திங்கள், 14 டிசம்பர், 2015

Papaya and Its Benefits - பப்பாளியின் மருத்துவ பயன்கள்

பழங்களின் பயன்கள் 

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் உணவு முறையில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பழத்தை ருசிக்காத மனிதர்கள் உலகில் இல்லை என்றே சொல்லலாம்.   பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள்  பழத்திற்கு பழம் மாறுபடுவதோடு நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. 

பழங்களைத் தினமும் சாப்பிட்டால் நமது மூளை சுறுசுறுப்படையும், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பரீட்சைக்குத் தயாராகும் குழந்தைகள் பழம் சாப்பிடுவது நல்லது. அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் ஏற்பட்டு புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, கண் நோய்கள், மன அழுத்தம் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தை உடலை கெடுக்கும் பலவித உணவுகளுக்கு செலவழிக்கிறோம்? அதற்குப் பதில் பழங்களை வாங்கி சாப்பிட்டுப் பயனடையுங்கள். பழங்களை பழரசமாகவும்  சாப்பிடலாம். தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டால்தான் அதன் முழு பலனை நாம் அறிய முடியும்.  பழம் அல்லது பழரசம் எதுவாக இருந்தாலும் உணவு சாப்பிடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம் 

பொதுவாக மக்கள் மனதில் பழங்கள் என்றால் விலை உயர்ந்தவை என்றும், 
 மலிவாக பழங்கள் கிடைத்தால்   அதில் சத்தும்  நன்மையையும் இருக்காது என்று   நினைப்பது தவறாகும். மலிவான விலையில் அனைத்து காலங்களிலும் சத்தும் நன்மையையும்  இனிப்பும் நிறைந்த ஒரு பழம் என்றால் அது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி என்றே கூறலாம்,  இன்னும் கூறப் போனால் பலரது வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரம் இருக்கும். இதில் வைட்டமின் A, B, C, E, K, இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.

பப்பாளி பழத்தை மூன்று வேளை உணவில் சேர்த்து கொள்வது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் நன்மையை தரும் காலை டிபனுடன் பழச்சாறாகவும், மதிய உணவுடன் சாலட்டாகவும் இரவு உணவில் துண்டுகளாகவும் சாப்பிடுவது நன்மையை தரும். 

சாப்பிடுவதற்கேற்ப பப்பாளியை தேர்ந்தெடுப்பது எப்படி 



இளம் சிவப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரண்டு நாட்கள் பழுக்கவைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளியை (காய்) கூட்டாகச் சமைக்கலாம் அல்லது சிலவகை சாலட்களில் சேர்க்கலாம். ஆனால், இனிப்பு இருக்காது. அதேபோல, அதிக அளவில் பழுத்த பப்பாளியும் வாங்கக் கூடாது.

பப்பாளியில் மிக குறைவான கலோரி  உள்ளது, அதாவது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன.  நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை உருவாகும் அனைத்து  நோய்களையும் குணப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உள்ளது.

மருத்துவ பயன்கள்


தோல் நோய்கள்

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்த பின் மிதமான வெந்நீரில் கழுவி வர முகச் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

வறண்ட தோலை அகற்றி புதிய தோலை உருவாக்கும் அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு, பப்பாளி பழத்தை நன்றாக பிசைந்து வறண்ட தோலில் பூச வேண்டும், மேலும் தோலில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் காயங்களுக்கும் பப்பாளியை மேல் பூச்சாகவும் பூசலாம்.

முகம் கரடு முரடாக இருபவர்கள் பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்தவுடன் அதை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள், தொடர்ந்து செய்து வர முகம் மென்மையாக மாறி விடும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயை நறுக்கி உட்பகுதியை மென்மையாக முகத்தில் தேய்த்தால் முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

கண் நோய்கள்

தினம் உணவில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கலாம். கண் பார்வையை அதிகரிக்க, பார்வை சம்பந்தமான கோளாறுகளை சரி செய்ய மற்றும் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய கண் புரை நோயை போன்ற நோய்களை குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் பப்பாளி பழம் சிறந்ததாகும்.


பல்

பல் வலி மற்றும் சொத்தை வராமல் தடுக்கக்கூடிய சக்தி பப்பாளி பழத்திற்கு உண்டு.

இருதயம்

பப்பாளியில் உள்ள நார்ச் சத்து கொழுப்பை உடலிலும் ரத்தக் குழாய்களிலும் சேர்வதை தடுக்கிறது, மேலும் இருதயத்திற்கு வலிமை கொடுத்து இருதயம் பாதிப்பில்லாமல் இயங்க உதவுகிறது. இதனால் இருதய வலி மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராது.

சிறுநீரகம்

பப்பாளி பழம் சாப்பிட்டால் சிறுநீர்க் கோளாறுகள் ஏற்படாது, மேலும் சிறு நீர்ப்பையில் கல் உருவாகாமல் தடுக்கவும் 
உருவாகி இருந்தால் கரைக்கவும் சாப்பிடலாம். 

உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பப்பாளி

பொதுவாக நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றினால் பல நோய்களை தடுக்கலாம், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாகி இளமைப் பொலிவோடு வாழலாம் .

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதுடன் உண்ட உணவில் உள்ள கழிவும் முறையாக வெளியேறும் அதாவது மலச்சிக்கல் பிரச்சனைக்கு பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு சாப்பிட அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லை, சாப்பிட்டவுடன் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அல்சர் நோய்களுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியில் உள்ள வைட்டமின் A, C, மற்றும் E சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன.

“பட்டினிச் சிகிச்சை” என்னும் இயற்கை மருத்துவச் சிகிச்சை இருப்பவர்கள் (ஒரு வாரம் எந்த திட உணவும் சாப்பிடாமல் இருப்பது) பப்பாளிச் சாறு மற்றும் வெள்ளரிச் சாறு மட்டும் பருகி வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப் புழுக்கள் வெளியேறும்.....!

கல்லீரல், மண்ணீரல் நோய்க்குப் பப்பாளியின் பங்கு 


தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், கணைய வீக்கம் மற்றும் கோளாறுகளும் தீரும், இது சம்பந்தமாக சிகிச்சை எடுப்பவர்கள் பப்பாளியை தாராளமாக உண்ணலாம்.

கணையம் என்பது நம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும், இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழம் மற்றும் பப்பாளி காயை சாப்பிடலாம்.

பித்தத்தைப் போக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

நரம்பு பிரச்சனைகள்

பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் பலப்பட்டு நரம்பு தளர்ச்சி குறையும் மேலும் நரம்பு வலிகள் குணமாகும்.

பெண்களுக்கான குறிப்புகள்  


சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு பப்பாளி பழம் மற்றும் காய் அருமருந்தாகும். ரத்த விருத்தியும் ஏற்படும்.

பிரசவித்த பெண்கள் பால் சுரப்பு குறைவு இருந்தால் பப்பாளிக் காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் மேலும் தேவையற்ற சதைகள் கரையும்.

கர்ப்பிணிப் பெண்கள் 5 மாதத்தைக் கடந்த பின் சிறிய துண்டு பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளிப் பழத்தை தயிரில் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். பப்பாளி கலந்த ஷாம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலப்பதம் வரும் வரை காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணையை காயம் பட்ட இடத்தில் பூசினால் காயம் வரைவில் குணமாகும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி
துரிதமாகும்.  பல் உறுதியாகும்,  மூளையை சுறுசுறுப்படைய வைத்து நினைவாற்றலை பெருக்கும். 

குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளிப் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மூளைக்கு சக்தியை கொடுக்கும் பப்பாளி

மூளைக்கு சக்தியுட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உள்ளதால் மன அழுத்தம் உடையவர்கள் பப்பாளி பழத்தை தினசரி சாப்பிடலாம், மூன்று வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் மனநோய் குணமடையும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் 


இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றவும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தவும் இரத்த விருத்தி உண்டாகவும் பப்பாளி உதவுகிறது.

நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

காயங்களை குணமாகும் பப்பாளி காயின் பால்

பப்பாளி காயில் சுரக்கும் பாலை காயம் பட்ட இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமாகும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் சரியாகும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

இலை மற்றும் விதையின் பயன்கள்

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் பற்று போட கட்டி உடையும். பப்பாளி இலைகளை பிழிந்து சாறு எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளி இலையின் பொடி யானைக்கால் வியாதியை சரியாக்கும், இலையின் சாறு விஷ ஜுரத்தையும், சிக்குன் குனியா காய்ச்சலையும் குணமாகும்.

பப்பாளி பழம் மற்றும் காய்  ஆண்களுக்கு விந்துவின்  உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும்,

உடல் எடையை குறைக்க பப்பாளி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதற்கான டயட்டுடன் பப்பாளிக் காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கூட்டாக சமைத்து சாப்பிடுவதுடன் தினமும் காலை பப்பாளிப்பழத்தை உட்கொண்டால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

உடல் எடை காரணமாக மூட்டுவலி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் பப்பாளி

புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது


பப்பாளியில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும்.


பப்பாளி பழத்தின் இதர சிறப்புகள் 


அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளிப் பழத்தினை நேடியாக வெட்டிச் சாப்பிடுவதே சுவை மற்றும் பலன், அதை இன்னும் சுவையாகச் சாப்பிட, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

பழ சாலட்கள் தயாரிக்கும்போது, அவசியம் பப்பாளியையும் சேர்க்க வேண்டும், ஏனெனில் மற்ற பழங்களை கனிந்துவிடாமல் பப்பாளிப் பழம் காக்கும். பப்பாளியின் கறுப்பு நிறக் விதைகளைக்கூட சாலட்களில் சேர்க்கலாம், அதற்கு மிளகைப் போன்ற சுவையும் நறுமணமும் உண்டு மேலும் விதையின் சத்தும் உடலில் சேரும்.

விதைகள் அதிகம் உள்ள நாட்டு பப்பாளி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இறைவன் நமக்கு அளித்த மரங்கள் நமக்கு விருந்தளிக்க 
காத்திருக்கின்றன, ஆம் காய்த்து, கனிந்து தொங்கிக் கொண்டு இருக்கும் பழங்களை நாம்  சாப்பிடுவதால்  இயற்கைக்கு  உறுதுணையாக இருக்கிறோம். எப்படி என்றால் பழத்தைத் தின்று விதையை வீசி எறிகிறோம், அது முளைத்து மரமாகி நமக்காக காத்திருக்கிறது. 

தன் இனத்தை பரப்ப நம்மை எதிர்பார்த்துத்தான் மரத்தில் பழுத்துத் தொங்கும் பழங்கள் காத்திருக்கின்றன.


வாருங்கள்

மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக