
  • அதிக உடல் எடையினால் மூட்டுகளில் நிரந்தர அழுத்தம் ஏற்பட்டு மூட்டு உள்ளுறுப்புகளும் தசைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே நமது உடலுக்கேற்ற எடையை பராமரித்தால் மூட்டு வலிகளைத் தடுக்க முடியும்.
  • மூட்டு வலியை ஏற்படுத்துவதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் பயிறு வகைகள் அதுவும் கொள்ளு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் எலும்புகள் பலமடையும்.
  • உணவுப் பழக்கத்தில் அக்கறை  கொள்ளுவது அவசியமாகிறது. கிழங்கு வகை, புளிப்புச் சுவை உணவுகள், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். 

எனக்கு தெரிந்த மற்றும் அறிந்த மூட்டு வலி பற்றிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறேன், இதை படித்த நண்பர்கள் மேற்கூறிய தகவல்கள் மற்றும் குறிப்புகளை பின்பற்றி  மூட்டு சவ்வுகளை பாதுகாத்து மூட்டு வலியை வென்று சுகமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ என்னால் முடிந்த முயற்சி.


வாழ்த்துக்கள் 


வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக