நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
நீரிழிவு நோய் அழைத்து வரும் ஆபத்துகளில் சிறுநீரகச் செயலிழப்பும் (Kidney failure) ஒன்று. நாட்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரகச் செயலிழப்புக்காக சிகிச்சை பெறுபவர்களில் 60 சதவீதத்தினர் நீரிழிவு நோயாளிகளே. இதற்கு ‘டயபடிக் நெப்ரோபதி’ (Diabetic Nephropathy) என்னும் சிறுநீரகப் பாதிப்புதான் முக்கியக் காரணம்.
சிறுநீரகப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நம் உடலுக்குப் பயன்படும் சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் தேவை. இரத்தச் சர்க்கரையும் இன்சுலினும் சரியாக இருக்கும்வரை சிறுநீரகத்தின் வேலை இயல்பாக நடக்கிறது. இன்சுலின் அளவு குறைந்து, இரத்தச் சர்க்கரை அதிகமாகி விட்டால், அந்தச் சர்க்கரை நேரடியாகச் சிறுநீரகத்துக்குத் தான் வருகிறது. அந்த அதிகப்படியான சர்க்கரையைச் சிறுநீரகம் சளைக்காமல் சிறுநீரில் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.
நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியக் காரணம் இதுதான். ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தால் இந்த வேலைப் பளுவைத் தாங்க முடிவதில்லை. விளைவு? பகலில் வேகமாகவும், இரவில் மெதுவாகவும் சிறுநீரை வடிகட்டும் நெப்ரான்கள் எனும் வடிகட்டிகள் இப்போது இரவிலும் அதிக வேலை பார்க்கின்றன. அதனால்தான் இவர்களுக்கு இரவிலும் சிறுநீர் அதிகமாகப் போகிறது.
அடுத்ததாக, உடல் கழிவைத் தனியாகப் பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான பணி. ஆனால், நீரிழிவின் பாதிப்பால், சிறுநீரகம் இந்தப் பண்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் தாதுக்களையும்கூடச் சிறுநீரில் வெளியேற்றிவிடுகிறது. அதனால்தான் இவர்களுக்கு நீருக்கான தாகம் அதிகமாக ஏற்படுகிறது.
அடுத்தகட்டமாக, வடிகட்டிகள் தொடர்ந்து அதிகமாகச் சேதமடைவதால், உடலுக்கு மிகவும் அவசியமான நுண்புரதம் (Micro Albumin) சிறுநீரில் வெளியேறுகிறது. சாதாரணமாக, இந்தப் புரதம் சிறுநீரில் வெளியேறுவதில்லை. சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கியதும்தான் இது வெளியேறும். நீரிழிவு சிறுநீரகத்தைத் தாக்கியுள்ளது என்பதைத் தெரிவிக்கும் முதல் தடயம் இதுதான்.
இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுத்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திவிட்டால், சிறுநீரகப் பிரச்சினை சரியாகிவிடும். தவறினால், நீரிழிவு சிறுநீரகத்தைத் தொடர்ந்து தாக்கும். அப்போது ‘வெண்புரதம்’ (Macro albumin) வெளியேறும்.
ஒரு லிட்டர் சிறுநீரில் 20 – 200 மி.கி. வரை ஆல்புமின் எனும் புரதம் வெளியேறினால், அது நுண்புரதம்.
சிறுநீரில் ஆல்புமின் 200 மி.கி.க்கு மேல் வெளியேறினால் அதை வெண்புரதம் என்கிறோம்.
வெண்புரதம் வெளியேறத் தொடங்கும்போது இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவுகள் அதிகமாகும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் தடயங்கள் இவை. இப்போதும் சிகிச்சை பெறவில்லை என்றால் ஆபத்து இன்னும் அதிகமாகும். ஒரு கட்டத்தில், ஒட்டுமொத்த வடிகட்டும் வேலையையும் சிறுநீரகம் நிறுத்திவிடும். சிறிதுகூடச் சிறுநீர் பிரிய இயலாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்; ரத்த அளவு குறைந்துவிடும். அதற்குக் கடைசி கட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு (ESRD) என்று பெயர்!
நீரிழிவு உள்ளவர்கள் அனைவருக்கும் இப்படிச் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
இல்லை. இப்போது சொல்லப் போகிறவர்கள் தாம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.
* ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாதவர்கள்.
* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
* ரத்த கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்
* சிறுநீர்த் தடத்தில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர்கள்.
* புகைபிடிப்பவர்கள்.
* ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு உள்ளவர்கள்.
* நீரிழிவு காரணமாகச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பரம்பரையில் பிறந்தவர்கள்.
* விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள்.
* அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.
என்னென்ன அறிகுறிகள் தெரியும்?
* சிறுநீரகப் பாதிப்பின் தொடக்க கட்டத்தில் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது.
* பாதிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
* விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை குறையலாம்.
* முகம், கணுக்கால், கை, கால் ஆகியவை வீங்கும்.
* காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும்
* சிறுநீர் கழிவது குறையும்.
* பசி குறைவது, குமட்டல், வாந்தி, களைப்பு, மூச்சுத் திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு, எலும்பு பலவீனம் போன்ற பிற அறிகுறிகள் ஏற்படும்.
இவற்றை வைத்தும் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். என்றாலும், பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வுக்கூடப் பரிசோதனைகளே உதவும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இதயப் பாதுகாப்புக்கும் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
சிறுநீரக பாதிப்புக்கு பரிசோதனைகள் தீர்வுகள்
பரிசோதனைகள்
வழக்கமான ரத்தச் சர்க்கரை பரிசோதனைகள், HbA1C பரிசோதனைகளுடன் சிறுநீரில் புரதப் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், கொலஸ்ட்ரால், இரத்த அயனிகள், ஆல்புமின் கிரியேட்டினின் விகிதம் (ACR) மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) பரிசோதனை, வயிற்றுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்/சி.டி. ஸ்கேன் பரிசோதனை, சிறுநீரகத் திசு ஆய்வுப் பரிசோதனை ஆகியவற்றையும் மேற் கொள்ள வேண்டும்.
சிறுநீரில் புரதம் வெளியேறுவது, ஆல்புமின் கிரியேட்டினின் விகிதம் மாறுவது, இஜிஎஃப்ஆர் அளவு நிமிடத்துக்கு 60மி.லிட்டருக்குக் கீழ் குறைந்து மூன்று மாதங்களுக்கு மேல் நீடிப்பது ஆகியவை சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும். இஜிஎஃப்ஆர் 15க்குக் கீழ் குறைந்துவிட்டால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டது என்று பொருள்.
இன்னொன்று, இஜிஎஃப்ஆர் அளவு சரியாக இருந்து சிறுநீரில் புரதம் வெளியேறுகிறது என்றாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே பொருள். மேற்சொன்ன பரிசோதனைகளை நீரிழிவு உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் பாதிப்பின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து கடிவாளம் போடமுடியும்; சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும்.
என்ன சிகிச்சை உள்ளது?
இரத்தச் சர்க்கரையை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டியது இந்தப் பாதிப்புக்கான முதல் கடிவாளம். அடுத்ததாக, இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதும் முக்கியம். இந்தப் பாதிப்பின் தொடக்கத்தில் பயனாளிக்கு இரத்த அழுத்தம் சரியாக இருந்தால்கூட இரத்த அழுத்த மாத்திரை தரப்படும். காரணம், இந்த மாத்திரை சிறுநீரகத்தின் சுமையைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும்; சிறுநீரகத்துக்குப் பாதுகாப்பு தரும்.
அத்தோடு புரதமும் கொழுப்பும் குறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் சுமை இன்னும் குறையும். சிறுநீரைப் பிரிக்கும் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள், இரத்த ஊட்ட மாத்திரைகள் உதவும். கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) எனும் இரத்தச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும். மீட்க முடியாத கடைசி கட்ட பாதிப்புக்குச் ‘சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை’ (Kidney Transplantation) தேவைப்படும்.
எப்படித் தடுப்பது?
நீரிழிவின் ஆரம்பத்திலிருந்தே சரியான உணவுமுறை, இன்சுலின் மருந்து மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகள் மூலம் ரத்தச் சர்க்கரையை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் தேவையான தொடர் கவனிப்பும்தான் சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கும் முக்கிய அரண்கள். குறிப்பாக, HbA1C அளவு 6.5 சதவீதத்துக்குள்ளும் ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. உடற்பருமன் ஆகாது. சுயமருத்துவம் செய்யக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். ஊட்டச்சத்துணவு முக்கியம்.
இதற்கு உணவுக்கட்டுப்பாடு உண்டா?
கண்டிப்பாக உண்டு. பாதிக்கப்பட்டவர் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம். மருத்துவரின் பரிந்துரைப்படிதான் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த வகையிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடக் கூடாது. உணவில் உப்பின் அளவையும், புரதம் மற்றும் கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, வனஸ்பதி, பருப்பு, பயறு, பட்டாணி வகைகள் வேண்டாம்.
அப்பளம், ஊறுகாய், வத்தல், வடகம், சிப்ஸ், உப்பு பிஸ்கட், கருவாடு, தேங்காய், கீரைகள், கிழங்குகள், கொட்டை உணவுகள், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, மாம்பழம், இளநீர், இறைச்சி, மீன் வேண்டாம். அரிசி, ரவை, அவல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். நாட்டுக் காய்களையும் ஆப்பிள், அன்னாசி, கொய்யா, சீதாப்பழம், பச்சைத் திராட்சை ஆகிய பழங்களையும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக