சனி, 21 ஆகஸ்ட், 2021

இரத்த அழுத்தம் அறிவோம் - Know about Blood Pressure

இரத்த அழுத்தம் அறிவோம் 

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல நம் இரத்தக் குழாய்களில் ஓடிக்கொண்டிருக்கிறது இரத்தம். அப்படி ஓடுவதற்கு ஓர் அழுத்தம் தேவை. அந்த அழுத்தத்துக்குப் பெயர்தான் இரத்த அழுத்தம் (Blood pressure).

பொதுவாக, ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது வழக்கமானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure) மேல் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி இரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம், 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure) கீழ் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற இரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது.

ஆனால், இரத்த அழுத்தம் எல்லோருக்குமே சொல்லிவைத்தது போல் 120/80 என்று இருக்காது. உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சிஸ்டாலிக் அழுத்தமும் டயஸ்டாலிக் அழுத்தமும் வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் ( WHO ) ஒரு நபருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை வழக்கமானது என்றும், இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை ‘உயர் இரத்த அழுத்தம்’ (High blood pressure); 100/70 மி.மீட்டரைவிடக் குறைந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ (Low blood pressure) என்றும் வரையறுத்தது.

அடுத்து, உயர் ரத்த அழுத்தத்தில் ‘வெள்ளைக்கோட்டு நோயியம்’ (White coat syndrome) என்று ஒன்று உண்டு. அதாவது, சில பயனாளிகள் மருத்துவரிடம் வரும்போது பரிசோதித்தால் இரத்த அழுத்தம் 130/90 எனச் சிறிது கூடுதலாக இருக்கும். இது அச்சத்தின் விளைவாக ஏற்படுவது. வீட்டுக்குச் சென்றதும் இது 120/80 என்று இயல்பாகிவிடும். இவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. 

இரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் இரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு இரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்.

உதாரணமாக, இரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும்.

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் இரத்த அழுத்தம்

பொதுவாக, வயது கூடும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் இரத்தக்குழாய் பாதிப்பு, அதிக இரத்தக்கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை.

மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான இரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை இரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.

தனித்த உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த உயர் இரத்த அழுத்தம்’   (Isolated Systolic Hypertension)   என்று பெயர். அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும்... டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும்.

இப்படி இருப்பதை ‘தனித்த உயர் இரத்த அழுத்தம்’ என்கிறோம். இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான இரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இது ஏற்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளிடம் இது இளம் வயதிலேயே காணப்படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் இரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.

திடீரென்று மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால்  இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer)அதாவது,‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன?

உயர் இரத்த அழுத்தத்தை காலமுறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால்  உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும்.

இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும். அது துடிப்பதற்கு சிரமப்படும். மாரடைப்பு வரும்.

மூளை பாதிக்கப்படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறிபோய்விடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

உயர் இரத்த அழுத்த வகைகள்

இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக் அழுத்தம்),  இதயம் விரியும்போது (டயஸ்டாலிக் அழுத்தம்) ரத்த அழுத்த நிலை...

100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)

141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)

160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)

180 முதல் 199 வரை110 முதல் 129 வரை மிகுநிலை (Severe)

200க்கு மேல் 130க்கு மேல் கொடியநிலை (Malignant)

புகைப்பதால் உடலுக்குள் நுழையும் நிகோட்டின் ரத்தக் குழாய்களை சுருக்கி விடுகிறது. இதனால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய இரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும்.

இங்கு இரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவதற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படையாக வைத்துத்தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது. எனவே, உயர் இரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது.

உயர் இரத்த அழுத்தத்தை தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள்

30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். காலம் கடந்து  கண்டுபிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்புகளும் சேர்ந்து கொள்கிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

உப்பைக் குறைக்கவும்!  

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட்  உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்...

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம். காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்து உணவுகள் உதவும்      

நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் குறைப் பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். எடையைக் குறைக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.

பழங்களை சாப்பிடுங்கள்

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நடக்க நடக்க நன்மை!

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.

புகை உடலுக்குப் பகை

சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது. புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ இரத்தக்குழாய்களை சுருக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய இரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப்பதையும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.

மதுவுக்கு மயங்காதீர்கள்!

அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் ஒருவருடைய இரத்த அழுத்தம், மது அருந்தாதவரை விட  இரு மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

தூக்கமும் ஓய்வும் முக்கியம்

தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும்  வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம்  லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

மாத்திரைகள் எப்போது அவசியம்? 

இன்றைய நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்துகளை கலந்து சாப்பிடும் வழிமுறைகளும் உள்ளன. அதனால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொன்றுவிடக் கூடியது இரத்த அழுத்தம். அதனால்தான் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’  அதாவது, ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

குறை இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் (Hypertension) குறித்து அநேகருக்கும் தெரிந்திருக் கிறது. அதேவேளையில் குறை இரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. உலகளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறை இரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது.

உயர் இரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி’ (Silent killer) என்கிறோம். அதுபோல் குறை இரத்த அழுத்தத்தை ஓர் எரிமலை என்கிறோம். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாததுபோல, குறை இரத்த அழுத்தமும் எப்போது ஆபத்தைத் தரும் என்று கூற முடியாது.

‘குறை இரத்த அழுத்தம்’ என்பது எது?

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம்; 80 என்பது கீழ் அழுத்தம். இரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை இரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.

நம்மிடையே பலருக்குக் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் இருக்காது. அவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறைகிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில தொல்லைகள் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான இரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை இரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் இரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது; இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் இரத்தம் குறைகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது.

யாருக்கு இது வருகிறது?

விபத்துக்குள்ளாகுபவர்கள், தடகள வீரர்கள், கடுமையான உடற் பயிற்சி/ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள்ளிட்ட சில ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள், இரத்தம் இழப்பவர்கள், இரத்தசோகை, கடுமையான நோய்த்தொற்று, இதயநோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நீரிழப்பு ஏற்பட்டவர்கள், ஒவ்வாமை உள்ள வர்கள் போன்றோருக்குக் குறை இரத்த அழுத்தம் ஏற்பட சாத்தியம் அதிகம். கடுமையான தீப்புண், அதிர்ச்சி, விஷக்கடி, மருந்துகளின் பக்க விளைவு போன்றவற்றாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

தலைப்பாரம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதிக தாகம், சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால், அப்போது குறை இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

‘இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம்’ என்பது என்ன?

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான்.

இதற்கு ‘இருக்கை நிலை குறை இரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது அதிகம். நடு வயதிலும் ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வருவதும் உண்டு. சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. அது ஏன்?

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் இரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். தானியங்கி நரம்புக் குறைபாடு (Autonomic neuropathy) உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். உணவைச் சாப்பிட்டதும் அதைச் செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் இரத்தம் சென்றுவிடும்.

இதனால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய இரத்தம் குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்துவிடும். இந்த வகை குறை இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சிறிது சிறிதாகச் சிறிய இடைவெளிகளில் உணவு சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்து உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

இதற்கு என்னென்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

குறை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மல்லாந்து படுத்த நிலையிலும் பிறகு எழுந்து நின்ற நிலையிலும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் நல்லது. சிலருக்கு ‘சாய் மேசை பரிசோதனையும் (Tilt-table Test) தேவைப்படும்.

குறை இரத்த அழுத்தத்தை தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள்

அடிப்படைக் காரணத்தைச் சரி செய்தால் மட்டுமே குறை இரத்த அழுத்தம் சரியாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்துகொள்வது நல்லது. சிறு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும்.

இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்

ஒருவருக்கு உடல் சோர்வு, சுறுசுறுப்பின்மை, மந்த நிலை தொடர்ந்து இருந்தாலே, குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு உடனடி பலனை தருவது உடற்பயிற்சிதான்.  

உடற்பயிற்சி செய்யும் போது, இரத்த அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.  தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எடை தூக்கும் பயிற்சி செய்வதும் நல்லதுதான் என்றாலும்,  தோளுக்கு மேல் அதிக எடையை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது. 

உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தவிர்க்கச் சொன்ன உணவுகளை  இவர்கள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம் பழம், அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால்  உடலில் இரத்த அழுத்தம் சீராகும். உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தாலும் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை குறையவில்லை என்றால் மருத்துவர்களை அணுகுவதுதான் நல்லது.

வீட்டு மருந்து

  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் சாற்றை 1 டம்ளர் அளவு எடுத்து 10 மிளகை தூள் செய்து கலந்து பகல் 11 மணிக்குப் பருகி வர உயர் ரத்த அழுத்தம் சீராகும். 
  • ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அது 50மிலியாக ஆனதும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்க அதிக இரத்த அழுத்தம் குறையும், குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தலாம்.
  • அதிக இரத்த அழுத்த நோயுள்ளவர்கள் செம்பருத்தி பூவின் இதழ்களை தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சீராகும்.
  • அருகம்புல் சாறு காலை வெறும் வயிற்றில் அருந்த இரத்த அழுத்தம் சமநிலைப்படும். உயர் / குறை இரத்த அழுத்தம் இரண்டு வகையினரும் அருந்த ஏற்றது.
  • திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  • கிராம்பு 6 அல்ல‍து 7 போட்டு ஒரு 5 நிமிடம் நீரில் ஊற வைக்க‍வேண்டும் பின் அதை கொதிக்க‍வைத்து வடிகட்டி அந்த கிராம்பு நீரை மித மான சூட்டில் எடுத்து குடித்தால். உயர் இரத்த‍ அழுத்த‍ம் சமநிலைப்படும். 
  • தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • கறிவேப்பிலை சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து கலந்து மதிய உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் அருந்த உயர் இரத்த‍ அழுத்த‍ம் குறையும்.
  • இலவங்கப்பட்டையை தேநீர் போட்டு அருந்தினால் இரத்த‍ அழுத்த‍ம் சமநிலைப்படும்.
  • சீரகத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். 
  • பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடிக்கலாம். 
  • முருகை கீரையில் இருந்து சாறு எடுத்து அதில் சீரகத்தை ஊறவைத்து பின் அந்த சீரகத்தை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

இயற்கையாக இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட வழிகள் 

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் இரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான  பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். 

இயற்கையாக இரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய 10 வழிமுறைகளைப் பார்ப்போம்.

காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல்பருமன் அதிகரிக்க அதிகரிக்க  சர்க்கரையின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால்  நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.

யோகா மற்றும் பிராணாயாமம்

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தாலே உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஈரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தினசரி யோகா, மற்றும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்வதால், உடலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.

நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும்!

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை, முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. இதுபோன்ற கடைகளில் எண்ணெயை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப சூடாக்குவதால் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்னும் அமில மாற்றம் நடைபெறும். இந்த எண்ணெய் நிறைந்த தின்பண்டங்களைச் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' படியத் தொடங்கிவிடுகிறது. இதனால், இதயக்குழாயில் சீரான இரத்த ஓட்டம் செல்லாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.   

கஃபைன், புகை, மது தவிர்க்கவும்!

இதயக்குழாய்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டியது அவசியம். சிகரெட்டில் உள்ள நிகோட்டின், மதுவில் உள்ள ஆல்கஹால், டீ, காபி ஆகியவற்றில் உள்ள கஃபைன் ஆகியவற்றால், இதயக்குழாயில் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, திடீர் தலைசுற்றல், வியர்வை வழிதல் ஆகியவை ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும்!

உணவைப் பதப்படுத்தும்போது, சோடியம் உப்பு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. குழம்பு, ரசம், காய்கறிகள் ஆகிய உணவுகளில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 1,500 மி.லி கிராம் அளவுக்கு உப்பு (ஒரு டீஸ்பூன் அளவு உப்பு) மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்!

உடல் எடையைக் குறைக்க ஜாக்கிங், காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள், யோகா, பிராணாயாமம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவற்றைச் செய்வதுடன் அவ்வப்போது, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றைச் சோதித்துப் பார்த்து குறைத்துக்கொள்வது நல்லது. தொப்பை போடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

சத்தான உணவுகளைச் சாப்பிடவும்!

தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ,  பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் இரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.   

எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்!

எண்ணெயில் பொரித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இவற்றைச் சாப்பிடுவதால், இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது இதய இரத்தக்குழாயின் உட்பகுதியில் படிந்து, நாள்பட நாள்பட இறுக ஆரம்பித்துவிடும். இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாதவர்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு - பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும்!

ஒவ்வொருவருக்கும் ஒருவித குழந்தைத்தனம், குறும்புத்தனம் மறைந்திருக்கும். வயதாக ஆக, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவற்றை விட்டு நாம் விலகி வெகுதூரம் வந்திருப்போம். குழந்தைகளுடன் விளையாடுவது, நடனம் ஆடுவது, உற்சாகக் கூச்சலிடுவது, குதிப்பது போன்ற செயல்களால் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடொனின் அதிகம் சுரக்கும். இதனால், மனம் லேசாகி இரத்த அழுத்தம் சீராகும்.   

லாஃப்டர் தெரப்பி / சிரிப்பு யோகா

மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் 'லாஃப்டர் தெரப்பி'  மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.  இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக் கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது,  குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, இரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது. எக்காரணம் கொண்டும் தனியாக அமர்ந்து சிரிக்காதீர்கள், நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்து ஜாலியாக பேசி மகிழுங்கள்.

அலர்ஜி - Allergy

அலர்ஜி... விரட்ட அருமையான வழிகள்! 

ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்து அலர்ஜி ஏற்படும்.

கத்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி... என ஆரம்பித்து மாடிக் காற்று அலர்ஜி, என ஒவ்வாமைப் பிரச்னைக்குக் காரணங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அதில் ஒன்று தோல் அலர்ஜி தொந்தரவு. 

சரி... அலர்ஜி பிடியில் இருந்து தப்பிக்க என்ன வழி? 

* இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் பசியாறுவது சிறந்த வழி.

* தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தது என்பதற்காக, லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு புதிய கலவை உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள். ரசாயனம் செறிந்த உணவுகளும், வேதிப்பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் குடியிருக்கும் நுண்ணுயிர்க் கூட்டத்தை அழித்துவிடும். அதுவரை, உணவின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதால், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை, முக எலும்புப் பதிவுகளில் சைனசைடிஸ், மூச்சுக்குழல் பாதையில் ஆஸ்துமா, தோலுக்கு அடியில் எக்சிமா என ஏற்படக் காரணமாகிவிடும். 

* எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். `மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

* சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. இது, அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி, அலர்ஜி, சைனசிடிஸைத் துரத்தக்கூடியது. 

* அறுகம்புல் நச்சு நீக்கி; அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து. 

* அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை. 

* பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும். 

* சோயா, காளான்கூட சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்... கவனம். அதேபோல, சோப்பை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதும் அலர்ஜி தரும்... அதிலும் கவனமாக இருக்கவும். 

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா? 

* கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம், கம்பு, தினை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சோளம், கம்பு, வரகு தானியங்களை கரப்பான் நோய் உடையவர்களும் அரிப்பைத் தரும் பிற தோல் நோய்க்காரர்களும் தவிர்ப்பது நலம் என்கிறன சித்த மருத்துவ நூல்கள். 

* குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும், கோதுமை சேர்த்த பேக்கரி உணவுகளையும் தோல் நோய் உள்ளவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். 

அலர்ஜியைப் போக்க... 

* சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது நல்லது. 

* வேப்பங்கொழுந்து - 1 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும். 

* கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். 

தேவையற்றதைத் தவிர்ப்போம்... ஒவ்வாமையை ஓரங்கட்டுவோம்.

திங்கள், 24 மே, 2021

வெப்ப நோய்களை விரட்டும் வெட்டி வேர்!   


கோடைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே அனல் அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும். பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் தலைகாட்டத் தொடங்கிவிடும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட புல் வகையைச் சார்ந்த இந்த  மூலிகைத் தாவரம் சுமார் ஐந்து அடி வரை வளரும். வேர்கள் சுமார் நான்கு அடிகள் வரை நீண்டிருக்கும். இதன் வேர்ப்பகுதி தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவப் பயன்கள்  மகத்தானவை. 

வெட்டி வேர் அனைத்து வகை நிலங்களிலும் வளரும் இயல்புடையதாக இருந்தாலும், மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் செழித்து வளரக்கூடியது. இவ்வேரை, மணமூட்டியாக தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும்,  பயன்படுத்துவர். 

மருத்துவ பயன்கள் 

• கோடைக் காலத்தில் ஏற்படும் நீர்க் கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள், சுலபமாக நம்மைத் தொட்டுப் படரும். அந்த நோய்களை மிக எளிதில் விரட்டி அடிக்கும் இந்த வெட்டி வேர், ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகையும் அளிக்கக் கூடியது. 

• வெட்டிவேர் குளிர்ச்சி உண்டாக்கி; பித்தம் அடக்கி. பித்தத்தால் உண்டாகிற குருதி அழல் (BP), சர்க்கரை நோயால் ஏற்படுகிற நீர் வேட்கை, மயக்கம் மற்றும் நரம்பில் ஏற்படுகிற வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

• வெட்டி வேரால் தட்டி செய்து வீட்டின் ஜன்னல் திரைகளாகப் பயன்படுத்தலாம். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல நறுமணம் வீசும்.

• வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின்  தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது. 

• வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன. சில்லென்ற இதமான காற்றுக்கும் வெட்டி வேர் விசிறியைப் பயன்படுத்தலாம். 

• ஆதி காலங்களில் பெண்கள் இந்த வேரை விரும்பி தலையில் அணிவார்கள். இதனால் கூந்தல் மணம் பெறும். 

உபயோகிக்கும் முறை 

• வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடியும். இதற்கு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் தூளைப் பசையாக்கி, தலையில் பரவலாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடல் சூடு தணிந்து, முகத்தில் எண்ணெய் வடிவது நின்று பளிச்செனக் காட்டும். 

• தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி - 60 மி.லி வரை  உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும்  குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம். 

• வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன்  கிடைக்கும். 

• காலநிலை மாறுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் இளமையில் முகப் பருக்கள் வருவது சகஜம். அதிக உஷ்ணத்தால், சிலருக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். பொடித்த வெட்டி வேர்த் தூளை தண்ணீர் விட்டுப் பசையாக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி, மென்மையான பருத்தித் துண்டால் துடைத்துக்கொள்ள வேண்டும். உடல்வாகுக்கு ஏற்றவாறு தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்’ போட்டு வந்தால், பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும். 

• சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊற வைத்து தலைமுடிக்கு தினமும் தேய்த்துவர, தலைமுடியின் வேர்க்கால்கள் பலப்படும். முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். இந்த எண்ணெய்யை பிரசவ தழும்புகளுக்கு தேய்க்க குறையும்,  தசைவலி மற்றும் மூட்டுவலி நீங்கும். 

• நன்றாகச் சுத்தப்படுத்தி உலர்த்திப் பொடித்த வெட்டி வேர்த் தூளையும், பெருஞ்சீரகம் என்னும் சோம்புத் தூளையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்க வேண்டும். இதை, தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற கோடைக்காலக் கடுப்பு நோய்கள் காணாமல் போகும். 

• வெட்டி வேர் குடிநீர் குளிர்ச்சியைத் தந்து நா வறட்சியைப் போக்கும். புதிய மண்பானை வாங்கியதும், இரண்டு மூன்று நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி நிரப்பிவைத்து அலசி சுத்தப்படுத்திப் பழக்க வேண்டும். இந்த மண்பானையில் ஒரு கைப்பிடி சுத்தமான வெட்டி வேரையும், சிறிது திருநீற்றுப் பச்சிலையையும் போட்டு, அதில் நல்ல நீரை ஊற்றிவைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். நா வறட்சி, தாகம் தீரும். மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சி கூடும். 

குளிர்பானம் 

மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாக மட்டும் இல்லாமல், இந்த வேர், தாகம் தணிக்கும் சர்பத் தயாரிக்கவும் உதவுகின்றது. வெட்டிவேரினை  மண்பானை நீரில் ஊறவைத்து, பனைவெல்லத்தினைக் கலந்து சர்பத் செய்து அருந்தி மகிழலாம். இதனால், உடல் சோர்வு நீங்கி, தெம்பு உண்டாகும்.

இனி, வெயிலுக்கு 'வெட்டிவேர்’தான் துணை!

புதன், 19 மே, 2021

உத்தாமணி என்ற வேலிப்பருத்தி 




தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகை தான் வேலிப்பருத்தி. இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது, காயத்தை விரைவாக  ஆற்றுகிறது. கல்லீரலை பாதுகாக்கும், இரத்த சர்க்கரை அளவையும், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.   

மூச்சிரைப்பைப் போக்கும்! 

• வேலிப்பருத்தி  இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு தீரும். 

• ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால் அதன் பெயர் 'கற்பக மிளகு’. இதை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். 

• உத்தாமணி இலைச் சாற்றோடு, சிறிது உப்புக் கூட்டி கொடுக்க வாந்தியுண்டாக்கி கபத்தை வெளியேற்றும். 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்! 

வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து,   கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து இரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. 

மாதவிடாய் வலிக்கு 

வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டையும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள். 

வாத நோய்க்கு 

• வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால் வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். 

• வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும். 

• மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலைச் சாற்றோடு சுண்ணாம்பு கலந்து போடும் வழக்கம் உண்டு. 

• உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து, பசை போலச் செய்து வீக்கங்களில் பற்றிட, உடனடியாக வீக்கம் வடியும். 

• இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல் நீங்கும். 

• கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கும் ஒத்தடம்  கொடுக்கலாம். 

குழந்தைகளுக்கு மருந்தாக

• வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும் போது, வேலிப்பருத்தி இலைகளைக் குடிநீரிட்டு ஒரு ஸ்பூன் கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும். 

• வேலிப்பருத்தி இலைச்  சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு வாயுக் கோளாறு இம்சைப்படுத்தாது. சுரத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த ‘வேலிப்பருத்தி மிளகு’ பயன்படும். 

• உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வாரமொருமுறை குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். 

• சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு   வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து கஷாயம் செய்து  பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். 

இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

சங்குப் பூ 




சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடி வகை செடி. இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது.  

  • வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி, புண்கள் ஆகியவற்றை போக்கலாம். 
  • ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக் கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம். 
  • மருத்துவ குணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு. மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும். இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது. 
  • இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. 
  • படபடப்பு, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்குப் பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. 
  • உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப் பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது.  
  • பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பெற உதவுகிறது சங்குப் பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்க சங்குப்பூக்களை  உணவாக உண்ணலாம். 
  • உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது. 
  • மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கும் மாமருந்தாக பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது. 
  • உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை போக்கும் தன்மை கொண்டது.  
  • மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். 
  • குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும் சிறந்த Memory Plus மருந்து. அதே சமயம், குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது. 
  • விளக் கெண்ணெய்யுடன் சங்குப் பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக் கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.  
  • சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும். இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வீக்கம் கட்டுப்படும். 
  • குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
  • அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப் பூ செடிகள். சங்குப்பூ செடியின் பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்குப் பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும். 
  • தேநீர் தயாரிக்க : சங்குப் பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். 
  • சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது.
  • வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும். 
  • நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரைப்பை நோய் குணமாகும். 
  • வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக் கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும்.  
  • நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்குப் பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம்.  
  • கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப் பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம்.  

சனி, 15 மே, 2021

வெப்பாலை

வெப்பாலை 




பெயர்க் காரணம்: பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக்கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். 

அடையாளம்: இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. மர வகையைச் சார்ந்த இதன் காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர்.    

மருந்தாக :

  • இது சுரத்தைக் குறைக்கும். சுரத்தால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும், சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும்.
  • வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்துக் குடிநீரிட்டு கொடுக்கலாம். 
  • வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைகொண்ட ‘வெட்பாலை அரிசிக்கு’ செரிமானத் தொந்தரவுகளைப் போக்கும் திறன் உண்டு. 
  • துவர்ப்புச் சுவை மிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. 
  • செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.
  • வெட்பாலை அரிசி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. ‘கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, இரத்தக் குழாயை விரிவடையச் செய்து அதிகுருதி அழுத்தத்தைக் குறைக்கிறது. 
  • இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘இன்டிரூபின்’ (Indirubin) எனும் வேதிப்பொருளுக்குப் பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இலைகளிலிருக்கும் ‘ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. 

வீட்டு மருந்தாக: 

  • இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். 
  • இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகத் தடவும் வழக்கம் தொடர்கிறது. 
  • ஆரம்ப நிலை பல் வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும். 
  • இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல் நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாகப் பயன்படுத்தலாம். 

வெட்பாலை எண்ணெய்: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். சாதா தோங்காய்  எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம். 

இந்த எண்ணெயை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும். 

வெட்பாலை நம் வாழ்வை ஆக்கும் பூஞ்சோலை!

சனி, 24 ஏப்ரல், 2021

ஆவாரை

 ஆவாரை 




அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். இதன் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாவது மட்டுமின்றி  பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்குகிறது.   

ஆவாரையின்  அனைத்துப் பகுதிகளும் மிக்க துவர்ப்புடையது, காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும்  மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்  தன்மையுடையது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்  கொள்ள உதவுவது. 

உடலின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டு பல  கேடுகளை உண்டாக்கிப் பின் புற்றுநோய்க்குக் காரணமாக விளங்கும் நச்சுக்களை(Free Radicals) விரைந்து வெளியேற்றும் குணம் கொண்டது. மனிதருக்கு நோய் செய்யும் நுண்கிருமிகள் எதுவாயினும் அழித்து அகற்றும் வல்லமை உடையது. 

ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். 

இது உடலை வற்றச் செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம்  தரக்கூடியது. ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது,  குருதியை நீர்மைப்படுத்தக்கூடியது உடல் தேற்றியாக விளங்கக் கூடியது. 

ஆவாரை நெஞ்செரிச்சல், அமில மேல்வரத்து(Reflex), ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், ரத்த மற்றும் சீதபேதி, நீர்க்கசிந்து அரிப்பைத் தரக்கூடிய ‘எக்ஸீமா’ எனும் தோல் நோய், கண்களின் எரிச்சல், புகைச்சல் மற்றும் புளிப்பு உண்டாகுதல், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்), மூட்டுக்களில் ஏற்படும் வலி, சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, உடலில் ஏற்படும் பலவித வீக்கங்கள், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் தொற்றுக்கள் போன்ற மிக நீண்ட பட்டியலான நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன் படைத்தது. 

ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொன்னிறமாகி அழகு கூடும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை மாறும், நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும்.  

பல வகைப்பட்ட சிறுநீர் கோளாறுகளை அகற்றும் திறன் கொண்டது, சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும் என்று பாடியிருக்கிறார் அகத்தியர்.

இவற்றை மனதில் கொண்டுதான் ஆவாரையின் ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது எனலாம்.

ஆவாரையின் மருத்துவப் பயன்கள் : 

* ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும். இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும். 

* ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும். 

* ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும். 

* ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும். 

* ஆவாரைச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கத்தை குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும். 

* ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும். 

* ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். 

* ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும். 

* ஆவாைரயின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும். 

* ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும். 

* ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும். 

ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம். 

சிவகரந்தை

சிவகரந்தை 




மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும். இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. 

சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும். 

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள், ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. 

  • சிவகரந்தையின் வேரை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். சூரணம் செய்தும் சாப்பிடலாம். 
  • சிவக்கரந்தை சூரணம் மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது, சிறுநீரக நோய்களை போக்க வல்லது, உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும், நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. 
  • கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், பேதி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர தலை, மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும். 
  • சிவ கரந்தையின் வேருடன் சீரகம் போட்டு கசாயம் செய்து காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும். 
  • கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும். 
  • இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும்,  ஆண்மை பெருகும்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பழச்சாறுகள் - Juices

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 

நாம் சோர்வுற்ற தருணங்களில், நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்ப வைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக இருக்கிறது. இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கைமுறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்களே தேவை. அப்படி அபார சத்துக்களை அள்ளி அள்ளித் தருபவை, பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ்கள். எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நாம் பல பழச்சாறுகளை அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். 

என்னென்ன ஜூஸ் குடித்தால் என்ன பலன்

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். அதோடு முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடுவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். எனவே, நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அல்சரை குணப்படுத்தும். இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, மற்றும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி, சீராகச் செயல்படவைக்கிறது.

எலும்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் பிரச்னை இருப்பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்றது.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும். ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும் சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசி ஜூஸை தவிர்க்கலாம். கெட்டக் கொழுப்பை குறைக்கும்.

தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் சாப்பிட பலன்கள் கிடைக்கும்.

பப்பாளிப்பழ ஜூஸ்

பப்பாளிப்பழம் உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர், உடல்பருமானவர், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.

திராட்சைப்பழ ஜூஸ்

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால், பெண்கள் இதனை அருந்தலாம். திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும். ஆஸ்துமாவையும் குணப்படுத்தக் கூடியது. நுரையீரலுக்கு நல்லது.

மார்பகப் புற்றுநோயாளி, புற்றுநோயாளிகள் என அனைவருமே அருந்தலாம்.

இதய நோயாளி அளவுடன் குடிக்க வேண்டும்..

மாதுளம்பழ ஜூஸ்

தினமும் ஒரு கப் மாதுளம்பழச் சாறு குடித்துவர, 15 நாட்களில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்பு, தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்னைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது.

பெண்கள், கர்ப்பப்பை பிரச்னை, ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் அருந்தலாம்.

பேரீச்சைப்பழ ஜூஸ்

பேரீச்சை ஜூஸைத் தொடர்ந்து குடித்தால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்தது.

ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அருந்தலாம்.

கேரட் ஜூஸ்

வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும். சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம். சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே கேரட் ஜூஸைப் பருக வேண்டும்.

பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்க, முடி வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்னை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் குடித்து வரலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எப்போதும் எலுமிச்சை ஜூஸைத் தான் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும். செரிமானத்தையும் அதிகரிக்கும். இந்த ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது.

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

ரத்தசோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குடித்து வருவது நல்லது.

அனைத்து ஜூஸ்களுமே ஏதோ ஒரு வகையில் பல நன்மைகளைத் தருபவைதான். நம் உடலுக்குப் பொருத்தமான ஜூஸைப் பருகுவோம்... ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமிடுவோம்.

வல்லாரைக் கீரை 




• வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். 

• வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம். 

• வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும். 

• குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும். 

• வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

• வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும். 

• இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். 

• வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். 

• நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. 

• யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும். 

• வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

குன்றிமணி - Crab's eye

குன்றிமணி 




படத்தில் இருப்பது வெள்ளை குன்றிமணி, பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் எடை அளவு அறிய குன்றிமணி பயன்பட்டன. 2 குன்றிமணி எடை என்பது இப்போது சுமார் 1 கிராம் எடையைக் குறிக்கும். 

சித்த மருத்துவத்தில் தலைக்கு எண்ணெய் காய்ச்சுவதிலும் அழகு சாதனப் பொருட்களில் சேர்மானப் பொருளாகவும், குன்றிமணியின் பங்கு உண்டு. இலை மற்றும் வேர் மருத்துவ பயன் கொண்டது. 

குன்றிமணி இலைகளின் கசாயமானது இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும். மேலும் இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து உடலில் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வடியும். அதுமட்டுமின்றி வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை குன்றிமணி இலைகள் சிறந்த தீர்வு அளிக்கும். 

குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. 

மருத்துவ பயன்கள் இருந்தாலும்  குன்றிமணி விஷத்தன்மை கொண்டது. உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்கு என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீக ரீதியாக சொல்வதென்றால், தொடர்ந்து தோல்வியை சந்திப்பவர்கள் இந்த வெள்ளை குன்றின் மணியை தன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றியை அடையலாம். தொழிலில் தோல்வி இருந்தாலும், படிப்பில் தோல்வி இருந்தாலும், எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் சக்தி இந்த வெள்ளை குன்றின் மணிக்கு உள்ளது.

பல் பராமரிப்பு - Dental Care

2 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் எவ்வளவு கறை படிந்தாலும் பிரகாசிக்கும் .. பற்கள் வெண்மையாக்கும் தீர்வு

எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒற்றை புன்சிரிப்பு போதும் எல்லாம் துளாகும். அப்படி புன்னகையை உதிர்க்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால்..எவ்வளவு சங்கடமாக இருக்கும். இதற்குதான் இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள் அல்லது தனியாகவும் எலுமிச்சை சாறை பற்களில் தேய்க்கலாம்.

பேக்கிங் சோடா : நச்சு நீக்கியாக செயல்படும் பேக்கிங் சோடா பற்களின் கறைகளையும் நீக்க உதவும். எனவே பேக்கிங் சோடாவை பற்களில் தேய்த்துப் பாருங்கள். பேக்கிங் சோடா அலர்ஜியை உண்டாக்கினால் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் : தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாயில் ஊற்றி நன்குக் கொப்பளியுங்கள் (Gargle). நுரை வரும் அளவிற்குக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவது மட்டுமன்றி; வாய் துர்நாற்றம், சொத்தை, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்னைகளும் நீங்கும்.

ஆப்பில் சிடர் வினிகர் : ஆப்பில் சிடர் வினிகரை பயன்படுத்தியும் வாயைக் கொப்பளித்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும். பற்களின் துர்நாற்றம் போகும்.

அலுமினியத் தாள் கலவை : பேஸ்ட், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, ஆப்பில் சிடர் வினிகர், தேங்காய் எண்ணெய் என மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு அலுமினியத் தாளில் பரப்புங்கள். அதை அப்படியே எடுத்து பற்களைச் சுற்றிலும் ஒட்டுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து தாளை எடுத்துவிட்டு வாயை தண்ணீரால் கொப்பளியுங்கள். பின் மீதமிருக்கும் கலவையையும் பற்களில் கைகளை வைத்து தேயுங்கள். மீண்டும் கொப்பளியுங்கள். இதனால் உடனே நல்ல பலன் கிடைக்கும். இந்தக் கலவையை அப்போதே செய்து தீர்க்க வேண்டும். மறுநாள் பயன்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களிடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பேக்கிங் சோடா கலந்து அந்த கலவையை அலுமினிய காகிதத்தில் வைத்து பற்களில் ஒட்டிக் கொள்ளலாம்.  

செவ்வாய், 30 மார்ச், 2021

Asthuma - ஆஸ்துமா

ஆஸ்துமா

நம் நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பலர் அவஸ்தைப்படும் வியாதிகளில் ஒன்று 'ஆஸ்துமா'.

ஏன் ஏற்படுகிறது

நம் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது சிறுநீரகங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சிறுநீரகங்களின் வடிகட்டும் பகுதியில் உப்பு படிவங்கள் படிவது அல்லது கழிவு பொருட்களால் அடைப்பு ஏற்படுவது அல்லது சீதோஷண நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் குளிர்ச்சியால் சிறுநீரகங்களில் சுருக்கம் ஏற்படுவது ஆகிய காரணங்களால் கழிவுநீர் முழுவதும் பிரிக்கப்பட முடியாமல் இரத்தத்திலேயே கலந்துவிடுகிறது. இந்த கெட்டுப் போன இரத்தம் நுரையீரலை அடையும்போது, அங்கு சுரக்கும் நீருடன் கலந்து சுத்தம் செய்யப்படுகிறது.

அப்படி சுத்தப்படுத்த பெறும்போது பிரிக்கப்படும் கழிவுநீர், தும்மல் மூலம் மூக்கில் நீராக வெளியேறுகிறது. பிறகு இந்த நீர் இறுகி மூக்கடைப்பு ஏற்படுகிறது. மூக்கு சிந்தும்போது சளியாக வெளியேறுகிறது. இறுகிய இந்த கழிவே இருமலின் போது கோழையாக வெளியாகிறது.

ஆக, நம் இரத்தத்தில் அசுத்தம் ஏற்பட்டால், அது எந்த காரணத்தினால் ஏற்பட்டாலும், நம் உடல் தானாகவே அதை வெளியேற்றும் வேலையை செய்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் பிரச்சனை இத்தோடு முடிந்துவிடும். 

சரி.. எப்படி செயல்படுவது?

மூக்கில் நீர் அல்லது சளி வரும்போதே அதை சிந்த வேண்டும். அப்படி வெளியே வரும் சளியை சிந்தாமல் நம்மில் பலர் விழுங்கிவிடுவர். அப்படி செய்வதால், உடல் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, இருமலின் வாயிலாக இன்னும் கொஞ்சம் பலமாக வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் நாம் என்ன செய்வோம்? முதலில் மூக்கில் நீராக வந்தது, பிறகு சளியாகி இப்போது இருமல் வரை வந்துவிட்டதே என பயந்து மருத்துவரிடமோ அல்லது மருந்து கடைக்கோ சென்று சளிக்கான மாத்திரை அல்லது மருந்தை வாங்கி சாப்பிடுவோம். அது சளியை நிறுத்தும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு. ஏனென்றால் சளி என்பதும் ஒரு கழிவு. அதை உடலே வெளியேத் தள்ளும்போது அது உருவாக காரணமாய் இருந்த அந்த அடிப்படை பிரச்சனை (சிறுநீரகம்) என்னவென்று தெரிந்துகொள்ளாமல், நாம் அதை நிறுத்துவதற்கான எதிர்வினையை செய்கிறோம். விளைவு மூக்கில் வடியும் சளியை நாம் நிறுத்திவிடுவதால், அது நுரையீரலில் சேர்ந்து விடுகிறது இப்படி நுரையீரலில் படிந்த கழிவு நீரையே 'கபம்' என சொல்லுவர். இதன் காரணமாக இருமல், மூச்சு திணறல், மூச்சு வாங்குதல், பீனிசம் (Sinus) போன்றவை ஏற்படுகின்றன. நாளடைவில் இதுவே ஆஸ்துமாவாக உருமாறுகிறது.

எப்படி குணப்படுத்துவது?

சிறுநீரகங்கள் சீராக செயல்பட பின் விளைவு ஏற்படுத்தாத தக்க மூலிகை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டும் நுண்வலை நரம்புகளை சரி செய்ய விசேஷ அனல் சிகிச்சை (Sauna Bath) முறையை கையாள வேண்டும்.  

தேவையான பொருட்கள்:

● சீரகம்   - 15 கிராம்

● தனியா  - 15 கிராம்

● பச்சை வேப்பிலை (முற்றியது) - 15 கிராம்

● வில்வ இலை   - 25 கிராம்

● அத்தி இலை   - 25 கிராம்

● ஆடாதோடை இலை  - 25 கிராம்

● தண்ணீர்  - 1½ லிட்டர் -

இவை அனைத்தையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக சுண்டியதும் இறக்கி ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாட்டிலில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு முறை தயாரித்த கஷாயத்தை, லேசாக சூடேற்றி தினமும் சாப்பாட்டிற்கு முன் 100 மில்லி அளவு நாவினால் ருசித்து எச்சிலில் ஊற வைத்தவாறு மெதுவாக குடிக்க வேண்டும். 

நீண்ட கால நோயாளிகள் 3 மாதம் இதை தொடர்ந்து குடித்துவர பூரண குணம் நிச்சயமாகும்.

புதன், 10 மார்ச், 2021

மூல நோய் கசாயம்

வலியோடு இருக்கும் செரிமானம் இன்மை, சீரணம் இன்மை,

நாக்கில் சுவை இன்மை, குடல் புழுக்கள், குடல்  பூச்சிகள்,

மூலம் சம்பந்தப் பட்ட மூலத்தில் ஏற்படும்  உதிரப்போக்கு வலி,

ஆசனவாய் அரிப்பு சம்பந்தப் பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்

தீர்வாக அமைகிறது இந்த  மருந்து.

சுண்டைக்காய் வற்றல் ................ இரண்டு கிராம்

மிளகு ................ இரண்டு கிராம்

சீரகம் ................ இரண்டு கிராம்

வெந்தயம் ................ இரண்டு கிராம்

கறிவேப்பிலை ................ இரண்டு கிராம்

ஆகிய ஐந்து   பொருட்களையும்

நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் போட்டு குடித்து வர வேண்டும்.

கம கம என்று  வாசனையுடன் கூடிய கசாயம் இது

குறிப்பு

அனைத்துப் பொருட்களையும் சம அளவு சேர்த்து அரைத்து தூளாக்கி சூரணமாக எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு முதல் வாய் சோறு நெய்யில் பிசைந்து கொடுக்கலாம்

  • கர்ப்பிணிப் பெண்களும் இந்த மருந்தை பயமின்றி பயன்படுத்தலாம்
  • இதை ஒரு பருப்புப் பொடி போல பயன்படுத்தலாம்
  • அல்லது ஒரு துவையல் போல அரைத்தும் பயன்படுத்தலாம்
  • வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நல்ல மருந்து இது
  • மூல நோயைக் கரைக்கக் கூடிய மூல நோயின் தொந்தரவை மாற்றக் கூடிய எளிய மருந்து இது
  • ஆசன வாய் அரிப்பு முள் குத்துவது போன்ற எரிச்சலும் வலியும் வேதனையும் நீக்கக் கூடிய மருந்து இது

மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக் கொள்ள உதவும் நல்ல மருந்து இது

முதல் வகை மூல நோய்

உள் மூலம்

மலம் கழிக்கும்போது கடுமையான வலி வேதனை இரத்தப் போக்கு ஏற்படும் உள்ளே இருக்கக் கூடிய மூலத்தில் இருந்து கடுமையான வலியும் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்

மலசிக்கல் அதிகமாக இருக்கும்

வெளிப்புறமாக பார்க்கும்போது எந்த வித பாதிப்பும் தெரியாது

இரண்டாம் வகை மூல நோய்

வெளி மூலம்

மலம் கழிக்கும்போது மட்டும் ஒரு தசைப்பகுதி வெளியில் வந்து இருப்பதை உணர முடியும்

மலம் கழித்த பின் ஆசனவாயை சுத்தம் செய்யும்போது தசை வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையை உணர முடியும்

அரைமணி நேரத்தில் தானாகவே உள்ளே போய் விடும்

ஆசன வாய் முழுவதும் வலி வேதனை எரிச்சல் கடுமையான குத்தல் வலிகளும் இருக்கும்

மூன்றாம் வகை மூல நோய்

உள்ளே வளர்ந்திருக்கக் கூடிய தசைப்பகுதி முழுவதும் வெளியே பிதுங்கி தொங்கிக்கொண்டு இருக்கும்

எவ்வளவு முயற்சி செய்தாலும் உள்ளே போகாது

இந்த மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக்கொள்ள உதவும் அற்புதமான மருந்து இது

மூல நோய் வராமல் தடுக்க மூல நோயை அறுவை சிகிச்சை இன்றி குணப் படுத்திக் கொள்ள மூல நோய் மீண்டும் ஏற்படாமல் காக்கக் கூடிய ஆசன வாய் தசைப் பகுதிகள் மலப் பை பகுதி தசைப்பகுதிகளும் இரத்தக் குழாய்களும் பலப் பட உதவும் மருந்து இது

  • சுவை இன்மை ருசி இன்மை பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது இது
  • உணவு சாப்பிடுவதில் விருப்பத்தை ஏற்படுத்தி உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  • குடல் புழுக்கள் முழுமையாக வெளியேற காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்

இதை ஒரு மருந்தாக அல்ல உணவாக சாப்பிட்டு நலமுடன் வாழ முடியும்

முருங்கை vs கொரோனா

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

  • முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
  • வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.
  • முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.
  • இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
  • முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மலச்சிக்கல் - Constipation

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்…

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.

கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும் போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். 

இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். 

வாழ்க்கை முறை மாற்றங்கள் 

*  போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். தினமும் குறைந்தது 2.5 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*  வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும். மேலும் கண் பார்வை தெளிவாகும். மூலாதார சூட்டையும் தணிக்கும்.

*  தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.  

*  தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

*  இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி, புட்டு, இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

*  காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவதுடன், சரிவிகித உணவு உட் கொள்ளவும். 

*  வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.

*  தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.

*  மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும்.

*  மன அழுத்தம் தவிர்க்கவும்.

மலச்சிக்கல் நீக்கும் உணவுகள் 

*  காபி, தேநீர், குளிர்பானங்களை கூடுமானவரை தவிர்த்து விடவும். 

*  இளநீர், பழச்சாறு அருந்தவும். 

*  இரவில் இரண்டு பழங்கள் சாப்பிடுவது மிக நல்லது. வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சீஸனல் பழங்களும் உண்ணலாம். 

*  நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். 

*  வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், முட்டைகோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், 

*  கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், பேரீட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள், மிளகு, ஓமம், கொத்தமல்லித்தழை… 

இவையெல்லாம் நார்ச்சத்து நிறைந்தவை. உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்ல தீர்வு தரும்.