சர்க்கரை நோயாளிகள் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடலாம்!
வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டுச் சாப்பிடும் போது, உங்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாதான் இருக்கும். ஆனால், என்ன செய்வது சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாயைக்கட்டித் தானே ஆகணும். சர்க்கரை நோயாளிகளும் ருசியான உணவைச் சாப்பிட்டு சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.உடலில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாததை நோய் எனச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தினசரி உடற்பயிற்சி, சமச்சீர் உணவு என வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.
சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ' உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதைக் கடைப்பிடித்தாலே போதும். சரியில்லாத உணவுப் பழக்கம் உடல் நலத்தைக் குறைக்கும்
தினமும் காலையில் சரியான நேரத்தில் எழுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சமச்சீர் உணவு என முறையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
1. நேரத்துக்குச் சாப்பிடவேண்டும்
2. சரியான அளவில் சத்தான உணவை உட்கொள்வது அவசியம்
3. பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்ளும் விரதங்களைத் தவிர்க்க வேண்டும். அதேசமயம் வயிறு முட்டும் அளவுக்கும் சாப்பிடக்கூடாது.
4. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல் மருத்துவர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
* காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஏதாவது 'வார்ம் அப்' பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.பின் குளியல் முடித்து ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை சாப்பிடவும்.
* சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்க்காத பால்/காபி/தேநீர் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தலாம்.
அல்லது
மூலிகைத் தேநீர் ஏதாவது ஒன்றை தினமும் அருந்தலாம். இலவங்கப்பட்டை / சீரகம் / மல்லிவிதை / வெந்தயம் ஏதாவது ஒன்றை தேநீர் போட்டு அருந்தலாம்.
அல்லது
அருகம்புல் கஷாயம், ஆவாரைப் பூ குடிநீர், திரிபலா சூரணம் ஏதாவது ஒன்றை அருந்தி 15 - 30 நிமிடம் தவறாமல் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினம் அரைமணி நேர உடற்பயிற்சி அவசியம் பண்ண வேண்டும்.
காலை உணவு சரியாக 7 - 8.30 க்குள், சாப்பிட வேண்டியது
இட்லி - 3 (சிறியது),
அல்லது
மொறுமொறுப்பாக இல்லாமல் ஊத்தப்பம் போன்ற தோசை - 2 (சிறியது)
அல்லது
கோதுமை உப்புமா - ஒரு கப் 200 கிராம்)
அல்லது
சப்பாத்தி - 3 (சிறியது)
அல்லது
சத்தான சிறுதானிய உணவு செய்து சாப்பிட வேண்டும்.
இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம். இதனுடன் பருப்பு அல்லது சாம்பார் அதிக அளவில் எடுத்துக் கொண்டு சட்னியைக் குறைவாகச் சாப்பிடவும். தேங்காய் மற்றும் வேர்கடலைச் சட்னியை குறைத்து புதினா மற்றும் கொத்தமல்லிச் சட்னியை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
காலை உணவுடன் ஒரு கப் காய்கறி சாலட் அல்லது 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். (கொலஸ்ட்ரால் பிரச்னை இல்லாதவர்கள் மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்) ஆனால் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் முட்டை சாப்பிடுங்கள்.
சர்க்கரைநோய்க்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைத்தும், புரதச்சத்து மிகுந்த உணவை மிதமாகவும், நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் காலை உணவுடன் பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
முற்பகல் சிற்றுண்டி 10.30 - 11க்குள் சாப்பிட வேண்டியது
முளைகட்டிய பயறு ஒரு கப் அல்லது கோதுமை பிரட் - 2 அல்லது கொய்யா காய் பக்குவத்தில் 4 துண்டுகள்.
ஒரு கப் மூலிகை டீ.
மதிய உணவு சரியாக 12 - 1.30க்குள் சாப்பிட வேண்டும்
குக்கரில் வேகவைக்காத வடித்த சாதம் - ஒரு கப்(200 கிராம்)
பருப்பு அல்லது சாம்பார் - இரண்டு கப்
பொரியல் - ஒரு கப்
கீரை - ஒரு கப்
காய்கறி சாலட் - ஒரு கப்
புரதம் நிறைந்த பருப்பை உணவில் சேர்க்க வேண்டும்
அசைவம் சாப்பிடுபவர்கள் சாம்பாருக்கு பதிலாக மீன் குழம்பு, ஒரு கப் பொரியல், இரண்டு துண்டு குழம்பு மீன்கள் எடுத்துக்கொள்ளலாம். கறியில் கொழுப்பில்லாத மட்டன், தோல் மற்றும் எலும்பில்லாத சிக்கனை குழம்பில் போட்டதை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மாலை சிற்றுண்டி 3.30 - 4க்குள் சாப்பிட வேண்டியது
வேகவைத்த சுண்டல் கடலை அல்லது பயறு வகைகளில் ஏதாவது ஒன்று - ஒரு கப் அல்லது
பப்பாளி - 4 அல்லது 5 துண்டுகள் அல்லது
பேரிக்காய் - 2 (சிறியது) அல்லது
ஆப்பிள் - 1 (சிறியது) அல்லது
இவற்றில் ஏதாவது ஒன்றும் இதற்கடுத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு காபி அல்லது தேநீர் அருந்தலாம்.
இரவு உணவு 7- 8க்குள் சாப்பிட வேண்டும்
சப்பாத்தி - 3. அல்லது
கோதுமை ரவை உப்புமா - 1 கப் (200 கிராம்)
பருப்பு - ஒரு கப்
வேகவைத்த காய்கறி - ஒரு கப்
வயது முதிர்ந்தவர்கள் கோதுமை உணவை சாப்பிட முடியவில்லை என்றால் ஊத்தாப்பம் சிறியது 2 சாப்பிடலாம். இட்லி எளிதில் ஜீரணமாகி விரைவில் பசியைத் தூண்டும் என்பதால் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இரவு உணவுக்குப் பிறகு அரைமணி நேரம் கழித்து சூடாக ஒரு கப் பால் அருந்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக