சிறுநீரகம் காப்போம் - 1 -
நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. இரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தின் செயல்பாடு
மனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும்.
சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், இரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில் தான், இரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் இரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட்டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.
பயன்கள்
• கழிவுகள், நச்சுக்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.
• சிறுநீரகங்கள், இரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.
• இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
• எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின் தான் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன.
• வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.
• உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.
செயல்பாடு பாதிக்கப்படுவதால்
சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.
சிறுநீரகத்தைப் பாதிக்கும் விஷயங்கள்
சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.
உடனடி சிறுநீரகப் பாதிப்பு
• சிறுநீரகத்துக்குப் போதுமான இரத்த ஓட்டம் தடைப்படுதல்.
• சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.
• சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.
காரணங்கள்
• விபத்து காரணமாக இரத்த இழப்பு.
• உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.
• செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.
• சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.
• பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, மயோகுளோபின்’ (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
நாட்பட்ட சிறுநீரக நோய்
சிறுநீரகம் மூன்று மாதங்களுக்கு மேல் சரியாகச் செயல்படவில்லை எனில், அதை நாட்பட்ட சிறுநீரக நோய் என்கிறோம். இது மிகவும் ஆபத்தானது. நிலைமை மோசம் ஆகும் வரை இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. அறிகுறிகள் தெரியும்போது, சிறுநீரகப் பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றிருக்கும்.
நாட்பட்ட கால சிறுநீரக நோய் ஏற்படக் காரணங்கள்
• சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2)
• உயர் ரத்த அழுத்தம்
• நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
• சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று
• பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
• சில மருந்துகள் மற்றும் நச்சுக்கள்
• க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)
• சிறுநீர்ப்பாதை அடைப்பு
சர்க்கரை நோயினால் சிறுநீரகம் பாதிப்பு
நாம் உட்கொண்ட உணவை செல்கள் பயன்படுத்த இன்சுலின் சுரக்கிறது. போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைவாக இருந்தாலோ, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நம் சிறுநீரகங்கள், குறிப்பிட்ட அளவு மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்க அனுமதிக்கும். அளவு மீறும்போது, அதை வெளியேற்றும் பணியையும் செய்யும்.
வேலைப்பளு தொடரும்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், இரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தைக்கூட வெளியேற்றிவிடுகின்றன.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அது இரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. சிறுநீரகத்தின் உள்ளே பாதிக்கப்பட்ட இரத்தக் குழாயால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் சரியாகச் செய்ய முடிவது இல்லை. இதனால், உடலில் அதிக அளவில் நீர் தங்குகிறது. நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்தில் தங்குகின்றன.
சர்க்கரை நோய், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேற்றும் சிக்னல் உத்தரவு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, சிறுநீர்ப்பையின் அழுத்தம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.
டைப் 1, டைப் 2 என எல்லா வகை சர்க்கரை நோய்களும் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால், கவனம் தேவை.
இதைத் தவிர்க்க, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக மாவுச்சத்து உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு
இயல்புநிலையில் இரத்த அழுத்தமானது 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது, இதயம் சுருங்கும் போது 120-ம், இதயம் விரிவடையும் போது 80-ம் இருக்க வேண்டும். இதயம் விரிவடையும்போது 120 முதல் 139-க்கு உள்ளும், இதயம் விரிவடையும் போது 80-89 வரை இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதுவே, இதயம் சுருங்கும்போது 140-க்கு மேலும், இதயம் விரிவடையும்போது 90-க்கு மேலும் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் என்று அர்த்தம்.
மேலே சொன்னதுபோல, சிறுநீரகம் என்பது மிகப்பெரிய வடிகட்டி அல்ல. மிக நுண்ணிய அளவில்தான் இதன் செயல்பாடு இருக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, இரத்தக் குழாயின் சுவர் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய் என்பது, சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்களையும் சேர்த்துதான். மிகச்சிறிய இரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தில் இரத்தம் செலுத்தப்படும் போது, இரத்தக் குழாய் தளர்வுற்று, குறுகி, இறுக்கம் அடைகிறது. பாதிக்கப்பட்ட இரத்தக் குழாயால் போதுமான அளவு இரத்தத்தைச் சிறுநீரகத்துக்கு அளிக்க முடியாமல்போகிறது.
சிறுநீரகத்தினுள் உள்ள நெஃப்ரானில் முடியின் தடிமனைவிட சிறிய இரத்தக் குழாய்கள் உள்ளன. இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால், செயல்திறன் பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கலாம்.
டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகப் பாதிப்பு
சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த் தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection (UTI)) என்கிறோம். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து மேல் சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, யுரித்ரா எனப்படும் கீழ் சிறுநீர் குழாயில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பெரும்பாலும், கீழ்நிலை சிறுநீரக மண்டலத்தில் தான் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் உடலியல் அமைப்பு கிருமி பரவ ஏற்றதாக இருக்கிறது.
நோய்த்தொற்று கீழ்நிலையில் இருக்கும் போது தாங்க முடியாத வலி இருக்கும். தொற்றானது சிறுநீரகம் வரை பரவினால், பாதிப்பு அதிகமாக இருக்கும். பொதுவாக, பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பாதையில் நுழையும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பாதையை அடையும் கிருமியானது, சிறுநீர்ப் பையை அடைந்து மிக வேகமாகப் பெருக்கம் அடையும். பொதுவாக, நம்முடைய சிறுநீரக மண்டலமே இத்தகைய கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.
நம்முடைய செரிமான மண்டலப் பாதையில் காணப்படும் இ-கோலை பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது.
பொதுவான அறிகுறிகள்
• சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
• சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.
• மிகச் சிறிய அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
• சிறுநீர் கலங்கலாக இருத்தல்.
• சிறுநீரில் ரத்தம் கலந்து, கோலா நிறத்தில் இருப்பது.
• சிறுநீரில் நாற்றம்.
• இடுப்புப் பகுதியில் வலி.
நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அறிகுறிகள் மாறுபடும்.
சிறுநீரகம்: மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஆகியவை.
சிறுநீர்ப்பை: இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.
கீழ் சிறுநீர் குழாய்: சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.
பரிசோதனை
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பது கண்டறியப்படும்.
சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித் தொற்று எனக் கண்டறியப்படும்.
அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், சிறுநீர்ப்பாதை சி.டி., எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து பார்க்கப்படும்.
சிஸ்டோஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து பரிசோதனை செய்யப்படும்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்க
தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும்.
மலம் கழித்துவிட்டு ஆசனவாயைக் கழுவும்போது கவனத்துடன் செய்ய வேண்டும். மேல் இருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதவகையில் கவனமாக இருக்க வேண்டும்.
உடலுறவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இது, விரைவில் சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வெளியேற்றப்படும்.
சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic Kidney Disease)
சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கிறோம். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு. மரபியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.
இதில், ஒரு வகையான `ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal Dominant Polycystic Kidney Disease (ADPKD)) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது.
ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal Recessive Polycystic Kidney Disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம். இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவது.
கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பெண்களுக்கு இது கர்ப்ப காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
சுயமருத்துவம் செய்யாதீர்
டாக்டர் பரிந்துரை இன்றி, உடல் வலி, தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும். எல்லோருக்கும் எல்லா வகையான மருந்துகளும் ஏற்றுக் கொள்வது இல்லை. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
ஆன்டிபயாட்டிக், நெஞ்சு எரிச்சல் மருந்துகள், ஆன்டிவைரல், உயர் ரத்த அழுத்தம் என எந்த ஒரு மருந்தும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.
எனவே, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உடல்பருமன்
உடல்பருமனால் இதய நோய்கள், மூட்டுவலி வரும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர், அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
உடல்பருமனாக உள்ளவர்களுக்கு அதிகப்படியான கொழுப்பு அவர்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிகிறது. இரத்தத்தில், டிரைகிளசரைட் என்ற கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு குறைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை.
இவர்கள் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.
உடல் எடை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டயட் திட்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, அதிக அளவில் புரதச் சத்துள்ள உணவை எடுக்கின்றனர்.
அதிகப் புரதச்சத்து சிறுநீரகத்தின் வேலைப் பளுவை அதிகரிக்கிறது.
கார்போஹைட்ரேடுக்குப் பதிலாக, கொழுப்பை எரித்து அதிகப்படியான ஆற்றலைப் பெறும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனம்கூட சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்யலாம்.
எனவே, டாக்டரின் ஆலோசனை பெற்று சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
புகையிலை, மதுப் பழக்கம்
முன்கூட்டியே மரணம் நிகழ முக்கியமான காரணியாக இருப்பது புகையிலை. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள், கணையப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வர முக்கியக் காரணியாக சிகரெட் புகைத்தல் இருக்கிறது.
சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றன. சிறுநீரகத்துக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து பாதிப்படையச் செய்கிறது.
சிகரெட் நச்சுக்கள் இரத்தக் குழாய் சுவரை பாதிப்படையச் செய்து, குறுகலாக்குகிறது.
ஒருவருக்கு ஏற்கெனவே, உயர் இரத்த அழுத்தம் இருந்து, அதற்கான மருந்து எடுக்கிறார் என்றாலும், சிகரெட் புகைக்கும்போது, அது அந்த மருந்தின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதனால், இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)
சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய முடிச்சு, போன்ற வடிகட்டிகளில் (Glomeruli), நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதன் மூலம், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதுவும் உடனடி மற்றும் நாட்பட்ட சிறுநீரக பிரச்னையாக வெளிப்படலாம்.
முகத்தில் நீர் கோத்தல் (எடிமா), சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் இதன் முக்கிய அறிகுறிகள்.
சிறுநீரகப் பாதையில் தடை
சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கற்கள் உருவாவதால் இந்த அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு ப்ராஸ்டேட் அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.
சிறுநீரகம் காப்போம் - 2 - பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://ramakavi.blogspot.com/2021/01/save-kidney-part-2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக