வெள்ளி, 18 மார்ச், 2016

செவ்வாழைப் பழத்தின் மருத்துவ பயன்கள்

செவ்வாழைப் பழம்

வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது செவ்வாழைப் பழம்.  கேரளாவில் அதிகம் விளையும் செவ்வாழைப்பழம், சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருக்கும், சாப்பிட ருசியாக இருப்பதுடன், சற்று விலை அதிகமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம். செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும், தொற்றுநோய்கள் நெருங்காது.

கண்களுக்கு ஆரோக்கியம்

சிலருக்கு பகலில் நன்றாக கண்கள் தெரியும். மாலையில் சூரியன் மறைந்தபின் கண் பார்வை மங்கலாகும், இதனை மாலைக்கண் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உள்ளவர்கள், தினமும் காலை மற்றும் இரவு ஆகாரத்திற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழம் என்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.

செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்சனைகளை அகற்றிவிடும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டைச் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வைக் குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு செவ்வாழைப்பழத்தை இரு வேளை ஒரு பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். 

உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து பழங்களை சாப்பிடுவது சிறந்தது. எந்த பழமாக இருந்தாலும் சரி. 

பல் நோய்கள்

செவ்வாழைப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் பல்வலி, பல்லசைவு, போன்ற வியாதிகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு மணிநேரம் கழித்து செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும், பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். .

பல்லை வலிமையாக்கும் சக்தியும் செவ்வாழைக்கு உள்ளது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பலவித சிக்கல் வந்து விடுகிறது,  மலச்சிக்கலை செவ்வாழைப் பழம் தீர்த்துவிடும்.

செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம். அல்லது

வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின், பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.

அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும்.

குழந்தை இன்மையை போக்கும் 

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் இருவரும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர்ச் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எலும்புகளின் ஆரோக்கியம்

செவ்வாழை எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும். அதனால் தான் குழந்தைகள், வயதானவர்கள் செவ்வாழை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள். 

குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

உடல் எடையை பராமரிக்க 

செவ்வாழையில் கலோரிகள் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காலை உணவாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி மட்டுப்படும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

செவ்வாழைப்பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும்,

நரம்புத் தளர்ச்சி நீங்க

நரம்புத் தளர்ச்சி மனிதனை நடைப்பிணமாக்கி விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும்.

நரம்பு தளர்ச்சி காரணமாக, ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைவு ஏற்படும், தாம்பத்தியம் பாதிக்கப்படும் இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப்பழமே. தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் பாலுடன் செவ்வாழைப் பழத்தை 30 நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் புது இரத்தம் உருவாகி நரம்புகளுக்கு வலு ஏற்பட்டு பிரச்சனை தீரும்.

செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்கு ஊக்க மருந்தாக செயல்படுகிறது.

செவ்வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாரத்தில் 3 முதல் 5 பழங்கள் சாப்பிடுவது நல்லது.  இப்பழத்தை கிடைக்கும் போது சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்,

  • உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
  • தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
  • செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
  • செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர் தொடர்பான வியாதிகள் இருந்தால் குணமாக்கும்.
  • செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது.
  • இருதயம் பலப்படும்

சிறுவர்களாய் இருப்பின் அரைப் பழமும் பெரியவர்கள் ஒரு பழமும் அவரவர் வயதிற்கும், ஜீரணத்திற்கும் தக்கபடி சாப்பிட்டு வாருங்கள். 
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அறிய இந்த linkயை கிளிக் செய்யவும் 


பல்வேறு வகையான வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி அறிய இந்த linkயை கிளிக் செய்யவும் 




வாழ்க வளமுடன் 

வெள்ளி, 11 மார்ச், 2016

Health Benefits of Banana Various Types - பல்வேறு வகையான வாழைப்பழங்களும் அதன் மருத்துவ பயன்களும்

வாழைப்பழம் வகைகள்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் பொதுவான மருத்துவ குணங்களைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம், இந்த பதிவில் வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம். வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் இருந்தாலும் சத்தில் வேறுபாடு கிடையாது, ஆனால் மருத்துவ குணத்தில் வேறுபாடு உள்ளது. எல்லா வகை பழங்களிலும் மனித உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் உதவி செய்கிறது.

வாழைப்பழத்தின் வகைகள் பூவன் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பேயன் வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம் போன்ற வகைகள் குறிப்பிடத்தக்கவை.

பூவன் வாழைப்பழம்



பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம். 

  • ஒவ்வொரு நாளும் பூவன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, உண்ணும் உணவை முழுச்சத்தாகவும் மாறும். 
  • தினமும் உணவிற்குப் பின் பூவன் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது. 
  • உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும். 
  • தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.
குறிப்பு 

ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள, குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

பச்சை வாழைப் பழம்

பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள். இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது. 

  • பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும் கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம், உடல் உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
  • பித்தத்தையும், மலச்சிக்கலையும் நீக்கும் குணம் கொண்டது.
  • குடல் புண்ணை ஆற்றும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. 

குறிப்பு 

  1. வாத நோயாளிகள், காச நோய், ஆஸ்துமா நோய்க்காரர்கள் தவிர்க்க வேண்டும், குறைந்த அளவு சாப்பிட்டாலும் நோயை அதிகப்படுத்தும்.
  2. சிலருக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் அதே சுவையுடன் இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம்.

மொந்தன் வாழைப்பழம்

மொந்தன் வாழைப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார். அளவோடு இப்பழத்தை சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று சாப்பிட்டால் பசியை மந்தப்படுத்தும்.

  • தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.
  • காமாலை நோயைக் குணப்படுத்த சிறந்த பழம். 
  • வாந்தியை நிறுத்தும்.

ரஸ்தாளி வாழைப்பழம்

ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. ஊட்டச்சத்து நிரம்பியது. 

  • தினமும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும். 
  • வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். 
  • ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
  • ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. 

குறிப்பு  

  1. இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது. இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று ஆகிவிடும்.  
  2. இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது.  
  3. பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். 
  4. இப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

நேந்திர வாழைப்பழம்

நேந்திரப்பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்ட இப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தை விருத்தி அடைய செய்யும்.

  • நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்கள் பலப்பட்டு  நினைவு ஆற்றல் பெருகும், மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. பரீட்சை அன்று சாப்பிடாமல் செல்லும் குழந்தைகள் நேந்திர வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றால் பசியும் அடங்கும், மூளையும் சுறுசுறுப்புடன் இருக்கும். 
  • காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும் முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் புஷ்டிக்கும். 
  • ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை சிறிது உப்பிட்டு வேகவைத்து நன்றாக பிசைந்து சாப்பிடக் கொடுத்தால் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். 
  • நேந்திர வாழைப்பழம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும். 
  • தொடர் இருமல் இருந்தால் பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் தேக்கரண்டி மிளகு பொடியை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
  • இதயத்தின் வலிமைக்கு நேந்திரம் பழம் மிகவும் சிறந்தது. ஆகவே கிடைக்கும் போது நேந்திரம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் வராமல் பாதுகாக்கலாம், மேலும் இருதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழமாகும். 
  • நேந்திர வாழைப்பழம் உடம்புக்கு குளிர்ச்சியை தருவதோடு அதிக சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும். 
  • உடல் மெலிந்தவர்கள், நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லி வேக வைப்பதுபோல அவித்து இதனுடன் நெய்யை கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்த உடல் பூஷ்டியாகும். 
குறிப்பு 

  1. நேந்திர வாழைப்பழம் ஜீரணிக்க நேரமாகும் என்பதால் அளவோடு சாப்பிடவேண்டும். 
  2. நேந்திரம் சிப்ஸ், ஜாம், வற்றல் ஆகியவை கடைகளில் கிடைக்கும் சாப்பிட சுவையாக இருக்கும் ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும், அதிகம் உண்டால் வயிறு மந்தம் ஏற்படும். 
பேயன் வாழைப்பழம்

தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பேயன் வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • அதிக உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள் பேயன்பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, உடல் சூடு சமநிலைப்படும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது.
  • மலச்சிக்கலை போக்கும். 
  • பெரியவர்களுக்கு ஏற்படும் பித்தம் மற்றும் வாத நோய் குணம் அடையும். 
பேயன் வாழைப்பழத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.

குறிப்பு 

அதிக உடல் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும்.

மலை வாழைப்பழம்

நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம் சற்று விலை அதிகமானதாகும் சாமானிய மக்களுக்கு எட்டாத பழமாகும். வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம். சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும். மலைவாழைப்பழத்தில் சர்க்கரை சத்து கொஞ்சம் குறைவாக இருக்கும்.

  • மலை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் சளித் தொந்தரவுகள் நெருங்காது. 
  • குழந்தைகளுக்கு 5 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம்.
  • இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும். இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
  • தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
  • பசியினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல ஜீரண சக்திக்கு ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
  • ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும். பயப்பட வேண்டாம்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.  சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.

நவரை வாழைப்பழம்

அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கயத்திற்கு உதவாது. உடலில் ஏதாவது நோய் இருந்தால் அந்த நோய் எளிதில் குணமாகாது.

நோயின்றி இருப்பவர்கள் அளவோடு சாப்பிடலாம். மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது

சொறி, சிரங்கு உள்ளவர்கள், வாத நோய்க்காரர்களும் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிட்டால் பிரச்சனை அதிகமாகும்.

நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கும், பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.


கற்பூர வாழைப்பழம்

கற்பூர ஒளி போல், இப்பழத்தை சாப்பிட்டதும், தேகத்தில் உடனே ஒருவித தெம்பு ஏற்படுவதால் தான் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது போலும். இனிப்புச் சுவையுடன், ருசியாகவும் சிறிய அளவிலும் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் உகந்த பழமாகும்.

  • கண்ணிற்குக் குளிர்ச்சியைத் தரும். 
  • தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
  • தலைபாரம் நீங்கப் பயன்படும்.
  • இளைஞர்களுக்கு சுறுசுறுப்பை தரும் இனிய பழம்

கருவாழைப் பழம்

மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம் எவருக்கும் கெடுதல் தராது உடலுக்கு ஊட்டத்தைத் தரும் நல்ல பழம் இது.

இக்கனி தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை. அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்

வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது

குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.

அடுக்கு வாழைப்பழம்

நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதலும் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடாமல் இருப்பது நல்லது.

  • தேகவனப்பை வளப்படுத்தும்.
  • மலச்சிக்கலைப் போக்கும்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

தினமும் ஏதாவது ஒரு வாழைப் பழத்தை உணவிற்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து  உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.

வாழைப்பழத்தில் பால்வினை நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால் அதன் மேல் லேசாக கரும்புள்ளிகள் விழுந்தபின் வாங்கி சாப்பிடுவது நல்லது.


வாழைபழத்தின் பொதுவான மருத்துவ பலன்களைப் பற்றி தெரிந்தகொள்ள இந்த linkயை கிளிக் பண்ணவும் 


வெள்ளி, 4 மார்ச், 2016

Health Benefits of Banana - வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் 

உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் உட்கொள்ளப்படும் சத்துக்கள் நிறைந்த பழம் வாழைப்பழம், முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் அதிகம் சாப்பிடப்படும் பழத்தில் முதலிடம் பிடிப்பது வாழைப்பழமே. எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைக்ககூடிய அனைத்துத்தர மக்களும் விரும்பி சாப்பிடக்கூடிய விலையில் சத்துக்களை உள்ளடக்கிய பழம் வாழைப்பழம். இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கார்போஹைட்ரேட் , பாஸ்பரஸ் புரோட்டீன், இரும்புசத்து மற்றும் மினரல்கள் அதிக அளவு உள்ளது. குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளது ஒரு சராசரி வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் – 23 gm , சர்க்கரை – 12 gm , நார்சத்து - 2.6 gm, கொழுப்பு – 1 gm மற்றும் வைட்டமின் C - 9 mg உள்ளது உடலுக்கு ஊட்டம் அளிக்கும் கலோரிகள் – 90 gm உள்ளன.

மருத்துவ குணங்கள் 


அன்றாடம் வாழைப்பழத்தை உட்கொள்வதால், உடலை நோய் தாக்காமல் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

சருமப் பிரச்சனைகள்

வாழைப்பழத்தை தினம் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளப்புடன் இருப்பதோடு, மென்மை ஆகும்.

கொசு மற்றும் சிறிய பூச்சிகள் கடி காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்பட்டு நமைச்சலை உண்டாக்கும். அதற்கு, வாழைப்பழத் தோலின் உட் பகுதியை கடிப்பட்ட இடத்தில், தேய்த்தால் வீக்கம் மற்றும் நமைச்சல் குணமாகும்.

”மரு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறுதுண்டாக வெட்டி தோலின் உட்பகுதி அந்த வடுவின் மேல் வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள் பட "மரு" மறைந்துவிடும்.

உடலை சீராக்கும்

வாழைப்பழம் நம் உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கிவிட்டு, உடலுக்கு சக்தியூட்டும் பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறைந்து சக்தி இழக்கும் போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் செயல்படுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள். பயிற்சியின் போது அவர்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும். மேலும், 


வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் உறுதியையும் கொடுக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B, நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள், நம் உடலை தொற்று நோய்கள் தாக்காமல் பாதுகாக்கின்றன. மேலும், பருவகால மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகளும் தவிர்க்கப்படும்.

வாழைப்பழம் நம் உடலில் வளர்சிதை மாற்றம் (உணவில் உள்ள சத்துப் பொருளை பிரித்து பயன்படுத்துவது) குறையாமல் பார்த்துக் கொள்ளும், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. நாள் முழுவதும் உடல் தனது சக்தியை இழக்காமல் இருக்கும்.

மலச்சிக்கல் மற்றும் மூலநோயிலிருந்து விடுதலை

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் இதில் உள்ள பைபர் (Fiber) மலம் எளிதாக வெளியேற வகை செய்யும். 


மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.

வயிற்றுப் பிரச்சனைகள் 

தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

வாழைப்பழமும் தேனும் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு தீரும்.

வயிற்றுக்கடுப்புக்கு வாழைப்பழத்தை மசித்து சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதியில் அதிகமான அமிலத்தன்மையால் ஏற்பட்ட குடற்புண்ணை குணப்படுத்துவதுடன், மீண்டும் குடற்புண் வராமல் காக்கும். 


தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அழற்சியையும் குணமாக்கும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

நெஞ்செரிச்சலுக்கு காரணமான அமிலத்தன்மையும் வாழைப்பழம் கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தலைசுற்றல்

வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்த மில்க்க்ஷேக் (Milk Shake) ஒரு டம்ப்ளர் அருந்தினால் தலைசுற்றலை உடனே விரட்டும். வயிற்றை இதப்படுத்தும் குணம் வாழைப்பழத்திற்கு உண்டு, தேன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, மேலும் பால் சேர்வதால் உடலுக்கு போஷாக்கும் கொடுக்கிறது.

குடிபோதையை நீக்க வாழைப்பழ மில்க்க்ஷேக் செய்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

சிலருக்கு சிறிது தூங்கி எழுந்தால் கூட மந்தமாக இருப்பதை உணர்வார்கள் அவர்களுக்கு, மில்க்க்ஷேக் நல்ல பலனை கொடுக்கும், மந்தநிலை தீரும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த

புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டவர்களுக்கு, அப்பழக்கத்தின் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் நுரையீரலில் படிந்து இருக்கும் அதனை வாழைப்பழத்தில் உள்ள சத்துப்பொருட்கள் அகற்றி வெளியேற்றிவிடும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடுபட வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

மன அழுத்தம்

வாழைப்பழம் மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

மன இறுக்கமான சமயத்தில் வாழைப்பழம் உட்கொண்ட பிறகு இறுக்க நிலை மாறுவதை உணரலாம், அதாவது மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.

மூளை செயல்பாடு

பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலை உணவிற்கு பின் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

மாணவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் மூளைத்திறன் அதிகரித்ததோடு, இதில் உள்ள பொட்டாசியம் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கச் செய்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு 

மாதவிலக்கு தள்ளிப்போதல் மற்றும் மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் குணம் பெறலாம்..

வாழைப்பழம் உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுப்பதோடு இதிலுள்ள சர்க்கரை சத்து இரத்தத்தில் கலந்து வாந்தியை நிறுத்தும்.

சிறுநீரக பிரச்சனை

வாழைப்பழம் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு நாளைக்கு 8 - 9 பழங்கள் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்ட எந்த ஒரு பிரச்சனையானாலும் சரியாகும்.

எடை குறைய

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.

வேலை பளு காரணமாக சிலர்க்கு இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாமல் உடற்பருமன் ஏற்படும், அவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராகி உடற்பருமன் குறைய வாய்ப்புள்ளது.

இதயநோய் மற்றும் பக்கவாதம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களை சீராக்கி இருதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும், மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் 

வாழைப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதால், இது இரத்தச் சோகையை நீக்கி, இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு உப்பு தன்மை இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தி சீரான இரத்த ஒட்டத்திற்கு வழிவகுக்கிறது. அதிக இரத்த அழுத்தம் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்,

இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவால் காலையில் வெறும் வயிற்றில் சிலருக்கு பலவீனம் மற்றும் படபடப்பு ஏற்படும். இதற்கு வாழைப்பழம் சிறந்த தீர்வாகும்.

உடல் சூட்டை குறைக்கும்

வாழைப்பழம் உடல் சூட்டை சமநிலைப்படுத்தும். காய்ச்சல் அறிகுறி ஏற்படும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் சூடு குறையும்.

சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட குணமாகும்.

வாழைப்பழத்தை தினம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் 


கண் பிரச்சனைகள் நீங்கும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் தவிர்க்கப்படும்,

உடலில் அலர்ஜி ஏற்பட்டு அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.

இரத்தமும் சுத்திகரிக்கப்படும்.


உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். 

குடலை சுத்தம் செய்து, குடலியக்கத்தை சீராக்கும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.

வாழைப்பழம் எப்படி வாங்க வேண்டும்

வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள், அதனை விரைவில் பழுக்க வைக்க ஒரு பிரவுன் பேப்பரில் சுற்றி வைத்தல் சீக்கிரம் பழுத்துவிடும்.

தவிர்க்கவேண்டியது 


வாழைப்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது, அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டு விடுவார்கள்.

ஆஸ்துமா மற்றும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

வாழைப்பழத்தை உணவிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது உணவிற்கு ஒரு மணி நேரம் பின்பு சாப்பிட வேண்டும். 


வாழைப் பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது தவறு.

வாழைப்பழத்தை வெறும் வயற்றில் சாப்பிடக் கூடாது.


வாழை மரம் பற்றி அறிய கீழே உள்ள linkயை கிளிக் பண்ணவும் 


புதன், 2 மார்ச், 2016

Health Benefits of Banana Tree - வாழைமரத்தின் மருத்துவ குணங்கள்

வாழைமரம்

வாழையை நாம் மரம் என்று சொல்வது தவறு அது தாவர வகையை சார்ந்ததாகும், மற்ற மரங்களைப் போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இதில் இல்லை. உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. 
வாழை மரத்தின் ஆயுள் அது பூத்து காய்த்த பின் முடிகிறது. தன்னை அழித்துக் கொண்டு நமக்கு பல வகைகளிலும் பயன் கொடுக்கக்கூடிய அற்புதமான தாவரமாகும்.  நமக்கு அது மரம் என்று அறிமுகமானதால் இதனை மரம் என்றே கூறுவோம். 

வாழைக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. வீடு மற்றும் கோவில் விழாக்களில் வாழைப்பழம், வாழைமரம், வாழைஇலை மற்றும் வாழை நாரினால் கட்டப்பட்ட பூ மாலை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், ஒரு திருமணத் தம்பதியை வாழ்த்தும் போது வாழையடி வாழையாக வாழ வாழ்த்துவார்கள், என்னெனில் வாழைமரம் ஒன்று நாட்டல் போதும் அருகருகே வாழைக்கன்று தோன்றி தான் குலத்தை தழைக்கச் செய்யும் அதனால் தான் வாழையடி வாழையாக வாழ வாழ்த்துவார்கள்.

வாழைமரம் ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். இதை அறிந்த நம் முன்னோர்கள் வாழைமரத்தை வீட்டின் அருகே வைத்து பராமரித்தார்கள், விஷக்கடி அல்லது தீ விபத்து ஏற்பட்டால் வாழைத்தண்டு சாறு மற்றும் வாழைஇலையால் முதலுதவி செய்து தற்காத்துக் கொண்டார்கள்.   வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்து நமக்கு பயன் தரக்கூடியது. ஒவ்வொன்றாக வரிசையாக பார்க்கலாம்.

வாழை இலையின் மகத்துவம்

இந்திய கலாச்சாரத்தின் படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். வாழை இலை பச்சையம் நிறைந்தது. நார்ச்சத்து, இரும்பு மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன, உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. 

ஒரு வாழை இலையில் நாம் உணவைப் பரிமாறி உண்ணும் போது உணவு ஆரோக்கியமான உணவாகும். சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, இலையின் முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் உணவு இழுத்துக் கொண்டு விடும்.  இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். 

வாழை இலையின் மருத்துவ பயன்கள்



  • வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை ஏற்படாமல், முடி கருப்பாக இருக்கும்.
  • தீக்காயம்பட்டவர்களை வாழை இலை மீது படுக்க வைப்பதால், நெருப்பால் ஏற்பட்ட சூட்டின் தாக்கம் குறையும். 
  • சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். மேலும் பிளாஸ்டிக் கவரை வைத்து பேக்கிங் செய்வதைவிட, வாழைஇலை எளிதில் மக்கும் தன்மை உள்ளதால் சுற்றுசூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 
  • காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண் மேல் தடவி, வாழைஇலையை அதன் மேல் வைத்து கட்டி வந்தால் குணமாகும். 
  • சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையின் மேல் தேன் தடவி,  தினமும் சில மணி நேரம் இலை மேல் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 
  • தோல் தொடர்பான எரிச்சல்கள், அரிப்புகள் மற்றும் சோரியாசிஸ் கொப்பளங்களுக்கு வாழை இலையில் தேங்காய் எண்ணெயை தடவி எரிச்சல் உள்ள இடத்தை அந்த வாழை இலையால் சுற்றி விட்டால், தோல் பிரச்சனை போன இடம் தெரியாது. 
  • பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் D யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 
  • வாழைஇலையில் சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் நமது ஆயுட்காலமும் நீடிக்கும். 
வாழை இலை சாறு

வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும், இதனை அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை 10 நிமிடம் இளம் சூட்டில் அடுப்பில் வைத்து சூடு பண்ணி, சூடாறிய பின்பு சம அளவு தேன் சேர்த்து, 10 – 15 மி.லி. தினம் 2 – 3 வேளை அருந்த தோல் சுத்தமாகும், ஈறு மற்றும் வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கும்

வாழைப்பூ

நாம் அரிதாக உணவில் சேர்க்கக்கூடியது வாழைப் பூ, ஆனால் இதை வாரம் இரு முறையாவது கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் 


  • வாழைப்பூ தசைகளை உறுதிப்படுத்தும் மேலும் நரம்புகளை வலுவூட்டும், குறிப்பாக மூளை நரம்புகளில் ஏற்படும் சூட்டை தணித்து மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும். 
  • வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்த ஓட்டம் சீராகும். இரத்த நாளங்களில் தங்கி இருக்கும் கொழுப்புகளையும் கரைத்து, இரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் இரும்புச்சத்தை கிடைக்கச் செய்யும். 
  • இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், நோயின் தாக்கம் இருப்பின் சரியாகும். 
  • வாழைப்பூவின் துவர்ப்புத் தன்மை இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்றி இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும். கணையமும் வலுப்பெறும். 
  • வாழைப்பூ வயிற்று புண்களை ஆற்றும். செரிமானத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். 


குறிப்பு

செரிமானக் கோளாறு இருக்கும் போது வாழைப்பூவை தவிர்க்க வேண்டும்.


  • வாழைப்பூ இரத்தம் மூலம், உள்மூலம், வெளிமூலம் போன்ற மூல நோய்களை குணப்படுத்தும். 
  • வாழைப்பூ மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும் வாய்ப் புண்ணை போக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும். 
  • உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும். 
  • வயிற்றுக்கடுப்புக்கு வாழைப்பூ, சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றுடன் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். 
  • பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல், போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 
  • உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலிக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தீரும். 
  • ஈறு வீக்கம் மற்றும் புண்ணுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
  • வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல், வறட்டு இருமல் தீரும். தாது விருத்தி அடையும். 
  • வாழைப்பூவை  உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலில் வியர்வையை நன்கு வெளியேற்றும் மற்றும் வியர்வை நாற்றத்தைப் போக்கும். 
  • பித்தத்தால் ஏற்படும் கை, கால் எரிச்சலுக்கு, வாழைப் பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணையை சேர்த்து வதக்கி, எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணமாகும். 
  • குழந்தையின்மையால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். ஆண், பெண் இருவரும் வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் தாது விருத்தியாகும் கருப்பையும் வலுப்பெற்று குழந்தை உருவாகும். 
  • பருவ வயதில் ஏற்படும் சொப்பன ஸ்கலிதத்தை நிறுத்தச் செய்யும், விந்துவை கெட்டிப்படுத்தும். 


வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ 5 அல்லது 6 இதழ்களை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு, அதனுடன்

இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு

ஆகியவற்றை எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும், அடிவயிறு கனம் குறையும், இரத்த ஓட்டம் சீராகும் உடல் வலுவடையும். 

வாழைப்பூவை சூப் செய்து வாரம் ஒரு முறையாவது அருந்தலாம். 

இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை சமையலில் சேர்த்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

வாழைத்தண்டு

புனிதமான வாழை மரத்தின் மையத்தில் உள்ள தண்டை சாப்பிடலாம். வாழைத்தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் B, C ஆகியவை உள்ளன.

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள் 

வாழைத்தண்டை வாரத்துக்கு நான்கு முறையாவது கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து, உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

  • வாழைத்தண்டு உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றும். 
  • வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறுகள் நீங்கும், மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை சீராக்கும். சிறுநீர் தாராளமாக பிரியும். 
  • வாழைத்தண்டை ஜூஸ் அல்லது சூப் செய்து குடித்தால், குடலில் சிக்கிய மணல் கற்கள் வெளியேறும். 
  • சிறுநீரக கற்களை போக்கும்,  கற்கள் வந்தப்பின் ஏற்படும் வலியை அனுபவிப்பதை விட, நோய் வரும்முன் காப்பது சிறந்தது அவ்வப்போது வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுப்பதோடு அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
  • மலச்சிக்கலைப் போக்கும்.
  • உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்  வாழைத் தண்டு சூப்பை  மிளகு, சீரகத்தூளுடன் உப்பை குறைவாக  சேர்த்து அருந்தலாம். உணவில் உப்பு சேர்க்காமல் வாழைத்தண்டை சாப்பிடுவது நல்லது.  
  • நரம்புச் சோர்வை நீக்கும். 
  • உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். 
  • வாழைத்தண்டுச் சாற்றை கொதிக்க வைத்து ஒன்று அல்லது இரண்டு அவின்சு (15ml or 30ml) வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், தொடர் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். 
  • பாம்பு கடி மற்றும் விஷக்கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும். 
  • விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் விஷ முறிவு உண்டாகும். 
  • மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும். 

குறிப்பு 
வாழைத்தண்டு சாறை கொதிக்க வைக்காமல் அருந்துவது தவறு. 


வாழைத்தண்டு சூப் 

வாழைத்தண்டு – 4 அங்குலம்
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்
சின்ன வெங்காயம் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு
ஆகியவற்றை எடுத்து இடித்து சூப் செய்து  அருந்தினால்.
  • சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும். 
  • தேவையற்ற உப்பு, கொழுப்புகள் கரையும். 
  • கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்புப் படிவங்கள் நீக்கிப் பார்வையை தெளிவடையச் செய்யும். 
  • நரம்பு மண்டலத்தைத் சுறுசுறுப்பு அடையச் செய்யும்.
  • பித்தத்தை குறைக்கும். 
  • மாதம் ஒருமுறை வாழைத்தண்டு சூப் செய்து அருந்துவது நல்லது.

வாழைக்காயின் மருத்துவ குணங்கள்

  • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். 
  • வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக் கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 
  • வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். 
  • வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
  • வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. 
  • நீரழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காய் சாப்பிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.
  • வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். 
  • வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  • வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்கும்.

குறிப்பு 

  • கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய் மற்றும் வாழைப் பழத்தைத் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது அப்போதுதான் தோலில் உள்ள சத்துக்கள் உடலில் சேரும்.
  • வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.
  • வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும் என்னெனில் வயிறு மந்தமாகிவிடும்.
  • செரிமானக் கோளாறு, உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள், வாயுத்தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவோடு சாப்பிட வேண்டும், தவிர்ப்பது நலம். 

இலை மற்றும் தண்டினை இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகிறார்கள்.

வாழை நாரிலிருந்து கயிறுகள், விரிப்புகள், கடினமான ஃபான்ட் பேப்பர்கள் மற்றும் காகிதக் கூழ் அகியவை தயாரிக்கப்படுகின்றன.



வாழைப்பூவை கறி சமைத்து,
வாழைக்காயை பொரியலாக்கி, 
வாழைத்தண்டை கூட்டு வைத்து, 
வாழைப்பழம் பரிமாறி, 
வாழை இலையில் விருந்துண்போம். 
வாழைநாரில் மலர்களை தொடுத்து வண்ணமலர் சூட்டிடுவோம், வாழைச்சருகை தொன்னையாக்கி வெண்ணெய்,நெய் வைத்திடுவோம். வாழை மட்டை சாறெடுத்து வெந்தபுண் ஆற்றிடுவோம் வாழை வைப்போம்! வாழ வைப்போம்!
வளமாக வாழ்ந்திடுவோம்.



வாழைப்பழம் பற்றி அடுத்த பதிவில்....................