ஞாயிறு, 31 ஜனவரி, 2021

உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் - Dry Fruits and Nuts

ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ்....நன்மைகள்....சாப்பிடும் முறை....சாப்பிடும் அளவு!

ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களும், பலன்களும் மிக அதிகம்.  உடல் எடையைக்   குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

1. பேரீச்சை

ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம் வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம் என்பதுடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும்.

  • பேரீச்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். 

  • நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம்.

2. வால்நட்

வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் (omega fatty acid) இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம். 

  • வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
  • நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அரை வால்நட் சாப்பிடலாம்.

3. பாதாம் பருப்பு

பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி(Antigen) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம். பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் புரோட்டின் அதிகமாகக் கிடைப்பதுடன் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக் கிடைக்கும். 

  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் சற்றே குறைவாகச் சாப்பிட வேண்டும்.
  • நாள் ஒன்றுக்கு 3 - 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம்.

4. அத்திப்பழம்

அத்திப்பழத்தில்  ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன.  இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி, இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். 

  • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
  • நாள் ஒன்றுக்கு ஒரு அத்திப் பழம் சாப்பிடலாம்.

5. உலர் திராட்சை 

இன்றைய சூழலில் பெரும்பாலானோரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதனைக் குறைத்து, தொடர்ந்து மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும் திறன் உலர் திராட்சைக்கு உண்டு. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் உலர் திராட்சைகளில், கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. மனிதர்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்(stress buster) அளவினையும், இரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவுக்கு குறைக்கும் உலர் திராட்சை, பலருக்கும் அடிக்கடி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் வராமலும் தடுக்கும். காய்ச்சல் சமயத்தில் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைத்து விரைவில் குணம் பெறலாம். குழந்தைகளுக்கு உலர் திராட்சையை ஜுஸ் செய்தும் கொடுக்கலாம்.

  • சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உலர் திராட்சை சாப்பிடலாம்.
  • நாள் ஒன்றுக்கு 5 கிராம் உலர் திராட்சை சாப்பிடலாம்                     

6. அப்ரிகாட்(abricot)

குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய அப்ரிகாட்டின் விலை சற்று அதிகம். வெளிநாடுகளில் இதனைப் பழமாகவே சாப்பிடுவார்கள். ஆனால், நம் இந்திய உணவுப் பழக்கத்தில் இதனை உலரவைத்து சாப்பிடுவது வழக்கம். அப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்து, கண் மற்றும் சருமத்துக்கு ஆரோக்கியம் தர வல்லது. 

  • ஒபிஸிட்டி, டயாபடிக், இதய நோய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் அப்ரிகாட்டை சாப்பிடக்கூடாது. 
  • நாள் ஒன்றுக்கு ஒரு நபர் பாதி அப்ரிகாட்தான்  சாப்பிடவேண்டும்.

7. பிஸ்தா பருப்பு 

பிஸ்தா பருப்பைச் சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து, உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ். 

  • உடல் எடை பிரச்னை உள்ளவர்கள் பிஸ்தா பருப்பை மிகக் குறைவான அளவில் சாப்பிடலாம். இதில் கொழுப்புச்சத்து இருப்பதால், 65 வயதுக்கு அதிகமானோர் பிஸ்தா பருப்பைத் தவிர்ப்பது நலம்.
  • குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 3- 4 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடலாம்.

8. முந்திரிப் பருப்பு

முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

  • விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
  • குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம். 30 வயதுக்கு அதிகமானோர் வாரத்துக்கு ஒருமுறை 2 - 4 என்ற அளவில் சாப்பிடலாம். 

அதிக அளவிலான சத்துகளைத் தரவல்ல டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வேலைக்குச் செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில்  சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இதனைக் கொடுத்தனுப்பலாம். இவற்றின் விலை சற்றே அதிகம்தான் என்றாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு முடிந்த அளவு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சாப்பிடலாம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிறுநீரகம் காப்போம் - Save Kidney - Part 2

சிறுநீரகம் காப்போம் - 2 - 

சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு தீர்வுகள் 

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் படியும் சிறிய அளவிலான கடினமான தாதுஉப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வலுவானவை. இந்தப் படிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. இந்தக் கற்கள், தாதுஉப்புகள் அல்லது அமில உப்புக்களால் ஆனதாக இருக்கலாம். 

சிறுநீரகக் கற்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அது, சிறுநீரகம் முதல் சிறுநீர்ப்பை வரை எங்கும் அடைப்பை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம். 

கற்கள் உருவாக முக்கியக் காரணம், சிறுநீர் மிகவும் கடினமானதாக இருப்பது தான். இதனால், அதில் உள்ள தாதுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்கின்றன அல்லது ஒட்டிக்கொண்டு கற்களாக உருவெடுக்கின்றன. 

சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். இந்தக் கற்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். 

சிறிய கற்களாக இருந்தால், அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் வெளியேற்ற முயற்சிக்கலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். 

காரணம் 

சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. 

சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பெரும்பாலும் இந்தக் கற்களை நாம் கண்டறிவது இல்லை. அது அடைப்பை ஏற்படுத்தும் போது தான், கற்கள் உருவானது நமக்குத் தெரிகிறது. 

அறிகுறிகள் 

சிறுநீரகக் கல், உருவான இடத்தில் இருக்கும் வரை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அது அங்கிருந்து நகரும் போது அல்லது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையும் போது அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

• முதுகு மற்றும் பக்கவாட்டில் தாங்க முடியாத வலி. குறிப்பாக, விலா எலும்புக்குக் கீழ். 

• கீழ் வயிற்றில் தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு நோக்கிப் பரவும். 

• வலி அலை அலையாக வரும். 

• சிறுநீர் கழிக்கும்போது வலி அதிகமாக இருக்கும். 

• பிங்க், சிவப்பு அல்லது பிரெளன் நிறத்தில் சிறுநீர் வெளிப்படும். 

• கலங்கலாகவும் நாற்றத்துடனும் சிறுநீர் இருக்கும். 

• குமட்டல் மற்றும் வாந்தி. 

• அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். 

• மிகக் குறைவாகவே சிறுநீர் வெளியேறுதல். 

• வழக்கத்தைவிட அதிகமாகச் சிறுநீர் கழித்தல்,காய்ச்சல். 

• நோய்த்தொற்றும் இருந்தால் உடல் சில்லிட்டுப்போதல். 

இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

சிறுநீரகக் கற்களின் வகைகள் 

எந்த மாதிரியான கல் வரலாம், எப்படி உருவாகலாம் எனத் தெரிந்து கொண்டோம் என்றால், கற்கள் உருவாவதை நம்மால் தவிர்க்க முடியும். 

கால்சிய கற்கள் 

சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சிய கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. தவிர, நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக, சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால், கால்சிய கற்கள் உருவாகின்றன. 

ஸ்ட்ருவைட் கற்கள்  (Struvite stones) 

நோய்த்தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும். 

யூரிக் அமிலக் கற்கள் 

எக்ஸ்ரேவில் இது தெரியாது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம். 

சிஸ்டின் கற்கள் 

மிகவும் அரிதாக ஏற்படக்கூடியது. சிறுநீரகம் அதிகப்படியாக குறிப்பிட்ட வகை அமினோ அமிலத்தைப் பிரிக்கும் மரபியல் ரீதியான நோயால் தோன்றக்கூடியது. மிக அரிதாக வேறு சிலவகைக் கற்களும் உருவாகின்றன. 

எப்படிக் கண்டறியலாம்? 

அறிகுறிகளைப் பொறுத்து, சில எளிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

ரத்தப் பரிசோதனை 

ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் அல்லது யூரிக் அமிலம் உள்ளதா எனக் கண்டறியலாம். 

எக்ஸ்ரே பரிசோதனை 

பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால், எக்ஸ்ரே கதிர்வீச்சை செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம். 

அல்ட்ரா சவுண்டு 

அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதை கண்டறியலாம். 

25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம். 

இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி) 

இரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி, சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது. 

சி.டி ஸ்கேன்: 

வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம். 

சிறிய கற்கள் 

மிகச்சிறிய கல் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய சிகிச்சை தேவைப்படாது. வலி நிவாரண மாத்திரை  எடுத்துக் கொண்டு, அதிக அளவில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொண்டாலே, சிறிய கற்கள் வெளியேறிவிடும். 

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறிய கற்களை வெளியேற்ற உதவும். பழச்சாறு அருந்துவதற்குப் பதில், தண்ணீர் அருந்துவது நல்லது. கற்கள் நகரும்போது, சிறுநீர்ப் பாதைக் குழாயில் பயணிக்கும்போது அதிகப்படியான வலி இருக்கும். இதைத் தாங்கிக்கொள்ள வலி நிவாரணிகளை டாக்டர் பரிந்துரைப்பார். அவர் பரிந்துரைத்த மாத்திரையைப் பரிந்துரைத்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 

சிலருக்கு, கற்கள் கரைந்து வெளியேற மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். சிறுநீர்ப்பாதையில் உள்ள தசைகளை தளர்வுறச் செய்து, கற்கள் எளிதில் வெளியேறவும் மருந்து பரிந்துரைக்கப்படும். 

பெரிய கற்கள் 

சிறுநீரகக் கற்கள் வெளியேற முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தால் அதற்குத் தண்ணீர் அருந்துவது, மருந்து எடுத்துக் கொள்வது பலன் அளிக்காது. ஏனெனில், இப்படிச் செய்தால், அது சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு, அடைப்பு, நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். எனவே, இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.

சிறுநீரகக்கற்களுக்கு சிகிச்சை 

எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோடிரிப்ஸி (ESWL) 

வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலையைச் செலுத்தி கல் உடைக்கப்படுகிறது. 1 முதல் 1 1/2 செ.மீ அளவுக்கு மேல் கல் இருந்தால், இந்த முறையைப் பயன்படுத்தி கல் உடைக்கப்படும். ஒலி அலையானது சிறுநீரகக் கல்லின் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தி, சிறுசிறு துண்டுகளாக உடைக்கும். இப்படிச் செய்யும்போது தாங்க முடியாத வலிகூட ஏற்படலாம். எனவே, அந்த நேரத்தில் மயக்க மருந்து எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படும். கல் உடைந்து வெளியேறுவதால், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். 

பெர்கியூட்டேனியஸ் நெஃப்ரோலித்தோட்டமி (பி.சி.என்.எல்.) 

இந்த முறையில் 2.5 செ.மீ அளவு உள்ள கல்லைக்கூட உடைத்து வெளியே எடுக்கலாம். இந்த முறையில், விலா எலும்புப் பகுதியில் சிறிய துளை இட்டு நெப்ரோஸ்கோப்பி கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி சிறுநீரகத்தில் துளையிட்டு கல்லை அடையும். இந்தக் கருவியுடன் உள்ளே செலுத்தப்படும் கேமரா இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் வெளியே காண்பிக்கும். கல்லை நெருங்கியதும் அது லேசர் கதிர்வீச்சால் உடைக்கப்பட்டு வெளியே உறிஞ்சப்படும். முந்தைய அறுவை சிகிச்சை முறைகளைக் காட்டிலும் மேலானது; வெற்றிகரமானது; பாதுகாப்பானது. இந்த முறையில் ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு இல்லை. இந்த சிகிச்சைக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கவேண்டும். 

யூரிட்டரோஸ்கோப்பி (யு.ஆர்.எஸ்) 

உறுதியான வளைந்து கொடுக்கக் கூடிய ஸ்கோப்பியானது, சிறுநீர் வெளியேறும் வழியாக உள்ளே செலுத்தப்பட்டு, கல் இருக்கும் இடத்தை அடையும். கல்லை அடைந்ததும் லேசர் கதிர்வீச்சைச் செலுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு செ.மீ அளவு உள்ள கல்லைக் கூட எடுக்க முடியும். ஆனால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் கல் இருந்தால் மட்டுமே இந்த முறையில் கல் எடுக்க முடியும். சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை இந்த முறையால் எடுக்க முடியாது. 

ரிட்ரோகிரேடு இன்டர்னல் ரிஸ்ட்ரோஸ்கோப்பி (ஆர்.ஐ.ஆர்.எஸ்.) 

வளையக்கூடிய யு.ஆர்.எஸ் என்ற ஃபைபரால் ஆன மெல்லிய டெலஸ்கோப் பைப், பிறப்புறுப்பு வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த பைப் சிறுநீர்ப் பையைத் தாண்டி சிறுநீரகம் வரை செல்லும். இதன், உள் முனையில் வெளிச்சத்துக்கு சிறிய லைட் பொருத்தப்பட்டிருக்கும். அதை வெளியே இருந்து இயக்கும்போது, உள்ளே சிறுநீரகத்தில் உள்ள காட்சிகள் வெளியே திரையில் தெரியும். 

அதைக்கொண்டு கல் எங்கே உள்ளது எனத் தெரிந்துகொள்ள முடியும். சிறிய கல்லாக இருப்பின், இந்த மெல்லியக் குழாயில் இருக்கும் கூடையை வைத்து வெளியே எடுத்து வந்துவிடலாம். பெரிய கல்லாக இருந்தால், அதை லேசர்கொண்டுதான் உடைத்து வெளியே எடுக்க முடியும். 

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க! 

* ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டும் அல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது. 

* ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். 

* வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். 

* வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால், உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

* நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். 

* இறைச்சி, உப்பு, சாக்லேட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) 

சிறுநீரகம் திடீரெனக் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.  சிறுநீரக செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ கூட ஏற்படலாம். 

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். எதிர்பாராதவிதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’ என்கின்றனர். 

நாட்பட்ட, திடீர் செயலிழப்பு பாதிப்பு என எதுவாக இருந்தாலும், அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தாக வேண்டும். 

சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் அக்யூட் கிட்னி ஃபெயிலியர் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகம் தன்னுடைய செயல்பாட்டைச் செய்யும் வாய்ப்பு உள்ளது. 

அறிகுறிகள் 

• சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்; எப்போதாவது சிறுநீர் இயல்பாக வெளியேறும். 

• உடலில் நீர் தேங்குவதால் கால், பாதங்களில் வீக்கம். 

• தூக்க உணர்வு. 

• மூச்சுத் திணறல் அல்லது சுவாசித்தலில் சிரமம். 

• சோர்வு. 

• குழப்பம். 

• குமட்டல். 

• நெஞ்சு வலி, அழுத்தம். 

• வலிப்பு. 

• மிக மோசமான நிலையில் கோமாவுக்குக்கூட செல்லலாம். 

சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கும். வேறு பிரச்னைக்கு பரிசோதனை செய்யும்போது இதைக் கண்டறிவதும் உண்டு. 

சிறுநீரகச் செயலிழப்பு... மூன்று காரணங்கள்! 

1. சிறுநீரகத்துக்குக் குறைவான அளவில் ரத்த ஓட்டம். 

2. விபத்து உள்ளிட்ட காரணங்களில் சிறுநீரகங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவது. 

3.  சிறுநீரகத்தில் இருந்து வெளிப்படும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. 

சிறுநீரகச் செயலிழப்பில் சிறுநீரகத்துக்கு இரத்த ஓட்டம் குறையக் காரணங்கள் 

• இரத்த இழப்பு அல்லது நீர் இழப்பு. 

• உயர் இரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து. 

• மாரடைப்பு. 

• கல்லீரல் செயலிழப்பு. 

• இதய நோய்கள். 

• மோசமான தீக்காயம். 

• சிறுநீரகப் பாதிப்பு 

• சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து கட்டிப்போதல். 

• கொழுப்பு படிந்து, சிறுநீரகத்துக்கு இரத்தம் செல்வது தடைப்படுதல். 

• சிறுநீரக நுண் வடிகட்டிகளில் வீக்கம் (Glomerulonephritis). 

• கீமோதெரப்பி சிகிச்சை, ஆன்டிபயாடிக் மருந்து, டை மருந்து செலுத்துதல், இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல். 

• மது, கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல். 

• சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுதல் 

• சிறுநீர்ப்பை புற்றுநோய். 

• சிறுநீர்ப்பாதையில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்துதல். 

• கர்ப்பப்பைவாய் புற்றுநோய். 

• பெருங்குடல் புற்றுநோய். 

• ப்ராஸ்டேட் பெரிதாவது. 

• சிறுநீரகக் கற்கள். 

• ப்ராஸ்டேட் புற்றுநோய் 

பரிசோதனை 

சிறுநீர் வெளியேறாமை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

மருத்துவமனையில் சிறுநீர் வெளியேறும் அளவு பரிசோதிக்கப்படும். சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என ஆய்வு செய்யப்படும். 

இரத்தப் பரிசோதனையின் மூலம், இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும். 

இமேஜிங் பரிசோதனை: 

அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி பரிசோதனை பரிந்துரைக்கப்படும். இதில், சிறுநீரகத்தின் அளவு எப்படி உள்ளது எனக் கண்டறியப்படும். 

புற்றுநோய் மாதிரியான பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டால், சிறுநீரக பயாப்சி பரிந்துரைக்கப்படும். 

சிகிச்சை 

சிறுநீரகச் செயலிழப்பு பிரச்னை உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

• சிகிச்சையின்போது, உடலில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற்றப்படும். 

• பொட்டாசியம், கால்சியம் அளவு கட்டுக்குள் இருக்க மருந்து அளிக்கப்படும். 

• உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற டயாலிசிஸ் செய்யப்படும். 

டயாலிசிஸில் இரண்டு வகை உள்ளன. ஹீமோடயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ் என்று இரண்டு வகை உள்ளது. 

ஹீமோடயாலிசிஸ் மருத்துவமனையில் செய்யப்படுகிறது.  இதில், கையில், இரண்டு குழாய்கள் பொருத்தப்படும். ஒரு குழாய் வழியே கெட்ட இரத்தம் இயந்திரத்தினுள் செல்லும். அங்கு அது சுத்தம் செய்யப்பட்டு, மற்றொரு குழாய் வழியே உடலுக்குள் செல்லும். இந்த இயந்திரத்தை செயற்கை சிறுநீரகம் என்று சொல்லலாம். 

வாரத்துக்கு 12 மணி நேரத்துக்கு டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கப்படும். 

பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது வீட்டில் செய்யப்படுகிறது. வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து குழாய் பொருத்தப்படுகிறது. இந்த குழாய் வழியே திரவம் செலுத்தப்படும். சுத்தீகரிப்பு முடிந்ததும் இந்த குழாய் வழியே திரவம் வெளியேறிவிடும். 

சிறுநீரக செயல்இழப்பு அடைந்தவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு அளிக்கும். 

உறவினர்களிடமிருந்து சிறுநீரகம் தானமாகப் பெறுவது, விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாகப் பெற்று பொருத்துவதன் மூலம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

சிறுநீரகம் காக்க ஏழு பொன் விதிகள் 

1) ஃபிட்டாக, துடிப்பாக இருக்க வேண்டும் 

உடல் ஃபிட்டாக இருக்க தொடர் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். எப்போதும் துடிப்புடன் இருக்க, குறைந்த தூரத்துக்குச் செல்லும்போது, நடந்து செல்ல வேண்டும். தினமும் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரன்னிங், டென்னிஸ் போன்றவற்றை விளையாடலாம். 

2) இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும் 

சிறுநீரக நோய்கள் வர முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய். எனவே, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான பரிசோதனைகளுடன், தங்கள் சிறுநீரக செயல்திறன் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தோம் என்றால், சர்க்கரையால் ஏற்படக்கூடிய பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் அல்லது தவிர்க்க முடியும். இது தொடர்பான சந்தேகம் இருந்தால், தயங்காமல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

3) இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க வேண்டும் 

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணமாக இருப்பது போல, சிறுநீரகச் செயலிழப்புக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, இரத்த அழுத்தம் இயல்புநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். 

4) ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் 

ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை மட்டும் பாதுகாப்பது இல்லை, இதயம், மூளை என ஒவ்வோர் உறுப்புக்கும் நல்லது. உணவில், உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மிகாமல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். 

உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். 

5) போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் 

ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். 

அதிக அளவு தண்ணீர் அருந்தும்போது, அது ரத்தத்தில் சோடியம், யூரியா மற்றும் நச்சுக்களின் அளவைக் குறைத்து. சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆனால், மிக அதிக அளவில் தண்ணீர் அருந்துதலும் கூடாது. 

தண்ணீருக்கு பதில் குளிர்பானங்கள் அருந்துவது மிகத் தவறு. கோலா, கார்பனேட்டட் பானங்கள்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 

6) புகை பிடிக்காதீர்கள்! 

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான இரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். மேலும், புகைப் பழக்கம் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 

7) வேண்டாமே சுய மருத்துவம்! 

தலைவலி, மூட்டுவலி, முதுகுவலிக்கு எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும் போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகுவலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். 

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் உணவுகள் 

க்ரேன்பெர்ரி ஜூஸ் 

சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையாமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட் படிமத்தை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நம் ஊரில் க்ரேன்பெர்ரி பழங்கள் கிடைப்பது இல்லை. ஆனால், ஜூஸ் கிடைக்கிறது. அதிகப்படியான சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாத ஆர்கானிக் ஜூஸாகப் பார்த்து வாங்கிப் பருகலாம். 

எலுமிச்சை ஜூஸ் 

இயற்கையான அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சைச் சாறானது சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதைத் தயாரிப்பதும் மிக எளிது. தினமும் கால் லிட்டர் வெந்நீரில், அரை எலுமிச்சைப் பழத்தை சாறு எடுத்து கலந்து பருகிவந்தால், சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும். தவிர, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, ஆப்பிள், வெள்ளரிக்காய், இளநீர்  சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள். உணவில், இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்கும். 

உணவில் கவனம் 

அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி எடுத்துக்கொள்வதும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதிகப்படியான வைட்டமின் சி, ஆக்சலேட்டாக மாறி, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே, எதையும் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ரெட் மீட் எனப்படும் மாடு மற்றும் ஆட்டு இறைச்சியை அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம். எனவே, இத்தகைய இறைச்சி உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

குளிர்பானங்களில், செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை போன்றவை அதிகப்படியாக சேர்க்கப்படுகின்றன. இதுவும் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. குளிர்பானம் எடுத்துக் கொள்வதற்கு பதில் பழச்சாறு அருந்தலாம். இல்லை எனில், தண்ணீர் எடுத்துக் கொண்டாலே, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 

ரீஃபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் மைதா, சர்க்கரை, வெள்ளை அரிசி போன்றவையும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இதைத் தவிர்த்தால் அல்லது எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்தாலே போதும்.

சிறுநீரகம் காப்போம் - Save Kidney - Part 1

சிறுநீரகம் காப்போம்  - 1 -

நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. இரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது. 

சிறுநீரகத்தின் செயல்பாடு 

மனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும். 

சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், இரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில் தான், இரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் இரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட்டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. 

சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. 

பயன்கள் 

• கழிவுகள், நச்சுக்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. 

• சிறுநீரகங்கள், இரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன. 

• இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. 

• எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின் தான் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன. 

• வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது. 

• உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. 

செயல்பாடு பாதிக்கப்படுவதால் 

சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம். 

சிறுநீரகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் 

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம். 

உடனடி சிறுநீரகப் பாதிப்பு  

• சிறுநீரகத்துக்குப் போதுமான இரத்த ஓட்டம் தடைப்படுதல். 

• சிறுநீரகங்கள் சேதம் அடைதல். 

• சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல். 

காரணங்கள் 

• விபத்து காரணமாக இரத்த இழப்பு. 

• உடலில் நீரிழப்பு ஏற்படுதல். 

• செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று. 

• சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல். 

• பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல். 

ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, மயோகுளோபின்’ (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். 

நாட்பட்ட சிறுநீரக நோய் 

சிறுநீரகம் மூன்று மாதங்களுக்கு மேல் சரியாகச் செயல்படவில்லை எனில், அதை நாட்பட்ட சிறுநீரக நோய் என்கிறோம். இது மிகவும் ஆபத்தானது. நிலைமை மோசம் ஆகும் வரை இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. அறிகுறிகள் தெரியும்போது, சிறுநீரகப் பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றிருக்கும். 

நாட்பட்ட கால சிறுநீரக நோய் ஏற்படக் காரணங்கள் 

• சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2) 

• உயர் ரத்த அழுத்தம் 

• நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு 

• சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று 

• பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் 

• சில மருந்துகள் மற்றும் நச்சுக்கள் 

• க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis) 

• சிறுநீர்ப்பாதை அடைப்பு 

சர்க்கரை நோயினால் சிறுநீரகம் பாதிப்பு 

நாம் உட்கொண்ட உணவை செல்கள் பயன்படுத்த இன்சுலின் சுரக்கிறது. போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைவாக இருந்தாலோ, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

நம் சிறுநீரகங்கள், குறிப்பிட்ட அளவு மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்க அனுமதிக்கும். அளவு மீறும்போது, அதை வெளியேற்றும் பணியையும் செய்யும். 

வேலைப்பளு தொடரும்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், இரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தைக்கூட வெளியேற்றிவிடுகின்றன. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அது இரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. சிறுநீரகத்தின் உள்ளே பாதிக்கப்பட்ட இரத்தக் குழாயால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் சரியாகச் செய்ய முடிவது இல்லை. இதனால், உடலில் அதிக அளவில் நீர் தங்குகிறது. நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்தில் தங்குகின்றன. 

சர்க்கரை நோய், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேற்றும் சிக்னல் உத்தரவு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, சிறுநீர்ப்பையின் அழுத்தம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. 

டைப் 1, டைப் 2 என எல்லா வகை சர்க்கரை நோய்களும் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால், கவனம் தேவை. 

இதைத் தவிர்க்க, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக மாவுச்சத்து உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு 

இயல்புநிலையில் இரத்த அழுத்தமானது 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது, இதயம் சுருங்கும் போது 120-ம், இதயம் விரிவடையும் போது 80-ம் இருக்க வேண்டும். இதயம் விரிவடையும்போது 120 முதல் 139-க்கு உள்ளும், இதயம் விரிவடையும் போது 80-89 வரை இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதுவே, இதயம் சுருங்கும்போது 140-க்கு மேலும், இதயம் விரிவடையும்போது 90-க்கு மேலும் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் என்று அர்த்தம். 

மேலே சொன்னதுபோல, சிறுநீரகம் என்பது மிகப்பெரிய வடிகட்டி அல்ல. மிக நுண்ணிய அளவில்தான் இதன் செயல்பாடு இருக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, இரத்தக் குழாயின் சுவர் பாதிக்கப்படுகிறது. 

இந்தப் பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய் என்பது, சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்களையும் சேர்த்துதான். மிகச்சிறிய இரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தில் இரத்தம் செலுத்தப்படும் போது, இரத்தக் குழாய் தளர்வுற்று, குறுகி, இறுக்கம் அடைகிறது. பாதிக்கப்பட்ட இரத்தக் குழாயால் போதுமான அளவு இரத்தத்தைச் சிறுநீரகத்துக்கு அளிக்க முடியாமல்போகிறது. 

சிறுநீரகத்தினுள் உள்ள நெஃப்ரானில் முடியின் தடிமனைவிட சிறிய இரத்தக் குழாய்கள் உள்ளன. இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால், செயல்திறன் பாதிக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கலாம். 

டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகப் பாதிப்பு 

சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த் தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection (UTI)) என்கிறோம். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து மேல் சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, யுரித்ரா எனப்படும் கீழ் சிறுநீர் குழாயில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பெரும்பாலும், கீழ்நிலை சிறுநீரக மண்டலத்தில் தான் நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

அதிலும் குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் உடலியல் அமைப்பு கிருமி பரவ ஏற்றதாக இருக்கிறது. 

நோய்த்தொற்று கீழ்நிலையில் இருக்கும் போது தாங்க முடியாத வலி இருக்கும். தொற்றானது சிறுநீரகம் வரை பரவினால், பாதிப்பு அதிகமாக இருக்கும். பொதுவாக, பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பாதையில் நுழையும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

சிறுநீர்ப்பாதையை அடையும் கிருமியானது, சிறுநீர்ப் பையை அடைந்து மிக வேகமாகப் பெருக்கம் அடையும். பொதுவாக, நம்முடைய சிறுநீரக மண்டலமே இத்தகைய கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

நம்முடைய செரிமான மண்டலப் பாதையில் காணப்படும் இ-கோலை பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது. 

பொதுவான அறிகுறிகள் 

• சிறுநீர் கழிப்பதில் சிரமம். 

• சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு. 

• மிகச் சிறிய அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல். 

• சிறுநீர் கலங்கலாக இருத்தல். 

• சிறுநீரில் ரத்தம் கலந்து, கோலா நிறத்தில் இருப்பது. 

• சிறுநீரில் நாற்றம். 

• இடுப்புப் பகுதியில் வலி. 

நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அறிகுறிகள் மாறுபடும். 

சிறுநீரகம்: மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஆகியவை. 

சிறுநீர்ப்பை: இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல். 

கீழ் சிறுநீர் குழாய்: சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல். 

பரிசோதனை 

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பது கண்டறியப்படும். 

சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித் தொற்று எனக் கண்டறியப்படும். 

அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், சிறுநீர்ப்பாதை சி.டி., எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து பார்க்கப்படும். 

சிஸ்டோஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து பரிசோதனை செய்யப்படும். 

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்க

தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும். 

மலம் கழித்துவிட்டு ஆசனவாயைக் கழுவும்போது கவனத்துடன் செய்ய வேண்டும். மேல் இருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதவகையில் கவனமாக இருக்க வேண்டும். 

உடலுறவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இது, விரைவில் சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வெளியேற்றப்படும். 

சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic Kidney Disease) 

சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கிறோம். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு. மரபியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். 

இதில், ஒரு வகையான `ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal Dominant Polycystic Kidney Disease (ADPKD)) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. 

பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. 

ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal Recessive Polycystic Kidney Disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம். இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவது. 

கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். 

பெண்களுக்கு இது கர்ப்ப காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். 

சுயமருத்துவம் செய்யாதீர் 

டாக்டர் பரிந்துரை இன்றி, உடல் வலி, தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும். எல்லோருக்கும் எல்லா வகையான மருந்துகளும் ஏற்றுக் கொள்வது இல்லை. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். 

ஆன்டிபயாட்டிக், நெஞ்சு எரிச்சல் மருந்துகள், ஆன்டிவைரல், உயர் ரத்த அழுத்தம் என எந்த ஒரு மருந்தும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம். 

எனவே, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

உடல்பருமன் 

உடல்பருமனால் இதய நோய்கள், மூட்டுவலி வரும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர், அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். 

உடல்பருமனாக உள்ளவர்களுக்கு அதிகப்படியான கொழுப்பு அவர்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிகிறது. இரத்தத்தில், டிரைகிளசரைட் என்ற கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு குறைகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை. 

இவர்கள் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது. 

உடல் எடை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டயட் திட்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, அதிக அளவில் புரதச் சத்துள்ள உணவை எடுக்கின்றனர். 

அதிகப் புரதச்சத்து சிறுநீரகத்தின் வேலைப் பளுவை அதிகரிக்கிறது. 

கார்போஹைட்ரேடுக்குப் பதிலாக, கொழுப்பை எரித்து அதிகப்படியான ஆற்றலைப் பெறும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனம்கூட சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்யலாம். 

எனவே, டாக்டரின் ஆலோசனை பெற்று சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும். 

புகையிலை, மதுப் பழக்கம் 

முன்கூட்டியே மரணம் நிகழ முக்கியமான காரணியாக இருப்பது புகையிலை. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள், கணையப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வர முக்கியக் காரணியாக சிகரெட் புகைத்தல் இருக்கிறது. 

சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றன. சிறுநீரகத்துக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து பாதிப்படையச் செய்கிறது. 

சிகரெட் நச்சுக்கள் இரத்தக் குழாய் சுவரை பாதிப்படையச் செய்து, குறுகலாக்குகிறது. 

ஒருவருக்கு ஏற்கெனவே, உயர் இரத்த அழுத்தம் இருந்து, அதற்கான மருந்து எடுக்கிறார் என்றாலும், சிகரெட் புகைக்கும்போது, அது அந்த மருந்தின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதனால், இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.

க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis) 

சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய முடிச்சு, போன்ற வடிகட்டிகளில் (Glomeruli), நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதன் மூலம், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதுவும் உடனடி மற்றும் நாட்பட்ட சிறுநீரக பிரச்னையாக வெளிப்படலாம். 

முகத்தில் நீர் கோத்தல் (எடிமா), சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் இதன் முக்கிய அறிகுறிகள். 

சிறுநீரகப் பாதையில் தடை 

சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கற்கள் உருவாவதால் இந்த அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு ப்ராஸ்டேட் அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம். 

சிறுநீரகம் காப்போம்  - 2 - பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://ramakavi.blogspot.com/2021/01/save-kidney-part-2.html

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகம் கவனம் - Focus about Sugar Patient Kidney

நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் செயலிழப்பது ஏன்? 

நீரிழிவு நோய் அழைத்து வரும் ஆபத்துகளில் சிறுநீரகச் செயலிழப்பும்  (Kidney failure) ஒன்று. நாட்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரகச் செயலிழப்புக்காக சிகிச்சை பெறுபவர்களில் 60 சதவீதத்தினர் நீரிழிவு நோயாளிகளே. இதற்கு ‘டயபடிக் நெப்ரோபதி’ (Diabetic Nephropathy) என்னும் சிறுநீரகப் பாதிப்புதான் முக்கியக் காரணம். 

சிறுநீரகப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது? 

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நம் உடலுக்குப் பயன்படும் சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் தேவை. இரத்தச் சர்க்கரையும் இன்சுலினும் சரியாக இருக்கும்வரை சிறுநீரகத்தின் வேலை இயல்பாக நடக்கிறது. இன்சுலின் அளவு குறைந்து, இரத்தச் சர்க்கரை அதிகமாகி விட்டால், அந்தச் சர்க்கரை நேரடியாகச் சிறுநீரகத்துக்குத் தான் வருகிறது. அந்த அதிகப்படியான சர்க்கரையைச் சிறுநீரகம் சளைக்காமல் சிறுநீரில் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. 

நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியக் காரணம் இதுதான். ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தால் இந்த வேலைப் பளுவைத் தாங்க முடிவதில்லை. விளைவு? பகலில் வேகமாகவும், இரவில் மெதுவாகவும் சிறுநீரை வடிகட்டும் நெப்ரான்கள் எனும் வடிகட்டிகள் இப்போது இரவிலும் அதிக வேலை பார்க்கின்றன. அதனால்தான் இவர்களுக்கு இரவிலும் சிறுநீர் அதிகமாகப் போகிறது. 

அடுத்ததாக, உடல் கழிவைத் தனியாகப் பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான பணி. ஆனால், நீரிழிவின் பாதிப்பால், சிறுநீரகம் இந்தப் பண்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் தாதுக்களையும்கூடச் சிறுநீரில் வெளியேற்றிவிடுகிறது. அதனால்தான் இவர்களுக்கு நீருக்கான தாகம் அதிகமாக ஏற்படுகிறது. 

அடுத்தகட்டமாக, வடிகட்டிகள் தொடர்ந்து அதிகமாகச் சேதமடைவதால், உடலுக்கு மிகவும் அவசியமான நுண்புரதம் (Micro Albumin) சிறுநீரில் வெளியேறுகிறது.  சாதாரணமாக, இந்தப் புரதம் சிறுநீரில் வெளியேறுவதில்லை. சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கியதும்தான் இது வெளியேறும். நீரிழிவு சிறுநீரகத்தைத் தாக்கியுள்ளது என்பதைத் தெரிவிக்கும் முதல் தடயம் இதுதான். 

இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுத்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திவிட்டால், சிறுநீரகப் பிரச்சினை சரியாகிவிடும். தவறினால், நீரிழிவு சிறுநீரகத்தைத் தொடர்ந்து தாக்கும். அப்போது ‘வெண்புரதம்’ (Macro albumin) வெளியேறும். 

ஒரு லிட்டர் சிறுநீரில் 20 – 200 மி.கி. வரை ஆல்புமின் எனும் புரதம் வெளியேறினால், அது நுண்புரதம். 

சிறுநீரில் ஆல்புமின் 200 மி.கி.க்கு மேல் வெளியேறினால் அதை வெண்புரதம் என்கிறோம். 

வெண்புரதம் வெளியேறத் தொடங்கும்போது இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவுகள் அதிகமாகும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் தடயங்கள் இவை. இப்போதும் சிகிச்சை பெறவில்லை என்றால் ஆபத்து இன்னும் அதிகமாகும். ஒரு கட்டத்தில், ஒட்டுமொத்த வடிகட்டும் வேலையையும் சிறுநீரகம் நிறுத்திவிடும். சிறிதுகூடச் சிறுநீர் பிரிய இயலாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்; ரத்த அளவு குறைந்துவிடும். அதற்குக் கடைசி கட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு (ESRD) என்று பெயர்! 

நீரிழிவு உள்ளவர்கள் அனைவருக்கும் இப்படிச் சிறுநீரகம் பாதிக்கப்படுமா? 

இல்லை. இப்போது சொல்லப் போகிறவர்கள் தாம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். 

* ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாதவர்கள். 

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். 

* ரத்த கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் 

* சிறுநீர்த் தடத்தில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர்கள். 

* புகைபிடிப்பவர்கள். 

* ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு உள்ளவர்கள். 

* நீரிழிவு காரணமாகச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பரம்பரையில் பிறந்தவர்கள். 

* விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள். 

* அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். 

என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

* சிறுநீரகப் பாதிப்பின் தொடக்க கட்டத்தில் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. 

* பாதிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

* விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை குறையலாம். 

* முகம், கணுக்கால், கை, கால் ஆகியவை வீங்கும். 

* காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும் 

* சிறுநீர் கழிவது குறையும். 

* பசி குறைவது, குமட்டல், வாந்தி, களைப்பு, மூச்சுத் திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு, எலும்பு பலவீனம் போன்ற பிற அறிகுறிகள் ஏற்படும். 

இவற்றை வைத்தும் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். என்றாலும், பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வுக்கூடப் பரிசோதனைகளே உதவும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இதயப் பாதுகாப்புக்கும் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்புக்கு பரிசோதனைகள் தீர்வுகள் 

பரிசோதனைகள் 

வழக்கமான ரத்தச் சர்க்கரை பரிசோதனைகள், HbA1C பரிசோதனைகளுடன் சிறுநீரில் புரதப் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், கொலஸ்ட்ரால், இரத்த அயனிகள், ஆல்புமின் கிரியேட்டினின் விகிதம் (ACR) மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) பரிசோதனை, வயிற்றுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்/சி.டி. ஸ்கேன் பரிசோதனை, சிறுநீரகத் திசு ஆய்வுப் பரிசோதனை ஆகியவற்றையும் மேற் கொள்ள வேண்டும். 

சிறுநீரில் புரதம் வெளியேறுவது, ஆல்புமின் கிரியேட்டினின் விகிதம் மாறுவது, இஜிஎஃப்ஆர் அளவு நிமிடத்துக்கு 60மி.லிட்டருக்குக் கீழ் குறைந்து மூன்று மாதங்களுக்கு மேல் நீடிப்பது ஆகியவை சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும். இஜிஎஃப்ஆர் 15க்குக் கீழ் குறைந்துவிட்டால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டது என்று பொருள். 

இன்னொன்று, இஜிஎஃப்ஆர் அளவு சரியாக இருந்து சிறுநீரில் புரதம் வெளியேறுகிறது என்றாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே பொருள். மேற்சொன்ன பரிசோதனைகளை நீரிழிவு உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் பாதிப்பின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து கடிவாளம் போடமுடியும்; சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும். 

என்ன சிகிச்சை உள்ளது? 

இரத்தச் சர்க்கரையை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டியது இந்தப் பாதிப்புக்கான முதல் கடிவாளம். அடுத்ததாக, இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதும் முக்கியம். இந்தப் பாதிப்பின் தொடக்கத்தில் பயனாளிக்கு இரத்த அழுத்தம் சரியாக இருந்தால்கூட இரத்த அழுத்த மாத்திரை தரப்படும். காரணம், இந்த மாத்திரை சிறுநீரகத்தின் சுமையைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும்; சிறுநீரகத்துக்குப் பாதுகாப்பு தரும். 

அத்தோடு புரதமும் கொழுப்பும் குறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் சுமை இன்னும் குறையும். சிறுநீரைப் பிரிக்கும் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள், இரத்த ஊட்ட மாத்திரைகள் உதவும். கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) எனும் இரத்தச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும். மீட்க முடியாத கடைசி கட்ட பாதிப்புக்குச் ‘சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை’ (Kidney Transplantation) தேவைப்படும். 

எப்படித் தடுப்பது? 

நீரிழிவின் ஆரம்பத்திலிருந்தே சரியான உணவுமுறை, இன்சுலின் மருந்து மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகள் மூலம் ரத்தச் சர்க்கரையை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் தேவையான தொடர் கவனிப்பும்தான் சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கும் முக்கிய அரண்கள். குறிப்பாக, HbA1C அளவு 6.5 சதவீதத்துக்குள்ளும் ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. உடற்பருமன் ஆகாது. சுயமருத்துவம் செய்யக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். ஊட்டச்சத்துணவு முக்கியம். 

இதற்கு உணவுக்கட்டுப்பாடு உண்டா? 

கண்டிப்பாக உண்டு. பாதிக்கப்பட்டவர் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம். மருத்துவரின் பரிந்துரைப்படிதான் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த வகையிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடக் கூடாது. உணவில் உப்பின் அளவையும், புரதம் மற்றும் கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, வனஸ்பதி, பருப்பு, பயறு, பட்டாணி வகைகள் வேண்டாம். 

அப்பளம், ஊறுகாய், வத்தல், வடகம், சிப்ஸ், உப்பு பிஸ்கட், கருவாடு, தேங்காய், கீரைகள், கிழங்குகள், கொட்டை உணவுகள், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, மாம்பழம், இளநீர், இறைச்சி, மீன் வேண்டாம். அரிசி, ரவை, அவல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். நாட்டுக் காய்களையும் ஆப்பிள், அன்னாசி, கொய்யா, சீதாப்பழம், பச்சைத் திராட்சை ஆகிய பழங்களையும் சாப்பிடலாம்.

வாய்வுக்குத் தீர்வு என்ன?

அடிக்கடி மக்களை பாதிக்கும் வயிற்றுப் பிரச்னைகளைப் பட்டியலில் `வாய்வுத் தொல்லை’க்கு முக்கிய இடமுண்டு.  மனித உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப்பை, உணவுப்பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாய்வு இருக்க முடியும். நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக் கொண்டு இருப்பதில்லை. அப்படிச் சுற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும்.

எப்படி உணவுப்பாதைக்குக் காற்று வருகிறது? 

பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும் போது உணவுடன் சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும் போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும் போது, புகைபிடிக்கும் போது, சுருட்டு பிடிக்கும் போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும் போது, அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. இந்தக் காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை எதுவும் தருவதில்லை. அளவுக்கு மீறினால்தான் இது ஒரு `வாய்வுப் பிரச்சினை’யாக உருவாகும்.

எது வாய்வுத் தொல்லை? 

பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப்பாதை பிரச்னையை `வாயுத் தொல்லை' (Flatulence) என்கிறது மருத்துவம்.  

வாய்வு எப்படி உருவாகிறது? 

வயிற்றில் வாய்வு உருவாக இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, குடலில் உணவு செரிமானமாகும் போது, அங்கு இயல்பாகவே உள்ள தோழமை பாக்டீரியாக்கள் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறுகின்றன. சாதாரணமாக இந்த வாயுக்களில் துர்நாற்றம் இருப்பதில்லை. மாறாக, குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாகச் செரிமானமாகாது. சில நேரங்களில் `அல்வளி பாக்டீரியா’க்களின் (Anaerobic bacteria) ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும். இந்த இரு நிலைமைகளில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டியது வரும்.

பிற வழிகள் என்னென்ன? 

நம் தினசரி உணவில் பால், பருப்பு, கிழங்கு மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக சேர்க்கும்போது, அடிக்கடி வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, இரைப்பை அழற்சி, இரைப்பைப்புண், குடல்புழுக்கள், பித்தப்பைக் கற்கள், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல்வால் அழற்சி முதலிய நோய்கள் உள்ளபோது வாய்வுத்தொல்லை அதிகமாகும்.

அதுபோல் உணவுப்பாதையில் ஏற்படும் காசநோய், கணையநோய், கல்லீரல்நோய், புற்றுநோய், குடலடைப்பு போன்றவற்றால் குடலியக்கம் தடைபட்டு வாய்வு அதிகரிக்கலாம்.

சிலருக்கு ரத்த அழுத்த மாத்திரைகள், வலிநிவாரணிகள், பேதி மாத்திரைகள்,  நுண்ணுயிர்க்கொல்லி மருந்து கள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் போது அவற்றின் பக்கவிளைவாக வாய்வுத் தொல்லை எட்டிப் பார்ப்பதுண்டு.

மிகத்தவறான உணவுப்பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, முதுமை, உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறைகளும் வாய்வுத் தொல்லையை வரவேற்பவையே.

வாய்வுக்குப் பரிசோதனை உண்டா? 

ஒருவருக்கு அடிக்கடி வாய்வுப் பிரச்னை தொல்லை தருமானால், வாய்வுக்குக் காரணம் உணவா, நோயா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு `இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ (Gastro endoscopy), பேரியம் எக்ஸ்-ரே பரிசோதனை, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan)  மலக்குடல் அகநோக்கல் பரிசோதனை (colonoscopy), மலப்பரிசோதனை, ரத்தப்பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.

வாய்வுத் தொல்லை வராமல் இருக்க என்ன செய்யலாம்? 

வாய்வுத் தொல்லைக்குப் பெரும்பாலும் நம் தவறான உணவுமுறை தான் காரணமாக இருக்க முடியும். நம் அன்றாட உணவு முறைகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் போதும், வாய்வுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

இப்போது எல்லாமே அவசர யுகமாகிவிட்டது. உணவை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அது வாய்வுக்கு ஆகாது. சரியான உணவை, சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள். வாய்வுப் பிரச்னை பாதி சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ஒரேவேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட, சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது. உணவு சாப்பிட்டதும் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடியுங்கள். பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள்.

இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். காற்றடைத்த புட்டிப் பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிப்பதைத் தவிருங்கள்.

மது அருந்துதல், சூயிங்கம் மெல்லுதல், புகைபிடித்தல், சுருட்டு பிடித்தல், வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா பயன்படுத்துதல் போன்ற தீயபழக்கங்களை நிறுத்துங்கள்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கின்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.

துர்நாற்றத்ததுடன் வாய்வு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். அடிக்கடி வாய்வு தொல்லை தருமானால் குடல்புழுவுக்கும் அமீபா கிருமிகளுக்கும் மாத்திரை சாப்பிடலாம்.

வாய்வு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை 

மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள் (பயிறு மற்றும் பருப்பு வகைகளை சூடாக சாப்பிடுப்போது வாயுவாகாது),  எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லெட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.

வாய்வு உள்ளவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டியவை 

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி,  முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, தேநீர். இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வு தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

வாய்வை உண்டாக்காத உணவுகள் 

அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை). கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்.

இரண்டு தவறான நம்பிக்கைகள்! 

ஒன்று, வாய்வு வெளியேற வேண்டுமானால் சோடா குடிக்க வேண்டும் என்று நினைப்பது. சோடா குடித்ததும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி விடுவதாக நம்புகிறோம். இது தவறு. உண்மையில் சோடா குடித்ததும், சோடாவில் கலந்திருக்கும் கரியமில வாயுதான் ஏப்பமாக வெளியேறுகிறது. குடலில் உள்ள வாயு வெளியேறுவதில்லை.

இன்னொன்று, `ஆ.....வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டால் வாயு முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நம்பி பலர் தாங்களாகவே வலிய ஏப்பத்தை வரவழைப்பர். உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? பெரிய ஏப்பம் விடும்போது வாயு வயிற்றுக்குள்தான் செல்கிறது. அடுத்தமுறை இப்படி நீங்களாகவே வலிய ஏப்பம் விடும்போது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று கவனியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும். 

வாய்வு தொல்லைக்கு இயற்கை மருத்துவம் 

*  பெருஞ்சீரகத்தை வெறுமனே வாயிலிட்டு மெல்ல உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அரை டீ ஸ்பூன் பெருஞ்சீரகத்தை 1 கப் சூடான வெந்நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம். நாளொன்றுக்கு 3 கப் குடிக்கலாம். இது வாயு உருவாவதை தடுக்கும்.

*  இளநீர் அருந்தலாம் இளநீரானது செரிமானத்தை அதிகரித்து உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது. இது இரைப்பைக் குழாயில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது.

*  அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு   அதிகரிக்கும்  ஆரோக்கியமான செரிமானத்திற்க்கு உதவுகிறது, வாயு பிரச்சினைகளையும் நீக்குகின்றன.

*  சூப் போடும் போது பூண்டு, கிராம்பு இரண்டையும் தட்டி சூப் போடலாம்,   குழம்பில் பூண்டு, கிராம்பு சேர்க்கவும். 
பூண்டு, கிராம்பு மட்டும் தட்டிப் போட்டு சூப் வைத்து ஒரு நாளைக்கு இருமுறை அல்லது மூன்று முறை குடிக்கவும். பூண்டு வாயு தொல்லையை போக்கும்.

4 - 5 பூண்டை அவித்து காலை உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.

*  சீரகம் அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கப் சூடான வெந்நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம். நாளொன்றுக்கு 3 கப் குடிக்கலாம்.  உணவைச் சாப்பிட்டபின் சிறுது சீரகத்தை மெல்லலாம்.  சீரக வாயு பிரச்சனைக்கு சிறந்த இயற்கை தீர்வு. 

டாக்டரை ஆலோசனை செய்ய வேண்டிய நேரம் 

ஒவ்வொரு நாளும் 10 மற்றும் 20 முறைகளுக்கு இடையில் வாயு வெளியேறுதல் மிகவும் சாதாரணமானது. வாயு தொல்லைக்கு எளிதான வீட்டு வைத்தியம் கொண்டு சிகிச்சையளிக்க முடியும். அப்படியில்லாமல், உங்கள் வழக்கமான வாயுவுடன் பின்வரும் சிக்கல்கள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்:

1. நீடித்த வயிற்று வலி
2. குருதியுடன் மலம்
3. மலத்தின் நிறம் அல்லது மலம் கழித்தல் இடைவெளி மாற்றம்
4. எடை இழப்பு
5. மார்பு வலி
6. தொடர்ந்து அல்லது மீண்டும் மீண்டும் குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல்.

சனி, 16 ஜனவரி, 2021

பற்களை பாதுகாப்பு முறைகள் - Dental care methods

பற்களும் பாதுகாப்பு முறைகளும் ! 

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும்.  'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான்.  

பராமரிப்பும்/பாதுகாப்பும் 

பிரஷ் : ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போது தான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும்.

பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.   

பற்பசை : ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம். 

குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.  எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையால் எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது. ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.  அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும். 

பற்களை எப்படித் துலக்கலாம்? 

பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும். இதேபோன்றே முன்பக்கம், பின்பக்கப் பற்களை துலக்க வேண்டும். உணவு மெல்லும் பகுதியில் மட்டும் பிரெஷைக் கொண்டு ஒரு சுற்று சுற்றுவது போல துலக்க வேண்டும். ஒவ்வொரு பல்லுக்கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொடிகள் போதுமானது. இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும். பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பல் துலக்குவது நல்லது. பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நாக்கை வேகமாக இழுக்காமல் மென்மையாக இழுத்து, நாக்கின் மேல் படிந்துள்ளவற்றை அகற்றலாம். 




இருமுறை பல் துலக்குங்கள் : 

பல் துலக்கும் நுட்பத்தைத் தெரிந்து மிகச் சிறப்பாக பல் துலக்கினாலும் கூட,  90 சதவிகிதம் அளவுக்குத் தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகித கிருமிகள் பெருக்கம் அடைந்து, பற்களைத் தாக்க 12 மணி நேரம் போதுமானது. அப்படி இருக்கும்போது பல் துலக்கும் நுட்பம் தெரியாமல் பல் துலக்குப்பவர்களுக்கு அதன் மூலம் கிருமிகள் அகற்றம் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். இந்த கிருமிகள் பற்களைத் தாக்கும் அளவுக்கு பெருக்கம் அடைய சில மணி நேரங்களே போதுமானது. எனவே, ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும். 

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்கின்றன.

பல் பராமரிப்பு : 

ஃபிளாஸ்ஸிங் : 

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். 

இயற்கை பிரஷ்ஷிங் : 

• இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. 

• அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. 

• சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை போன்றவை பற்களைப் பாதிக்கக்கூடியவை. 

• கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக்காமலேயே பயன்படுத்துகிறோம்.  மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உணவுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்களையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல்லது. 

பளீர் பற்கள் 

• காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. 

• புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்கும். பல்லில் அடிபடுவதாலும் பழுப்பு நிறம் ஏற்படலாம். 

• கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக் கொள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் ஜாக்கிரதை.   

• பளிச்சென்ற பற்கள் கிடைக்க, பல் மருத்துவர்கள் ப்ளீச்சிங் என்ற சிகிச்சை அளிப்பார்கள். வீட்டிலேயேகூட டாக்டரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கு ப்ளீச்சிங் செய்துகொள்ளலாம். 

மவுத் வாஷ் 

மவுத் வாஷ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பற்களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்க என மூன்று வகையான மவுத் வாஷ்கள் வருகின்றன. 

பற்களை வலுவாக்கும் மவுத் வாஷில் ஃப்ளோரைட் கலந்திருக்கும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும். நம் வாயில், கெடுதலை விளைவிக்கும்  நுண் உயிரிகள் இருப்பதுபோல், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளும் உள்ளன. மவுத் வாஷ் செய்யும்போது இந்த கெடுதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுடன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். இதனால் வாய் உலர்ந்துபோகும் தன்மை போன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி மவுத் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டாம்.  

பல் பாதிப்பும் / தீர்வும் 

ஈறு : ஈறுகள்தான் நம் பற்களைப் பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கின்றன. இந்த எலும்பை போர்வை போன்று மூடிப் பாதுகாக்கிறது ஈறு. பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. ஆழம் உள்ளது. இங்கு தான் பற்களைப் பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்த ஆழமானது 3 முதல் 4 மி.மீ. அளவுக்கு செல்வதை 'கம் பாக்கெட்’ என்று சொல்வோம். உணவுத் துகள்கள் அதிக அளவில் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும். உணவுத் துகள்களில் கிருமிகள் வளரும். இதை வெளியேற்ற உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இந்த போராட்டத்தில் உடல் பாதுகாப்பு அமைப்பு தோல்வியுறும் போது கிருமி வேகமாக வளர்ந்து எலும்பை அரிக்கத் தொடங்கும். 50 சதவிகிதம் அளவுக்கு ஈறுகள் ஆழம் அதிகரிக்கும் போது பல் வலுவிழக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்தலாம். பிரச்னையின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. 

வாய் துர்நாற்றம் : வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு வாய் கொப்பளிக்கும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துற்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு. வெறும் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது பிரச்னையைத் தற்காலிகமாக ஒத்திப்போடுமே தவிர, முழுமையான தீர்வைத் தராது. 

பற்கூச்சம் : பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாகப் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டைன் பகுதியில் நிறைய மெல்லிய குழாய்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மூலம் வெப்பம், குளிர் போன்றவை ரத்தநாளங்கள், நரம்புகள் கொண்ட பகுதியான பற்குழிக்குக் கடத்தப்படுவதால் இந்த பற்கூச்சம் ஏற்படுகிறது. முறையற்ற வகையில் பற்களைத் தேய்ப்பது, நீண்ட நேரம் பல் தேய்ப்பது போன்றவற்றால் எனாமல் தேயவும்,  ஈறுகளும் பற்களில் இருந்து விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஈறுநோய்கள் ஏற்படும்போது ஈறுகளில் வீக்கம், பல் உடைதல், தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் போன்றவற்றாலும் கூச்சம் ஏற்படலாம். எதனால் பற்கூச்சம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். 

ஆயில் புல்லிங் அவசியமா? 

இயற்கையான நல்லெண்ணெயில் மட்டுமே வாய் கொப்பளிப்பு செய்யப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம். ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங் செய்வதில் தவறு இல்லை. 

வரிசையும்/அமைப்பும் ஞானப்பல் : 

விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில் முளைக்கும் பல்லுக்கு ஞானப்பல் என்று பெயர். ஒருகாலத்தில் மனிதனுக்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டையாடுவது, எதையும் பச்சையாகவே சாப்பிடுவது என இருந்ததால் அத்தனைப் பற்கள் தேவைப்பட்டன. இன்று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில் 28 பற்களாக குறைந்து விடலாம். இந்த ஞானப் பற்கள் வளரப் போதுமான இடம் இல்லாததால் மற்ற பற்களில் முட்டிக் கொண்டு பற்களின் வரிசையையே பாதிக்கச் செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஞானப் பற்களை அகற்றி விடுவது நல்லது. 

தற்போது தூக்க நிலையில் ஞானப் பற்களை அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய நபருக்கு, மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு நீக்க ஊசியை செலுத்தி பற்கள் பிடுங்கப்படுகின்றன. இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்காது. விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும். 

'கிளிப்’ பற்றி கிளிக்! 

பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது. வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன்பாகவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்று நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன. யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரியவரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும். 

கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்க வேண்டும். 

அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை சரிசெய்ய வேண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம்  கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும். 

ஸ்லீப் ஆப்னியா : 

தூக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு தாடை மற்றும் பற்களின் அமைப்பும் ஒரு காரணம். குறட்டை விடுவதற்கும் இது ஒரு காரணம். ஒருவருக்குப் பற்கள் தேய்வதால் தாடையின் உயரம் குறைந்து, தூங்கும் போது நாக்குக்கு போதுமான இடமும் குறைந்து, நாக்கு தொண்டைக்கு சென்று மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும். தாடையின் உயரத்தைக் கூட்டி, சில வகை கிளிப் போடுவதன் மூலம் குறிப்பிட்ட வகை 'ஸ்லீப் ஆப்னியா’வை சரி செய்யலாம்.

பல் சிகிச்சை முறைகள் 

பல்சொத்தை : 

பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பற்கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என்பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும்.   

பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொத்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தால் அதற்கு சாதாரண ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொடர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து பில்லிங் செய்யப்படும். 

சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென்றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால். 

பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல்லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தையானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றிவிட்டு, வந்த பாதையை சுத்தம் செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொருளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால். 

ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும். 

மரம் பச்சையாக இருக்கும் போது தான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்து விட்டால், வளைக்கும் போது ஒடிந்துவிடும். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றி விடுவதால் பல்லுக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்து போய் நொறுங்கிவிடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட்டுக் கொள்ளலாம். 

சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றிவிடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும். 

செயற்கை பல் : 

ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட்ட பயனற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும் இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். முன்பு பிரிட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த முறையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாதபடியான செயற்கைப் பல் கட்டப்பட்டது. 

பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதால், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்த முடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படும்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம். 

இம்ப்ளான்ட்

இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போடும் அமைப்பு இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்படும்  கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம். 

அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம்.   

தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன்மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம்பிளான்ட் போடும் இடத்தில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத்தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும். 

ஒரே நாளில் பல் கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோசனைகள், பரிசோதனைகள், வடிவமைப்பு போன்றவற்றை முடிவு செய்துவிட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள்ள பல் செட் அதில் பொருத்தப்படும். 

டூத் லேமினேட் : 

திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான். 

லேசர் சிகிச்சைகள் : 

ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத்தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப்பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும். 

எலும்பு கிராஃப்ட்டிங் : 

சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயிருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம்பிளான்ட் செய்யலாம் என்றால், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப்படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை... 

குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்துவரிடம் குழந்தையை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும். 

பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச்னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், சொத்தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே அதை சரிப்படுத்திவிட முடியும். 

பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற்றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துவிடலாம். 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுகளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடனடியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்து கொள்ள வேண்டும். 

லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

பற்களின் பகைவன் 

இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. 

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும்.  வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம். 

புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும். 

புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும். 

செய்யக்கூடியவை :

• சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும், 

• தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும் 

• புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள். 

• போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள். 

• உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடுங்கள். 

• ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள். 

• ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

• குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள். 

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள். 

செய்யக் கூடாதவை : 

• எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’ வெனப் பல்லைக் கடிக்காதீர்கள் 

• நகத்தைக் கடிக்கக் கூடாது.  அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும். 

• பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள். 

• பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம். 

மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம். 

தவிர்க்க வேண்டியவை: 

கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும். 

நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு! 

பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி, விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள். 

'ஷாக்’லெட் : பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில்  ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது. 

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் : சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம். 

உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.